September 20, 2026

Seithi Saral

Tamil News Channel

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சின்னம் முடக்கம்- ராகுல் கண்டனம்

1 min read

Trinamool Congress party symbol frozen – Rahul condemns the move.

18/9/2026
திரிணாமுல் காங்கிரசின் சின்னம் முடக்கப்பட்டதற்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பெயர் மற்றும் தேர்தல் சின்னம் தொடர்பாக இரு அணிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில், தேர்தல் ஆணையம் இடைக்கால நடவடிக்கையாக கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை முடக்கியுள்ளது. அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் என்ற பெயரையும், கட்சியின் மலர் சின்னத்தையும் தற்போதைக்கு எந்த அணியும் பயன்படுத்த முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

சட்டமன்ற தேர்தல் தோல்விக்குப்பிறகு மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி இரண்டாக உடைந்தது. முன்னாள் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தலைமையிலான அணி மற்றும் ரிதப்ரதா பானர்ஜி தலைமையிலான அணிகளும் தங்கள் தரப்பே உண்மையான திரிணாமுல் கட்சி என்று கூறி வருகின்றன. இதையடுத்து இரு அணிகளின் கோரிக்கைகளையும் பரிசீலிக்கும் வரை பெயர் மற்றும் சின்னத்தை முடக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

மேற்கு வங்காளத்தின் நந்திகிராம் மற்றும் ரேஜினகர் தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் இரு அணிகளும் திரிணாமுல் காங்கிரஸ் பெயர் மற்றும் இரட்டை மலர் சின்னத்தில் போட்டியிட முடியாது. இரு அணிகளும் தங்களுக்கு விருப்பமான பெயர்களையும், தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள சுயேச்சை சின்னங்களின் பட்டியலில் இருந்து தலா 3 சின்னங்களையும் தேர்வு செய்து செப்டம்பர் 18-ந் தேதி காலை 11 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இரு அணிகளும் தங்களுக்கான தனித்தனி பெயர் மற்றும் சின்னத்தில் இடைத்தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் இந்த இடைக்கால ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. கட்சியின் பெயர் மற்றும் சின்னம் தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்படும் வரை இந்த இடைக்கால உத்தரவு அமலில் இருக்கும்.

இந்நிலையில் ஓட்டு கொள்ளையடித்த மத்திய அரசு, அடுத்ததாக கட்சிக் கொள்ளையில் இறங்கிவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

முதலில் சிவசேனா, பிறகு என்.சி.பி. (NCP), இப்போது திரிணாமுல் காங்கிரஸ்.

ஒவ்வொரு முறையும் அதே பாணிதான்: ஒரு கட்சியை பிளவுபடுத்த பா.ஜ.க.வும், தேர்தல் ஆணையமும் கைகோர்க்கின்றன; பின்னர் அந்தக் கட்சியின் தேர்தல் சின்னம் பறிக்கப்படுகிறது.

ஒரு கட்சியையே முழுமையாக அபகரிக்க முடியும் எனும் நிலையில், கோடிக்கணக்கான இந்தியர்களின் வாக்குகளும் திருடப்படக்கூடும் என்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை.

வாக்குத் திருட்டு, அரசாங்கத்தைக் கைப்பற்றுதல், இப்போது கட்சியை அபகரித்தல் – இவை அனைத்தும் நமது ஜனநாயக சீரழிவின் அடையாளங்களாக மாறிவிட்டன.

மக்களின் தீர்ப்பை பாதுகாப்பதே தேர்தல் ஆணையத்தின் அரசியலமைப்பு சார்ந்த கடமையாகும்; ஆனால், அதற்கு மாறாக, மக்களின் தீர்ப்பைத் தலைகீழாக மாற்றும் சக்திகளுக்கே அது துணை நிற்கிறது.

இந்த போராட்டம் மம்தா பானர்ஜியுடையது மட்டுமல்ல; சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை விரும்பும் ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும், ஒவ்வொரு வாக்காளருக்குமான போராட்டம் இது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *