ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா
1 min read
Aadi Amavasya festival at the Arul Chairman Arunachala Swamy Temple
24.7.2025
ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோவில் தென் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில் ஆகும். இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி அமாவாசை திருவிழா 12 நாட்கள் சிறப்பு நிகழ்ச்சியுடன் நடைபெறும். இந்த ஆண்டு ஆடி அமாவாசை திருவிழா கடந்த 15-ந் தேதி செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் தினமும் இரவு சுவாமி வெவ்வேறு அலங்காரத்தில் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ஆடி அமாவாசையான இன்று திருவிழாவின் சிகர நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. பகல் 1 மணிக்கு சுவாமி உருகு பலகையில் கற்பூர விலாசம் வரும் காட்சி நடந்தது. அதனைத் தொடர்ந்து சுவாமிக்கு பால்,தயிர், மஞ்சள்,பன்னீர்,சீவக்காய், இளநீர் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
மாலை 5 மணிக்கு விலாமிச்சை வேர் சப்ரத்தில் சேர்ம திருக்கோலத்தில் சுவாமி எழுந்தருள்கிறார். இரவு 11 மணிக்கு சாமி கற்பகப் பொன் சப்பரத்தில் எழுந்தருளி கோவில் வளாகத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்.
நாளை வெள்ளிக்கிழமை காலை 4 மணிக்கு வெள்ளை சாத்தி தரிசனம், காலை 9 மணிக்கு பச்சை சாத்தி அபிஷேகம், பகல் 1 மணிக்கு பச்சை சாத்தி தரிசனம், மாலை 6 மணிக்கு ஏரல் சவுக்கை முத்தாரம்மன் கோவில் பந்தலில் தாக சாந்தி, இரவு 10:30 மணிக்கு சுவாமி மூலஸ்தானம் வந்து சேரும் ஆனந்த காட்சி, திரு கற்பூர தீப தரிசனம் நடைபெறுகிறது.
சனிக்கிழமை காலை 8 மணிக்கு தீர்த்தவாரி நடைபெறுகிறது. பகல் 12.30 மணிக்கு அன்னதானம், பிற்பகல் 3 மணிக்கு ஆலிலைச்சயன அலங்காரம், மாலை 6.00 மணிக்கு ஊஞ்சல் சேவை, இரவு 9 மணிக்கு திருவருள் புரியும் மங்கல தரிசனம் நடைபெறுகிறது.