இஸ்ரேல்-ஈரான் மோதலால்; இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்
1 min read
Israel-Iran conflict: Petrol, diesel prices likely to rise in India
16.6.2025
இஸ்ரேல்-ஈரான் இடையே கடுமையான போர் சூழல் ஏற்பட்டு உள்ளது. இந்த நாடுகளுக்கு இடையே புவியியல் ரீதியாக எல்லைகளை இந்தியா பகிர்ந்து கொள்ளவில்லை என்றாலும், அந்த நாடுகளின் மோதல் இந்தியாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.தற்போதைய நிலையில் இந்தியா, இரு நாடுகளுக்கும் இடையே ஒரு சமமான நிலைபாட்டை கொண்டு உள்ளது. எந்த நாடுக்கும் ஆதரவாக இல்லை.
இஸ்ரேல்-ஈரான் மோதல் எதிரொலியாக இந்தியாவில் கச்சா எண்ணெய் இறக்குமதி பாதிக்கும். இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
இந்தியாவை பொறுத்தவரை ஒரு ஆண்டின் கச்சா எண்ணெய் தேவை 251 மில்லியன் டன் ஆகும். அதில் 12 சதவீதம் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகிறது. மீதமுள்ள 88 சதவீதமான 221 டன் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இந்த இறக்குமதியில் 100 சதவீதம் என்று கணக்கிட்டால், அதில் அதிகபட்சமாக 38 சதவீதம் ரஷியாவிடம் சலுகை விலையில் வாங்குகிறது. 2 சதவீதம் அமெரிக்காவிடம் இருந்து வாங்குகிறது. மீதமுள்ள 60 சதவீதம் முழுவதும் அரபு நாடுகளில் இருந்து ஹார்மூஸ் ஜலசந்தி வழியாக தான் இந்தியாவின் துறைமுகத்திற்கு வருகின்றன.
அதுமட்டுமின்றி போர் முழு அளவில் தொடங்கி விட்டால் இந்தியாவிற்கு ஈரான் மட்டுமின்றி மற்ற அரபு நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் பெறுவதில் சிக்கல் இருக்கும். மேலும் அவர்கள் விலையையும் அதிகரித்து விடுவார்கள். தற்போது ஒரு பேரலுக்கு 77 டாலராக இருக்கும் கச்சா எண்ணெய் விலை 130 டாலர் வரை உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதனால் இந்தியாவில் பெட்ரோல்-டீசல் மற்றும் கியாஸ் விலை கடுமையாக அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே இந்தியா இப்போதே அதற்கான முன்னேற்பாடுகளை தொடங்கி உள்ளது.
ஒருவேளை அரபு நாடுகளில் இருந்து சிக்கல் ஏற்பட்டால் ரஷியாவிடம் இருந்து கூடுதல் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதற்காக ரஷியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக அதிகாரி ஒருவர் கூறினார்.
மேலும் அவர் கூறும்போது, இஸ்ரேல்-ஈரான் மோதலால் ஹார்மூஸ் கடல் பாதையில் பிரச்சினை ஏற்பட்டு கச்சா எண்ணெய் இறக்குமதி தடைபடும். இதனால் இந்தியாவில் பெட்ரோல், டீசல், எரிவாயு விலை கடுமையாக உயர்வு ஏற்படும். மேலும் 92 லட்சம் இந்தியர்கள் அரபு நாடுகளில் பணியாற்றி வருகிறார்கள். அவர்களும் அங்கு வேலையிழந்து ஊர் திரும்ப வேண்டிய சூழல் ஏற்படலாம் என்றார்.