June 16, 2026

Seithi Saral

Tamil News Channel

போர் முடிவுக்கு வந்தது: போரில் கொல்லப்பட்ட ஈரானியத் தலைவர்கள் விவரம்

1 min read

The war has come to an end: Details of Iranian leaders killed in the war.

15.6.2026
2026 பிப்ரவரி மாத இறுதியில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் ஈரானுக்கு எதிராகத் தொடங்கிய கூட்டு ராணுவ நடவடிக்கை , தற்போது இரு நாடுகளுக்கு இடையேயான அமைதி ஒப்பந்தத்தின் மூலம் இன்று ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது. இந்தக் கடுமையான போரின் போது, ஈரானின் அரசியல் மற்றும் ராணுவப் பலத்தை உடைக்கும் நோக்கில் இஸ்ரேல்-அமெரிக்கப் படைகள் நடத்திய அதிநவீன ஏவுகணைத் தாக்குதல்களில், அந்நாட்டின் உச்சக்கட்டப் பொறுப்புகளில் இருந்த 50-க்கும் மேற்பட்ட முக்கியத் தலைவர்கள் கொல்லப்பட்டனர்.

ஈரானின் உச்சத் தலைவராக இருந்த அயதுல்லா அலி கமேனி, பிப்ரவரி 28, 2026 அன்று போர் தொடங்கிய முதல் 12 மணி நேரத்திற்குள், டெஹ்ரானில் உள்ள இவரது அதிகாரப்பூர்வ இல்லத்தைக் குறிவைத்து நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் அலி கமேனி கொல்லப்பட்டார். இவர், கடந்த 36 ஆண்டுகாலமாக ஈரானை தனது இரும்புக்கரம் கொண்டு வழிநடத்தி வந்தார். இவரின் மரணம் ஈரானிய வரலாற்றில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

இவரை தொடர்ந்து, ஈரானிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளரும், ஈரானின் தேசிய பாதுகாப்பு மற்றும் ராணுவ உத்திகளை வகுப்பதில் முதன்மையானவராக இருந்த, அலி ஷாம்கானி, பிப்ரவரி 28 அன்று நடைபெற்ற இரானிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டார்.

ஈரானின் வலிமைமிக்க இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் தரைப்படைத் தளபதியாக இருந்த முகமது பாக்பூர், அதே பாதுகாப்பு கவுன்சில் கூட்டத் தாக்குதலில் கொல்லப்பட்டார். ஈரானின் ஒட்டுமொத்த முப்படைகளின் தலைமைப் பொறுப்பை வகித்த மேஜர் ஜெனரல் அப்துல்ரஹிம் மௌசவியும், போரின் முதல் நாளான பிப்ரவரி 28 அன்று இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலுக்குப் பலியானார்.

இவர்களின் வரிசையில், மார்ச் 17 அன்று டெஹ்ரானில் நடைபெற்ற மற்றொரு துல்லியமான வான்வழித் தாக்குதலில், ஈரானின் மூத்த அரசியல்வாதியும் பாதுகாப்பு கவுன்சில் செயலாளருமான அலி லாரிஜானி கொல்லப்பட்டார். ஈரானின் உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் போராட்டங்களை ஒடுக்குவதில் முக்கியப் பங்காற்றும் ‘பாசிஜ்’ துணை ராணுவப் படையின் தலைவரான சுலைமானி, மார்ச் 17 அன்று நடைபெற்ற பாசிஜ் கூட்டத்தின் மீதான தாக்குதலில் அவரது உளவுத்துறைத் தலைவரான இஸ்மாயில் அகமதியுடன் இணைந்து கொல்லப்பட்டார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஈரானிய அதிகாரிகள், ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதற்கும், லெபனான் உள்ளிட்ட அனைத்து முனைகளிலும் போரை நிரந்தரமாக நிறுத்துவதற்கும் உடன்பட்டுள்ளனர். இருப்பினும், போரின் தொடக்கத்திலேயே ஒட்டுமொத்த அரசியல் மற்றும் ராணுவ மேலடுக்கையும் ஈரான் இழந்த போதிலும், புதிய தலைவர்களை மிக வேகமாக நியமித்து, 3 மாதங்களுக்கும் மேலாக அமெரிக்க-இஸ்ரேல் படைகளுக்கு எதிராகத் தீவிரமாகப் போரிட்டு, தங்களின் பலத்தை ஈரான் நிரூபித்துக் காட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *