வள்ளியூரில் அரசு பஸ் கண்டக்டர் அடித்துக் கொலை – 5 பேர் கைது
1 min read
Government bus conductor beaten to death in Valliyoor – 5 arrested.
7.10.2026
நெல்லை மாவட்டம் வள்ளியூர் கீழத்தெருவைச் சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன் (51). அரசு போக்குவரத்துக் கழகத்தில் கண்டக்டராக பணியாற்றி வந்த இவர், ஊருக்கு ஒதுக்குப்புறமான பகுதியில் நண்பர்களுடன் மது அருந்தியதாக கூறப்படுகிறது.
அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில், நண்பர்கள் சிவசுப்பிரமணியனை கம்பால் தாக்கியதாக தெரிகிறது.
தாக்குதலில் காயமடைந்த சிவசுப்பிரமணியன், பைக்கில் இருந்து கீழே விழுந்ததாகக் கூறி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். பின்னர் நள்ளிரவில் வீட்டிற்கு திரும்பியுள்ளார்.
இந்த நிலையில், மறுநாள் காலையில் அவர் வீட்டில் சடலமாக கிடந்தது தெரியவந்தது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வள்ளியூர் போலீசார், சிவசுப்பிரமணியனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், 5 பேரை கைது செய்து அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிவசுப்பிரமணியன் தாக்கப்பட்டு காயமடைந்ததாக கூறப்படும் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. இந்த காட்சிகள் சம்பவம் தொடர்பாக பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கொலைக்கான முழுமையான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.