ஹனிமூனில் கணவர் கொன்ற புதுப்பெண்-திருமணத்திற்கு முன்பே எச்சரித்ததாக தகவல்
1 min read
Newlywed killed by husband on honeymoon – Reportedly warned before marriage
11.7.2025
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த தொழிலதிபர் ராஜா ரகுவன்ஷி(வயது 29). இவருக்கும் சோனம்(வயது 24) என்ற பெண்ணுக்கும் கடந்த மே மாதம் 11-ந்தேதி திருமணம் நடைபெற்றது. புதுப்பெண் சோனத்தின் தந்தையும் இந்தூரில் பர்னிச்சர் தொழில் செய்து வருகிறார்.
புதுமணத்தம்பதியான ராஜாவும் , சோனமும் ஹனிமூன் செல்ல திட்டமிட்டுள்ளனர். இதன்படி ஹனிமூனுக்கு இருவரும் கடந்த மாதம் 20-ந்தேதி மேகாலயா சென்றுள்ளனர். மேகாலயாவில் பல்வேறு பகுதிகளை சுற்றிப்பார்த்த தம்பதி, அங்குள்ள நொங்ரியாட் என்ற கிராமத்தில் தங்கிய நிலையில், 23-ந்தேதிக்கு பிறகு இருவரும் தங்கள் உறவினர்களை தொடர்பு கொண்டு பேசவில்லை. அவர்களின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
இதனால், சந்தேகமடைந்த குடும்பத்தினர் இதுகுறித்து மத்திய பிரதேச போலீசில் புகார் அளித்தனர். பின்னர் இது குறித்து மேகாலயா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. இந்த தம்பதி கடைசியாக தங்கிய கிராமத்தில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ள பள்ளத்தாக்கில், கடந்த 2-ந்தேதி ராஜாவின் சடலத்தை போலீசார் கண்டெடுத்தனர்.
அவரது உடலில் கத்திக்குத்து காயங்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. அதே சமயம் காணாமல் போன ராஜாவின் மனைவி சோனம் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. இந்த சம்பவம் தொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்த போலீசார், இதில் தொடர்புடையவர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் அடிப்படையில், ஆகாஷ் ராஜ்புட்(19), விஷால் சிங் சவுகான்(22) மற்றும் ஆனந்த் குர்மி ஆகிய நபர்களை போலீசார் கைது செய்தனர்.
மேலும் இந்த வழக்கு தொடர்பாக ராஜ் குஷ்வாஹா என்ற முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து, உத்தர பிரதேச மாநிலம் காசிபூரில் உள்ள நந்த்கன்ஜ் காவல் நிலையத்தில் சோனம் சரணடைந்தார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
சோனத்தின் தந்தை நடத்தி வரும் நிறுவனத்தில் ராஜ் குஷ்வாஹா பணியாற்றி வந்துள்ளார். தனது தந்தையின் நிறுவனத்தை சோனம் கவனித்து வந்த நிலையில், அவருக்கும் ராஜுக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. ஆனால் இந்த காதலுக்கு குடும்பத்தினர் சம்மதம் தெரிவிக்காத நிலையில், சோனத்தின் பெற்றோர் அவரை ராஜா ரகுவன்ஷிக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்.
திருமணத்திற்கு பிறகும் தனது காதலரை மறக்க முடியாத சோனம், ஹனிமூன் சென்ற இடத்தில் தனது காதலருடன் சேர்ந்து திட்டமிட்டு, கூலிப்படையை ஏவி ராஜா ரகுவன்ஷியை கொலை செய்துள்ளார். கொலை செய்த பிறகு ராஜாவின் உடலை பள்ளத்தாக்கில் வீசியுள்ளனர். இந்த சம்பவத்தில் சோனம், அவரது கள்ளக்காதலன் ராஜ் மற்றும் கூலிப்படையை சேர்ந்த 3 பேர் என மொத்தம் 5 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், உயிரிழந்த ராஜா ரகுவன்ஷியின் அண்ணான் விபின் ரகுவன்ஷி, இந்த சம்பவம் தொடர்பாக பகீர் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது, திருமணத்திற்கு முன்பே சோனம் தனது தாயிடம் ராஜ் என்ற நபரை காதலிப்பது குறித்து கூறியுள்ளார் என்றும், ஆனால் ஒரே சமூகத்திற்குள் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தி சோனத்தை ராஜாவிற்கு திருமணம் செய்து வைத்துள்ளனர் என்றும் விபின் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி சோனம் தனது தாயிடம், “திருமணத்திற்கு நான் சம்மதிக்கிறேன். ஆனால் அந்த நபரை நான் என்ன செய்யப்போகிறேன் என்று பொறுத்திருந்து பாருங்கள். இனி நிகழப்போகும் பின்விளைவுகளுக்கு நீங்கள்தான் பொறுப்பு” என்று கூறி எச்சரித்துள்ளார். ஆனால் ராஜாவை சோனம் கொலை செய்வார் என்று யாரும் நினைத்து கூட பார்க்கவில்லை என்று சோனத்தின் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.