July 11, 2026

Seithi Saral

Tamil News Channel

பிரபல பின்னணி பாடகி எஸ் ஜானகி காலமானார்

1 min read


Renowned playback singer S. Janaki has passed away.

11.7.2026
இந்தியாவின் நைட்டிங்கேள் என வர்ணிக்கப்பட்ட பிரபல பின்னணி பாடகி எஸ் ஜானகி (88), வயது மூப்பால் வரும் உடல்நல பிரச்னையால் மைசூரில் காலமானார். கடந்த சில தினங்களாகவே உடலம் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரது உயிர் பிரிந்தது.

ஆந்திரா மாநிலம் குண்டூர் மாவட்டத்தின் ரிபேலே பகுதியில் 1938 ம் ஆண்டு ஏப்.,23ம் தேதி பிறந்தார் ஜானகி. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, சமஸ்கிருதம், ஒடியா, துலு, பஞ்சாபி, வங்காளம் , கொங்கணி உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட மொழிகளில் 40 ஆயிரம்பாடல்களை பாடி உள்ளார்.
தமிழில் 1957ம் ஆண்டு விதியின் விளையாட்டு என்ற படத்தில் அறிமுகமானார். பத்மபூஷண், 4 முறை தேசிய விருது, பல்வேறு மாநிலங்களின் விருது என ஏராளமான விருதுகளையும் வென்றுள்ளார்.

இனிமையான குரலால் ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்தவர் ஜானகி. இந்திய இசைத்துறையில் அவர் நிகழ்த்திய பங்களிப்பு அளவிட முடியாதது. அவரது மறைவு நிச்சயம் இசைத் துறைக்கு பேரிழப்பு தான்.

தமிழ் சினிமாவில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இயக்குனர்கள் பாரதிராஜா, பாக்யராஜ் என அடுத்தடுத்து காலமாகினர். நேற்றுமுன்தினம் ஒளிப்பதிவாளர், இயக்குனர் செழியன் காலமானார். இப்போது ஜானகி காலமாகி உள்ளார். இது திரையுலகினர் இடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்திய உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ள எஸ். ஜானகி அம்மான் தனது 88 வயதில் வயது மூப்பு காரணமாக இயற்கை எய்தியுள்ளார்.

இவர் தெலுங்கு பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர். 1938 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி, ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தில் பள்ளபட்லா என்ற ஊரில் ராமமூர்த்தி – சத்யவதி தம்பதிகளுக்கு பிறந்தார். சிறு வயதிலேயே பாடத்தொடங்கி விட்டார். நாதசுர மேதை பைடிசாமி என்பவரிடம் முறையாக இசைப் பயிற்சியைப் பெற்றார். சென்னைக்கு இடம்பெயர்ந்த ஜானகி ஏவிஎம் ஸ்டூடியோவில் ஒப்பந்த அடிப்படையில் கோரஸ் பாடும் பாடகியாக வேலைக்குச் சேர்ந்தார்.

முதல் பரிசு

1956 ஆம் ஆண்டு தன்னுடைய பதினெட்டாவது வயதில் ஆல் இண்டியோ ரேடியோவில் நடத்தப்பட்ட பாட்டுப் போட்டியில் அபாரமாகப் பாடி இரண்டாம் பிடித்து, குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத் அவர்களின் கைகளால் பரிசு பெற்றார்.

முதல் பாடல்

1957-ம் ஆண்டில் வெளிவந்த விதியின் விளையாட்டு என்ற படத்தில் இடம்பெற்ற பெண் என் ஆசை பாழானது ஏனோ என்ற பாடல் இவரது முதல் பாடல் ஆகும். அடுத்த நாளே அவருக்கு தெலுங்குப் படத்தில் பாடும் வாய்ப்புக் கிடைத்தது. “எம்எல்ஏ” என்ற பட்டத்தில் நீயாசா அடியார் என்ற பாடலை கண்டசாலாவுடன் இணைந்து பாடினார்.

இதைத் தொடர்ந்து பல படங்களில் பாடும் வாய்ப்புக் கிட்டியது. 25 ஆண்டுகளில் தென்னிந்திய மொழிகளில் மட்டுமல்லாமல், கொங்கணி, துளு, சௌராஷ்டிரம், இந்தி, வங்காளம், சமஸ்கிருதம், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடினார்.

1992ஆம் ஆண்டில் இலங்கை சென்றிருந்தபோது இவருக்கு ஞான கான சரஸ்வதி என்ற பட்டம் வழங்கப்பட்டது. தமிழ், தெலுங்கு மொழிகளில் பல பக்திப் பாடல்களைத் தாமே எழுதி இசையமைத்துப் பாடியுள்ளார். மௌனப் போராட்டம் என்ற தெலுங்குப் படத்திற்கு முதன் முதலில் இசையமைத்திருக்கிறார்.

இவரின் கணவர் ராம் பிரசாத். இவர் கடந்த 1997-ம் ஆண்டு காலமானார். இவரது மகன் முரளி கிருஷ்ணா. இவர் கடந்த ஜனவரி மாதம் காலமானார்.

ஜானகி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய 5 இந்திய மொழிகளில் சரளமாக உரையாடவும் எழுதவும் தெரிந்தவர்.

எஸ்.ஜானகி பெற்ற மாநில அரசு விருதுகள் வருமாறு:-

  • 1986-ல் தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது
  • 2002-ல் கேரளா மாநில சிறப்பு விருது
  • பதினான்கு முறை கேரள மாநில அரசின் சிறந்த பாடகிக்கான விருது
  • ஏழு முறை தமிழ்நாடு அரசின் சிறந்த பாடகிக்கான விருது
  • பத்து முறை ஆந்திர மாநில அரசின் சிறந்த பாடகிக்கான விருது

தேசிய விருதுகள்

  • 1976-ல் பதினாறு வயதினிலே படத்தில் பாடிய செந்தூரப்பூவே செந்தூரப்பூவே பாடலுக்காக தேசிய விருது கிடைத்தது.
  • 1992-ல் தேவர் மகன் படத்தில் பாடிய இஞ்சி இடுப்பழகா பாடலுக்காக தேசிய விருது.
  • 1980-ல் ஒப்போல் என்ற மலையாள படத்தில் பாடிய எட்டுமனூரம்பழத்தில் பாடலுக்காக தேசிய விருது.
  • 1984-ல் சித்தாரா என்ற தெலுங்கு படத்தில் பாடிய வென்னெல்லோ கோடாரி அந்தம் பாடலுக்காக தேசிய விருது.

இசையமைப்பாளர்கள்
விஸ்வநாதன் ராமமூர்த்தி, கேவி மகாதேவன், ஏ.எம்.ராஜா, டி.ஆர்.பாப்பா, சலபதிராவ், சுதர்சனம், சங்கர் கணேஷ், இளையராஜா, கங்கை அமரன், சந்திரபோஸ், தேவா, ஏ.ஆர்.ரஹ்மான், டி.ராஜேந்தர், சிற்பி, வித்யாசாகர், எஸ்.ஏ.ராஜ்குமார், பரணி, யுவன்ஷங்கர்ராஜா, தீனா, அனிருத் என அனைத்து ஜாம்பவான்கள் இசையிலும் பாடியுள்ளார்.

பத்ம பூஷண் விருதை ஏற்க மறுத்த எஸ் ஜானகி
எஸ் ஜானகி 2013 ஆம் ஆண்டு தனக்கு கிடைக்கவிருந்த பத்ம பூஷண் விருதை ஏற்க மறுத்து விட்டார். இவ்விருது தனது 55 ஆண்டுகால அனுபவத்திற்கு தாமதமாக வந்துள்ளது என கூறிவிட்டார்.

கடந்த 2016ஆம் ஆண்டு தான் திரையுலகில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து, தனது சொந்த ஊருக்குத் திரும்பினார். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநில அரசுகளிடம் இருந்து அவர் 33க்கும் மேற்பட்ட மாநில விருதுகளைப் பெற்றுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *