திருச்சியில் தயாரிக்கப்பட்ட இரும்பு பாலம் மும்பையில் நிறுவப்பட்டது
1 min read
An iron bridge manufactured in Trichy was installed in Mumbai
30.9.2026
மும்பை- ஆமதாபாத் புல்லட் ரெயில் பாதைக்காக திருச்சியில் இருந்து கொண்டு வரப்பட்ட 1,405 டன் ராட்சத இரும்பு பாலம் பிவண்டியில் நெடுஞ்சாலையில் நிறுவப்பட்டது.
மும்பை- ஆமதாபாத் இடையேயான பயண நேரத்தை பெருமளவு குறைக்கும் நோக்கில், 508 கி.மீ. தூரத்திற்கு நாட்டின் முதல் அதிவேக புல்லட் ரெயில் பாதை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக மும்பையை அடுத்த தானே மாவட்டம் பிவண்டியில் உள்ள திவா- அஞ்சூர் கிராமத்தின் தேசிய நெடுஞ்சாலையில் 1.405 டன் எடையும், 100 மீட்டர் நீளமும் கொண்ட பிரமாண்ட இரும்பு பாலம் வெற்றிகரமாக நிறுவப்பட்டுள்ளது. இந்த பாலம் 14 மீட்டர் உயரமும், அதே அளவிலான அகலமும் கொண்டது.
மும்பை- ஆமதாபாத் புல்லட் ரெயில் பாதைக்காக மொத்தம் திட்டமிடப்பட்டுள்ள 28 இரும்பு பாலங்களில், இந்த பாலத்தையும் சேர்த்து இதுவரை 16 இரும்பு பாலங்கள் நிறுவும் பணிகள் நிறைவடைந்துள்ளன. 15 இரும்பு பாலங்கள் குஜராத் மாநிலத்தில் அமைக்கப்பட்டு உள்ள நிலையில், மராட்டியத்தில் நிறுவப்பட்ட முதல் பாலம் இதுவாகும் என தேசிய அதிவேக ரெயில் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மத்திய அரசின் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ், உள்நாட்டு தொழில்நுட்ப திறனை பறைசாற்றும் வகையில் இந்த இரும்பு பாலம் தமிழ்நாட்டின் திருச்சியிலுள்ள பட்டறையில் தயாரிக்கப்பட்டது. அங்கிருந்து கனரக டிரெய்லர் வாகனங்கள் மூலம் பல்வேறு பாகங்களாக சுமார் 1,300 கிலோமீட்டர் தூரம் கொண்டு வரப்பட்டு நிறுவப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.