June 4, 2026

Seithi Saral

Tamil News Channel

சிறப்பு எஸ்.ஐ. கொலை: தலைவர்கள் கண்டனம்

1 min read

Special SI murder: Leaders condemn

6.8.2025
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் அதிமுகவைச் சேர்ந்த மகேந்திரன். முன்னாள் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினரான இவருக்கு உடுமலை அருகேயுள்ள குடிமங்கலம் மூங்கில்தொழுவு பகுதியில் தோட்டம் உள்ளது. தென்னை மரங்கள் அதிகமுள்ள இந்த தோட்டத்தைப் பராமரிக்கும் பொறுப்பில் மூர்த்தி என்பவரின் குடும்பம் அங்கேயே தங்கியிருந்துள்ளது.
இந்நிலையில் தோட்டத்தில் பணியற்றி வந்த தந்தை , மகன் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதுபற்றி பக்கத்துத் தோட்டத்தில் இருந்தவர்கள், 100 க்கு தகவல் தெரிவித்துள்ளனர். அப்போது ரோந்துப் பணியில் இருந்த குடிமங்கலம் காவல் நிலைய சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் (SSI) சண்முகவேல் அங்கு வந்துள்ளார்.
அவர் சண்டையை விலக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. அப்போது, மதுபோதையில் இருந்த தந்தை, மகன்கள் சிறப்பு எஸ்.ஐ. சண்முகவேலை அரிவாளால் வெட்டிக்கொலை செய்தனர். மேலும் மற்றொரு காவலரையும் வெட்ட முயன்றதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் தந்தை-மகன் இருவரும் தப்பி ஓடிவி்ட்டனர்.
தலைமறைவான தந்தை மூர்த்தி, மகன்கள் தங்கப்பாண்டியன் மற்றும் மணிகண்டனை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இந்த நிலையில், தந்தை – மகன் இருவரும் எஸ்.பி அலுவலகத்தில் சரண் அடைந்துள்ளனர். தலைமறைவு ஆகியுள்ள மணிகண்டனை போலீசார் தேடி வருகிறார்கள்.

போலீஸ் சிறப்பு எஸ்.ஐ., கொலை சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் எக்ஸ் தள பதிவில் கூறியதாவது:-

தமிழகத்தில் எங்கே இருக்கிறது சட்டம் ஒழுங்கு? திருப்பூர் மாவட்டத்தில் குடும்பத் தகராறை விசாரிக்கச் சென்ற எஸ்.ஐ. சண்முகவேல் படுகொலை செய்யப்பட்டதாகவும், கோவை காவல் நிலையத்தில் எஸ்.ஐ. அறையில் ஒருவர் தூக்கிட்ட நிலையில் உயிரிழப்பு எனவும் செய்திகள் வருகின்றன.

காவல் நிலையத்தில் கூட இல்லாத சட்டம் ஒழுங்கிற்கு என்ன பதில் வைத்துள்ளார் முதல்வர்? விசாரிக்க செல்லும் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை என்பதையும், காவல் நிலையத்திலேயே ஒருவர் தூக்கிட்டுக் கொள்ளும் அளவிற்கு அலட்சியமாக இருந்தது என்பதையும் எப்படி எடுத்துக் கொள்வது?

மு.க.ஸ்டாலின் செய்யும் அத்தனை அரசியலும் இந்த சீர்கெட்ட சட்டம் ஒழுங்கைப் பற்றி யாரும் பேசக் கூடாது என்பதற்கான Diversion Tactic டைவர்சன் டாசிட்டிக் மட்டுமே!

ஆனால், மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்- அவர்களுக்கு தேவை பாதுகாப்பான தமிழகம்! மக்களைக் காக்க, தமிழகத்தை மீட்க ஒரே வழி, இந்த கையாலாகாத திமுக அரசை வீட்டுக்கு அனுப்புவதே! மேற்கூறிய வழக்குகளில் முறையான விசாரணை நடத்திடவும், குற்றவாளிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும் ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.

தமிழக பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று இரவு சீருடையில் இருக்கும்போதே போலீஸ் சிறப்பு எஸ்.ஐ., சண்முகவேல் கொல்லப்பட்டு உள்ளார். நமது சமூகம் அழிவு பாதையை நோக்கி சென்று கொண்டு இருப்பதற்கான அறிகுறியாகும்.

குற்றவாளிகள் அல்லது ஒரு சாதாரண மனிதர் கோபத்தில் ஒரு போலீஸ்காரர் மீது கொடூர தாக்குதல் நடத்தி, பொது இடத்தில் கொல்லத் தூண்டுவது எது? அவர்களின் மனசாட்சிப்படி, இவ்வளவு பெரிய குற்றத்திலிருந்து தப்ப முடியாது என்பது நன்கு தெரியும். ஆனாலும் அதை செய்கிறார்கள் ஏன்?அதிகாரத்தில் உள்ள அரசாங்கத்தாலும், சில்லறை விற்பனையாளர்களாகச் செயல்படும் அரசாங்க கடைகளாலும், அதிக போதை உள்ள மதுக்களால் சாத்தியமாக்கப்பட்டது.

போதைப்பொருட்களின் பயன்பாடு அதிகரித்தல் உள்ளிட்ட காரணங்களால் கிராமம் முதல் நகர்ப்புறம் வரை எல்லா இடங்களிலும் சட்டம் ஒழுங்கு மோசமடைந்து வருகிறது.குறிப்பாக கீழ் மட்டங்களில் உள்ள துணை ஆய்வாளர் மற்றும் அதற்குக் கீழே பொறுப்பு வகிப்பவர்கள் உட்பட அனைத்து போலீசாரும் தொழில்நுட்ப ரீதியாக ஆயுதம் ஏந்தியிருக்க வேண்டிய நேரம் இது.

டேசர் துப்பாக்கிகள், பாடி கேமராக்கள், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கிகள் கொள்முதல் அதிகரித்தல், சிறந்த ரோந்து கார்கள், மிக முக்கியமாக, நீண்ட காலமாக நிலுவையில் உள்ள காலியிடங்களை நிரப்ப வேண்டும். போலீசார் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளுக்கு ‘நண்பர்’ இல்லாமல் தனியாகச் செல்லக்கூடாது.

உயர்மட்டத்தில் எடுக்கப்படும் தவறான கொள்கை முடிவு, கீழ்மட்டத்தில் உள்ள சாமானிய மக்களை நேரடியாக பாதிக்கின்றன. இது நமது தூங்கிக்கொண்டிருக்கும் தமிழக உள்துறை அமைச்சரான, நமது முதல்-அமைச்சருக்கும் ஒரு எச்சரிக்கை மணியாக இருக்கும் என்று நம்புகிறேன்.

இவ்வாறு அண்ணாமலை அதில் பதிவிட்டுள்ளார்.

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே குடிபோதையில் தகராறில் ஈடுபட்டோர்களை விலக்கச் சென்ற காவல் ஆய்வாளர் சண்முகசுந்தரம் அவர்கள் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட செய்தி மனதை பதைபதைக்க வைக்கிறது. உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மீளாத் துயரைக் கடந்து வர இறைவன் அவர்களுக்கு துணை நிற்கட்டும்!

திமுக ஆட்சியில் கட்டுக்கடங்காமல் பெருகிவரும் குடிப்பழக்கத்தாலும் போதைப்பொருள் புழக்கத்தாலும் பொது மக்களுக்கு தான் பாதுகாப்பில்லை என்று பார்த்தால், மக்களைக் காக்கும் காவல்துறையினரின் உயிருக்கும் உத்திரவாதமில்லை என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. பொதுவெளியில் மது அருந்துவதும், மதுபோதையில் மற்றவர்களைத் தொந்தரவு செய்வதும், அதைத் தட்டிக்கேட்பவர்களைக் கொலை செய்வதும் தற்போது சர்வ சாதாரணமாகிவிட்டது மக்களைக் கொதிப்படையச் செய்துள்ளது.
எனவே, தங்கள் நிர்வாகக் குளறுபடிகளால் உயிரிழப்பவர்களுக்கு இழப்பீட்டு தொகையைக் கொடுத்து மக்களை மடைமாற்றி விடலாம் என்ற திமுகவின் தப்புக்கணக்கு இனி செல்லுபடியாகாது. சட்டம் ஒழுங்கை சீர்படுத்த முடியாமல் அனைத்துப் பிரிவினரையும் அவதிக்குள்ளாக்கும் இந்த திமுக அரசின் ஆட்சிக்காலம் எப்போது முடியும் என மக்கள் பிரார்த்திக்கத் துவங்கிவிட்டனர். வரும் சட்டமன்றத் தேர்தலில் மக்களின் அனைத்து வேண்டுதல்களும் பலிக்கும்! திமுக ஆட்சி ஒழியும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *