June 20, 2026

Seithi Saral

Tamil News Channel

‘தமிழகத்திற்கு வரவேண்டிய தொழில் முதலீடு ஆந்திராவுக்கு சென்றதா?’– அமைச்சர் கீர்த்தனா பதில்

1 min read

“Did industrial investment meant for Tamil Nadu go to Andhra Pradesh?” — Minister Keerthana responds

20.6.2026
தமிழகத்திற்கு வரவேண்டிய தொழில் முதலீடு ஆந்திராவுக்கு சென்று விட்டதாக எழுந்துள்ள புகார் குறித்து சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பினால், தகுந்த பதில் அளிப்பேன் என தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது அவர் கூறியதாவது;-

“தமிழகத்திற்கு வரவேண்டிய தொழில் முதலீடு ஆந்திராவுக்கு சென்று விட்டது என்று கூறுகிறார்கள். அதற்கு ஒரு தக்க பதிலடியை, சரியான இடத்தில் கொடுக்க வேண்டும். சட்டமன்றத்தில் இது குறித்து எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்புவார்கள் என நம்புகிறேன். அப்போது, தொழில் முதலீடு எந்த நேரத்தில் ஆந்திராவுக்கு சென்றது என்பது குறித்து ஆதாரத்துடன் பதில் அளிப்பேன்.

த.வெ.க. ஆட்சி அமைத்து ஒரு மாதம்தான் ஆகிறது. 30 நாட்களுக்குள் தொழில் முதலீடு மாநிலத்தை விட்டு சென்றுவிடுமா? தொழில் முதலீட்டிற்கான நடைமுறைகள் சரியாக நடக்காததால்தான் அவர்கள் மாநிலத்தை விட்டு சென்றிருக்கிறார்கள். அதற்கான ஆதாரங்கள் அனைத்தும் என்னிடம் உள்ளன.

மேலும், டி.ஆர்.பி.ராஜா தற்போது ஏற்பட்டுள்ள மாற்றத்தை முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர் இன்னும் தொழில்துறை அமைச்சர் என்று நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறார். நீங்கள் வேண்டாம் என்றுதான் மக்கள் உங்களை வீட்டிற்கு அனுப்பியிருக்கிறார்கள். தயவுசெய்து அதை ஏற்றுக்கொள்ளுங்கள். உங்கள் பண்ணையார்தனத்தை விட்டுவிடுங்கள்.

நாங்கள் இன்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள். எங்களுக்கான மரியாதையும், மக்களுக்கான மரியாதையும் கொடுக்கப்பட வேண்டும். மக்களை அவமதிப்பது போன்ற விஷயங்களைத்தான் இன்னும் அவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள்.

நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழகத்தை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்-அமைச்சர் விஜய் கூறியுள்ளார். அதற்கான தொலைநோக்குப் பார்வை அறிக்கையை தயார் செய்து வருகிறோம். அதில் எப்படிப்பட்ட திட்டங்களை நாங்கள் கொண்டுவரப்போகிறோம் என்பது உங்களுக்கு தெரியவரும்.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *