தூத்துக்குடி: பெண்ணை தாக்கி தங்க செயின் பறிப்பு: 2 பேருக்கு வலைவீச்சு
1 min read
Police nab 2 for assaulting young woman and snatching her gold chain
தூத்துக்குடி மாவட்டம், மணப்பாடு கிராமத்தை சேர்ந்த பென்சிகர் மனைவி தமிழரசி (வயது 35). இவர் நேற்று முன்தினம் மதியம் மணப்பாட்டில் இருந்து உடன்குடிக்கு உறவினர் சகாயசாமியுடன் பைக்கில் சென்று கொண்டிருந்தார். உடன்குடி அருகே சென்று கொண்டிருந்தபோது, 2 வாலிபர்கள் திடீரென வழிமறித்து பைக்குடன் சேர்த்து அவர்களை கீழே தள்ளி விட்டுள்ளனர்.
இதில் பைக்குடன் நிலைகுலைந்து கீழே விழுந்து காயமடைந்த தமிழரசி கழுத்தில் கிடந்த 2½ சவரன் தங்க சங்கிலியை பிடித்து அந்த வாலிபர்கள் இழுத்துள்ளனர். தமிழரசியும், உறவினரான மற்றொரு பெண்ணும் அந்த வாலிபர்களுடன் போராடினர். ஆனால் அந்த 2 பேரும் அவரது கழுத்தில் கிடந்த 2½ சவரன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.
பின்னர் அக்கம் பக்கத்தினர் துணையுடன் தமிழரசி உடன்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் குலசேகரன்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் யேசுராஜசேகரன் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். தங்க செயின் வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்களையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த வழிப்பறி சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.