விலை உயர்வை கட்டுப்படுத்த 10 நாளில் 4,000 டன் வெங்காயம் விற்பனை செய்த மத்திய அரசு
1 min read
Central Government sold 4,000 tonnes of onions in 10 days to curb price rise.
6/9/2026
வெங்காய விலை உயர்வைக் கட்டுப்படுத்த மானிய விலையில் மேற்கொள்ளப்படும் விற்பனையின் முதல் 10 நாட்களில், சுமார் 4,000 டன் வெங்காயத்தை மத்திய அரசு விற்பனை செய்துள்ளது.
பருவ மழை தாமதம் மற்றும் குறைவான மழைப்பொழிவு போன்ற காரணங்களால் இந்த ஆண்டு வெங்காய விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாடு, கேரளா, அசாம், டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் வெங்காய விலை உயர்ந்தது. வெங்காய வரத்து குறைந்ததால் தமிழ்நாட்டில் சில்லறை விற்பனை கடைகளில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.60 முதல் ரூ.75 வரை விற்கப்பட்டது. சின்ன வெங்காயம் கிலோ ரூ.100 வரை உயர்ந்தது.
விலையேற்றத்தை கட்டுப்படுத்த மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. மத்திய தொகுப்பில் இருப்பு வைக்கப்பட்டுள்ள வெங்காயத்தை மாநிலங்களுக்கு அனுப்பி மானிய விலையில் விற்பனை செய்கிறது.
இதற்காக கண்டா எக்ஸ்பிரஸ் (வெங்காய எக்ஸ்பிரஸ்) எனப்படும் சிறப்பு ரெயில்கள் மூலமாகவும், லாரிகள் மூலமாகவும் வெங்காயம் அனுப்பப்படுகிறது. மத்திய அரசு அனுப்பி வைக்கும் இந்த வெங்காயம், நாபெட், என்சிசிஎப் மற்றும் கேந்திரிய பண்டார் விற்பனை நிலையங்கள் மூலம் கிலோவுக்கு ரூ.35 என்ற மானிய விலையில் விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் கூட்டுறவு மற்றும் நியாய விலைக் கடைகளில் கிலோ ரூ.35-க்கு வெங்காயம் விற்பனை செய்யப்படுகிறது.
இவ்வாறு விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்படும் மானிய விலை விற்பனையின் முதல் 10 நாட்களில், 17 நகரங்களில் சுமார் 4,000 டன் இருப்பு வைக்கப்பட்ட வெங்காயத்தை மத்திய அரசு விற்பனை செய்துள்ளதாக நுகர்வோர் விவகாரத் துறை செயலாளர் நிதி காரே இன்று தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-
இருப்பு வைக்கப்பட்டுள்ள வெங்காயத்தில் இதுவரை 17 நகரங்களில் சுமார் 4,000 டன் வெங்காயம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ‘கண்டா எக்ஸ்பிரஸ்’ மூலம் பெருமளவிலான சரக்கு ஏற்கனவே டெல்லி மற்றும் சென்னையைச் சென்றடைந்துவிட்டன; அடுத்த சில நாட்களில் கவுகாத்திக்கு அனுப்புவதற்காக மூன்றாவது சரக்கு ரயில் பெட்டிகளில் தற்போது சரக்கு ஏற்றப்பட்டு வருகின்றன. இருப்பில் உள்ள வெங்காயத்தை விநியோகம் செய்வதால், நுகர்வோருக்கு சற்று நிம்மதியை அளித்துள்ளது. விலை சற்று குறைந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
மத்திய அரசு, தனது ஏஜென்சிகளான என்சிசிஎப் மற்றும் நாபெட் ஆகியவற்றின் மூலம், 2026-ஆம் ஆண்டிற்காக 1.21 லட்சம் டன் வெங்காயத்தை இருப்பு வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
புதிய காரிஃப் பருவ வெங்காய சாகுபடி நம்பிக்கை அளிப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அறுவடை முடிந்து அக்டோபர் மாத மத்தியில் சந்தைக்கு வரத் தொடங்கும் இந்த வெங்காயம், விநியோக நெருக்கடியைக் குறைப்பதோடு விலையும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.