75 வயதானால் மற்றவர்களுக்கு வழி விடுங்கள்- ஆர்.எஸ்.எஸ். தலைவர் பேச்சால் பரபரப்பு
1 min read
Make way for others when you turn 75 – RSS leader’s speech creates a stir
11.7.2025
மராட்டிய மாநிலம் நாக்பூரில் நடந்த ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத் பேசுகையில், “தலைவர்கள் 75 வயதில் ஓய்வு பெற வேண்டும். தாங்களாகவே ஒதுங்கி நின்று மற்றவர்களை உள்ளே வரவிடுங்கள்” என்று கூறினார்.
மோகன் பகவத்தின் இந்த பேச்சு தற்போது அரசியல் களத்தில் பல்வேறு விவாதங்களுக்கு களம் அமைத்துள்ளது. ஏனென்றால், அவரும் பிரதமர் மோடியும் 2025 செப்டம்பரில் 75 வயதை எட்டுவார் என்பதால், அவரது இந்த கருத்து எதிர்கட்சிகளுக்கு மோடியின் ஓய்வு குறித்து கேள்வி கேட்க தூண்டி இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
பிரதமர் மோடிக்கு இப்போது 74 வயது ஆகிறது. ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகத்திற்கு மோடி வந்த போதும் அவரது ஓய்வு குறித்த விவாதங்கள் எழுந்தன.
இந்நிலையில் சிவசேனா கட்சியின் எம்.பி.யான சஞ்சய் ராவத் கூறுகையில், எல்.கே.அத்வானி, முரளிமனோகர் ஜோஷி மற்றும் ஜஸ்வந்த்சிங் போன்ற தலைவர்களை 75 வயது நிரம்பிய பிறகு ஓய்வு பெற பிரதமர் மோடி கட்டாயப்படுத்தினார். இப்போது அதே விதியை அவர் தனக்கும் பயன்படுத்துகிறாரா? என்று பார்ப்போம்” என்று கூறினார்.
காங்கிரஸ் தலைவர் அபிஷேக் மனு சிங்வி கூறுகையில், “நடைமுறை இல்லாமல் பிரசங்கம் செய்வது எப்போதும் ஆபத்தானது. 75 வயது வரம்பைப் பயன்படுத்தி மார்க்தர்ஷக் மண்டலுக்கு கட்டாய ஓய்வு வழங்கப்பட்டது என்பது கொள்கைக்கு புறம்பானது, ஆனால் தற்போதைய ஆட்சி இந்த விதியிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்பதற்கான அறிகுறிகள் தெளிவாக உள்ளன” என்று கூறினார்.
முன்னதாக, மோடி ஜி 2029 வரை தொடர்ந்து தலைமை தாங்குவார். ஓய்வு வதந்திகளில் எந்த உண்மையும் இல்லை” என்று மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, கடந்த மே 2023 இல் தெளிவுபடுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.