மின்சார அடுப்புகளுக்கு இறக்குமதி வரியை குறைக்க மத்திய அரசு பரிசீலனை
1 min read
Central government considers reducing import duty on electric stoves.
9/8/2026
மேற்காசியாவில் நிலவும் போர் பதற்றம் காரணமாக, இந்தியாவின் சமையல் கியாஸ் (எல்.பி.ஜி.) இறக்குமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நமது நாட்டில் ஆண்டுக்கு சுமார் 3 கோடியே 30 லட்சம் டன் எல்.பி.ஜி. தேவைப்படும் நிலையில், அதில் சுமார் 65 சதவீதம் அளவுக்கு வெளிநாடுகளில் இருந்து தான் இறக்குமதி செய்து வருகிறோம். இதில் 90 சதவீதம் மேற்காசிய நாடுகளில் இருந்தே பெறப்படுகிறது.
சில மாதங்களுக்கு முன்பு சமையல் கியாஸ் தட்டுப்பாடு தலைவிரித்தாடியதால் எண்ணெய் நிறுவனங்கள் சிலிண்டர்களை பெறுவதற்கு பொதுமக்களுக்கு அடுக்கடுக்கான பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தன. வர்த்தக மற்றும் வீட்டு பயன்பாட்டுக்கு சிலிண்டர் கிடைக்காததால் பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்தனர். சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டபோது பொதுமக்கள் அவசர நிலைமையை சமாளிக்க மின்சார அடுப்புகளை சமையல் செய்வதற்காக பயன்படுத்தினார்கள்.
கியாஸ் சிலிண்டர் மூலம் சமையல் செய்வதற்கு சிறந்த மாற்றாக மின்சார அடுப்புகள் இருக்கின்றன. இதில் சமையல் செய்வதற்கு ஆகும் செலவு, கியாஸ், விறகு அடுப்பு உள்ளிட்ட மற்ற சமையல் முறைகளை விடவும் மூன்றில் ஒரு பங்கு குறைவானது என மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சமையல் எரிவாயுவை சார்ந்திருக்கும் நிலையை குறைப்பதற்காக, மின்சார அடுப்புகளைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்க மத்திய அரசு புதிய திட்டங்களை வகுத்து வருகிறது.
இதற்காக மானியங்கள் வழங்குதல், உதிரி பாகங்களுக்கு இறக்குமதி வரியைக் குறைத்தல் மற்றும் மின் வினியோகக் கட்டமைப்பை மேம்படுத்துதல் போன்ற நடவடிக்கைகள் குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது. மின்சார அடுப்புகளின் முக்கிய உதிரி பாகங்களான கண்ணாடி, காயில் உள்பட சில பொருட்கள் தற்போது சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இவற்றை உள்நாட்டிலேயே தயாரிக்க அரசு திட்டமிட்டுள்ளது.
இதுபோல மின்சார அடுப்புகளுக்கு தற்போது விதிக்கப்படும் ஜி.எஸ்.டி. வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகக் குறைக்கவேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன. மின்சார அடுப்புகளை பயன்படுத்தும்போது வீடுகளின் மின்சுமை அதிகரிக்கும் என்பதால், மின் வினியோகக் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டியது அவசியம் என்று மின் வினியோக நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. தற்போது இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் 1 கோடி அடுப்புகள் தயாரிக்கப்படும் நிலையில், வருங்காலங்களில் ஏற்படும் தேவையைக் கருத்தில்கொண்டு இதனை 2 கோடியாக உயர்த்த உற்பத்தியாளர்கள் இலக்கு வைத்துள்ளனர்.