August 14, 2026

Seithi Saral

Tamil News Channel

கடையத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகளை ஆட்சியர் ஆய்வு

1 min read

Collector inspects various development works in Kadayam

14.8.2026
தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றியத்தில் அரசின் பல்வேறு திட்டப் பணிகள், தோட்டக்கலைத் துறையின் விவசாயப் பண்ணை, மற்றும் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் கள ஆய்வு நடத்தினார்.

கள ஆய்வின் தொடக்கத்தில், ரோஹு வகை கெண்டை உள்ளிட்ட மீன் குஞ்சுகள் ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் முன்னிலையில் இராமநதி நீர்த்தேக்கத்தில் வளர்ச்சிக்காக விடப்பட்டது. மாதாபுரம் பகுதியில் கடையம் வட்டார தோட்டக்கலைத் துறை மூலமாக விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட தென்னை மரங்களின் வளர்ச்சியை விவசாயிகளின் தென்னை தோப்புக்களுக்கு சென்று ஆட்சியர் ஆய்வு செய்தார்.

பின்னர், புதியதாக கட்டப்பட்டு வரும் கடையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் பணிகளை பார்வையிட்ட ஆட்சியர் அங்கு வளர்க்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வரும் மரக் கன்றுகள் குறித்தும் பராமரிக்கப்படும் விதம் குறித்தும் கேட்டறிந்த ஆட்சியர் மேலும் சில ஆலோசனைகளையும் வழங்கினார்.

பின்னர், ஊரக வாழ்வாதார இயக்க அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் அங்கு செயல்பட்டு வரும் பாலின வள மையத்தின் செயல்பாடுகள் குறித்தும் அங்கு அடைக்கலம் தேடிவரும் பெண்களுக்காக செய்யப்படுள்ள அடிப்படை மற்றும் சுகாதார வசதிகள் குறித்தும் மையத்திற்கான பிரத்தியோக டெலிபோன் செயல்படுகிறதா என்பதையும் சோதனை செய்தார்.

வாழ்ந்து காட்டுவோம் திட்டத்திலிருந்து பெறப்பட்ட நிதியின் மூலம் மெர்லின் மேரி என்பவர் கடையத்தில் நடத்தி வரும் இருசக்கர வாகன பணிமனையை பார்வையிட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் அதன் செயல்பாடுகள் குறித்தும் அங்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்தார்.

ஆட்சியரின் கள ஆய்வின் போது ஊரக வாழ்வதார இயக்க திட்ட இயக்குநர் தண்டபாணி, துணை இயக்குநர் ராஜேந்திரன், மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரி நவீன்பாண்டியன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கணேசன், அலிஸ் தாயம்மாள், ஊரக வளர்ச்சித் துறை பொறியாளர்கள் பூச்செண்டு, சந்திரகலா, மீன்வள உதவி இயக்குநர் மோகன்ராஜ், மீன்வள ஆய்வாளர் பாலமுருகன், வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் சங்கீதா, வட்டார வேளாண்மைத் துறை அலுவலர் அபிராமி, வட்டார தோட்டக்கலை அலுவலர் வானிலை அரசு, வட்டார தோட்டக்கலை உதவி அலுவலர் இசக்கியம்மாள், வட்டார இயக்க மேலாண்மை அலகு மேலாளர் முருகன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

-ஜோசப், செய்தியாளர்

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *