June 22, 2026

Seithi Saral

Tamil News Channel

நெல்லையில் வங்கி பெண் ஊழியர் வெட்டிக்கொலை

1 min read

Female bank employee hacked to death in Nellai

17.5.2026
திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி அருகே உள்ள ஆழ்வாநேரி பகுதியைச் சேர்ந்தவர் முத்துமாலை (வயது 35). இவர் ஒரு தனியார் வங்கியில் ஊழியராகப் பணிபுரிந்து வந்தார். இவருடைய கணவர் பெங்களூருவில் வசித்து வரும் நிலையில், தம்பதியினருக்கு இடையே கடந்த சில காலமாகவே கடுமையான குடும்ப கருத்து வேறுபாடு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இதன் காரணமாக, முத்துமாலை தனது கணவரைப் பிரிந்து கடந்த 3 மாதங்களுக்கு முன்புதான் பாளையங்கோட்டை தியாகராஜநகர் பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தனது 7 வயது மகளுடன் தனியாகக் குடியேறி வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் சனி அன்று இரவு முத்துமாலை தனது பைக்கில் தியாகராஜநகர் 9-வது தெற்கு தெருவில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் அவரை ரகசியமாக பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் 2 பேர், திடீரென முத்துமாலையின் வாகனத்தை வழிமறித்து நிறுத்தியுள்ளனர். அப்போது அவர் நிலைதடுமாறி நிற்பதற்குள், தங்களது கைகளில் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து முத்துமாலையை சரமாரியாக வெட்டத் தொடங்கினர். இதில் தலை மற்றும் உடல் பகுதிகளில் பலத்த வெட்டுக்காயங்கள் ஏற்பட்டு, ரத்த வெள்ளத்தில் சரிந்த முத்துமாலை சம்பவ இடத்திலேயே துடிதுடித்துப் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த கொடூர வெறிச்செயலில் ஈடுபட்ட மர்ம நபர்கள் 2 பேரும் உடனடியாக அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இந்த கொலைச் சம்பவம் குறித்து அப்பகுதி பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில், நெல்லை மாநகர போலீஸ் துணை கமிஷனர் விஜயகுமார் தலைமையில், பெருமாள்புரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர விசாரணை நடத்தினர். பின்னர் முத்துமாலையின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஹைகிரவுண்ட் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலைக்கான பின்னணி என்ன என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை. எனினும் கணவனுடன் ஏற்பட்ட குடும்பப் பிரச்சினை காரணமாக இந்தக் கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்ற பல்வேறு கோணங்களில் பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

குற்றவாளிகளை விரைந்து பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் தியாகராஜநகர் 9-வது தெற்கு தெரு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் கைப்பற்றி, கொலையாளிகளின் அடையாளங்களை ஆய்வு செய்து வருகின்றனர். நெல்லையில் ஆட்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் நடந்த இந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *