August 5, 2026

Seithi Saral

Tamil News Channel

ரூ.125 கோடியில் காமராஜர் சிறப்பு பள்ளிகள்: மாணிக்கம் தாகூர் வரவேற்பு

1 min read

Kamarajar Special Schools at a cost of Rs 125 crore: Manickam Tagore welcomes the move

5.8.2026
நகர்ப்புறங்களில் கிடைக்கும் தரமான கல்வி, கிராமப்புறங்களிலும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ரூ.125 கோடியில் பெருந்தலைவர் காமராஜர் சிறப்புப் பள்ளிகள் அமைக்கப்படுவதை வரவேற்கிறேன் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ப. மாணிக்கம் தாகூர் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் 60 ஆண்டுகளில் காணாத ஒரு சரித்திர நிகழ்வை மக்கள் பேராதரவோடு நிகழ்த்தி 2026-2027-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை முதல்-அமைச்சர் ச.ஜோசப் விஜய் தலைமையிலான த.வெ.க அரசு சமர்ப்பித்திருக்கிறது. ஆட்சிப் பொறுப்பேற்கும்போது கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும் கடன் சுமை இருமடங்காக உயர்ந்து 10 லட்சம் கோடி ரூபாய் அளவில் இருக்கிறது. நிதி ஆதாரம் மிகக்குறைவான நிலையில் தான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நிதி நிலை அறிக்கையை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வரவேற்கிறேன்.

மத்திய திட்ட ஆணையத்தின் முன்னாள் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா தலைமையில் 5 உறுப்பினர்களை கொண்ட வருவாய் மேம்பாட்டுக்குழு அமைக்கப்பட்டு, மாநிலத்தின் நிதி ஆதாரங்களை பெருக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நகர்ப்புறங்களில் கிடைக்கும் தரமான கல்வி, கிராமப்புறங்களிலும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பெருந்தலைவர் காமராஜர் சிறப்புப் பள்ளிகள் ரூபாய் 125 கோடி செலவில் அமைக்கப்படுவதை வரவேற்கிறேன். இது ஒரு நவீன உண்டு, உறைவிடப் பள்ளி ஆகும். வெற்றி மடிக்கணினி திட்டத்தின் மூலம் கல்லூரி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த ரூபாய் 2,000 கோடி ஒதுக்கீட்டில் வெற்றி மடிக்கணினி திட்டம் தொடங்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் அமைந்துள்ள ஆதிதிராவிடர் குடியிருப்புகளில் முழுமையான சமூக பொருளாதார வளர்ச்சியை அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் அயோத்திதாசப் பண்டிதர் வாழ்விட மேம்பாட்டுத் திட்டம் ரூபாய் 300 கோடி ஒதுக்கீட்டில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

முதல்முறையாக புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு தற்போது வழங்கப்பட்ட ரூ.25,000 உயர்த்தப்பட்டு ரூ.35,000ஆக வழங்கப்படும். அதேபோல, மூத்த குடிமக்களுக்கு இலவச ஆன்மீக சுற்றுலா மேற்கொள்ள வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

வெற்றி வீடு திட்டத்தில் ஒரு வீட்டிற்கு ரூ.5 லட்சம்
உலக தரத்தில், சென்னை நதிகளான கூவம், அடையாறு ஆறுகள் தூய்மைபடுத்த தீவிரத் திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வெற்றி வீடு திட்டத்தின் மூலமாக கூரை வீடுகளில் வசிப்பவர்களுக்கு காண்கிரீட் வீடுகள் கட்டுவதற்காக வீடு ஒன்றிற்கு தற்போது வழங்கப்படும் ரூ.3.10 லட்சத்திலிருந்து, ரூ.5 லட்சமாக உயர்த்த முடிவு செய்திருப்பதை வரவேற்கிறேன்.

நெல்லை, தூத்துக்குடியில் விண்வெளி தொழில் மண்டலம் தொடக்கம்
உலகத் தமிழர்களின் முதலீட்டுப் பிரிவின் மூலம் முதலீடுகளை ஈர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. விண்வெளி தொழில் மண்டலம் நெல்லை, தூத்துக்குடியில் தொடங்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஒரு லட்சம் இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு பயிற்சி வழங்க பல்கலைக்கழகம் தொடங்கப்பட உள்ளது. சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் தொடங்க ரூ.2,142 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு விலையில்லா மின்சாரம் 100 யூனிட்டிலிருந்து, 200 ஆக உயர்த்த ரூ.1,545 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

த.வெ.க. அரசின் நிதி நிலை அறிக்கை, தமிழ்நாட்டின் வளர்ச்சியையும், வேலை வாய்ப்புகளையும் பெருக்குகிற நோக்கத்தில் அமைந்திருப்பதை வரவேற்கிறேன், பாராட்டுகிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *