June 27, 2025

Seithi Saral

Tamil News Channel

தென்காசி அருகே அரசு பஸ் சக்கரம் கழன்று ஓடியது- 5 மாணவர்கள் படுகாயம்

1 min read

Government bus wheel falls off near Tenkasi – 5 students seriously injured

21/6/2025
தென்காசி அருகே இடைகால் பகுதியில் அரசு பஸ்சின் பின் சக்கரங்கள் கழன்று ஓடிய விபத்தில் 5 மாணவர்கள் உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

மதுரையில் இருந்து ஒரு அரசு பஸ் குற்றறாலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்தப் பஸ்சை விரு துநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பகுதியைச் சேர்ந்த சங்கரன் என்பவர் ஓட்டிச் சென்றார். இந்த பஸ்சில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் உள்பட சுமார் 87 பேர் பயணம் செய்தனர்.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே இடைகால் தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது பஸ்ஸின் பின்பக்க இரு சக்கரங்களும் பஸ்சில் இருந்து தனியாக கழன்று சாலையில் சிறிது தூரம் ஓடியது.

இதனால் நிலைதடுமாறிய பஸ்சின் பின்பகுதி சாலையில் சிறிதுதூரம் தரதரவென இழுத்து செல்லப்பட்டது. இதில் பஸ்சின் பின்பகுதியில் அமர்ந்த பயணிகள் தூக்கி வீசப்பட்டனர். உடனடியாக டிரைவர் பிரேக் பிடித்ததால் பலத்த சத்தத்துடன் பஸ் நின்றது.

இந்த விபத்தில் பள்ளி மாணவர்கள் 4 பேர். நர்சிங் கல்லூரி மாணவி ஒருவர் உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர். மேலும் சில பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும், ஆய்க்குடி போலீசார் மற்றும் நெடுஞ்சாலைத்துறை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காயம் அடைந்த பயணிகளை மீட்டு சிகிச்சைக்காக கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மற்ற பயணிகளை மாற்று பஸ்சில் ஏற்றி அனுப்பிவைத்தனர். மேலும் அந்த சாலையில் போக்குவரத்தை ஒழுங்கு செய்தனர். இந்த விபத்தில் மாணவர் சாமி என்பவருக்கு கால் முறிவு ஏற்பட்டு, சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. படுகாயம் அடைந்த ஐ.டி.ஐ. மாணவர் கவின் கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும்
பள்ளி மாணவர்கள் சக்திவேல், ஹரிஹரன் மற்றும் நர்சிங் கல்லூரி மாணவி பானுப் பிரியா, ராஜபாளையத்தை சேர்ந்த முதியவர் முனியசாமி ஆகியோர். கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

இதுகுறித்து ஆய்க்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் நடைபெற்ற நேரத்தில் அந்த பஸ்சுக்கு பின்னால் வேறு வாகனங்கள் எதுவும் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.