October 14, 2026

Seithi Saral

Tamil News Channel

மத்திய மந்திரிசபை விரைவில் மாற்றம்-புது முகங்களுக்கு வாய்ப்பு?

1 min read

Union Cabinet reshuffle soon – Opportunity for new faces?

14.10.2026
பிரதமர் மோடி தொடர்ந்து 3-வது முறையாக வெற்றி பெற்று கடந்த 2024 ஜூன் மாதம் 9-ந்தேதி பிரதமராக பதவி ஏற்றார். அவரது அமைச்சரவையில் கேபினட் மந்திரிகள், தனி பொறுப்பு இணை மந்திரிகள், இணை மந்திரிகள் என 68 பேர் மந்திரிகளாக நியமிக்கப்பட்டார்கள்.

இந்த மந்திரிசபை இதுவரை மறுசீரமைப்பு எதுவும் செய்யப்படவில்லை. இந்த நிலையில் மத்திய கல்வி மந்திரியாக இருந்த தர்மேந்திர பிரதான் நீட் வினாத்தாள் கசிவான விவகாரத்தில் பதவி விலக கோரி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி டெல்லியில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தியது. அதை தொடர்ந்து தவறுக்கு பொறுப்பேற்று கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அவர் பதவியை ராஜினாமா செய்தார். அவரிடம் இருந்த பொறுப்பு மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷிக்கு கூடுதலாக வழங்கப்பட்டு உள்ளது.

சிறுபான்மையினர் விவகாரத்துறை இணை மந்திரியாக இருந்த ஜார்ஜ் குரியன், ரெயில்வே இணை மந்திரியாக இருந்த ரவ்னீத் சிங்பிட் ஆகியோர் தங்களது மேல்சபை எம்.பி. பதவிக் காலம் முடிந்ததால் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து விட்டனர்.

மத்திய பெட்ரோலியத்துறை மந்திரி ஹர்தீப் சிங்பூரி, நுகர்வோர் விவகாரத்துறை இணை மந்திரி பி.எல்.வர்மா ஆகியோருக்கு சமீபத்தில் நடந்த மேல்சபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.

அவர்களின் பதவிக்காலமும் முடிவடைவதால் இருவரது மந்திரி பதவியும் கேள்விக்குறியாகி உள்ளது.

தமிழகத்தை சேர்ந்த மத்திய மந்திரி எல்.முருகன் கடந்த 2021-ம் ஆண்டு முதல் முறையாக மத்திய மந்திரியாக நியமிக்கப்பட்டார். 2024-ல் 3-வது முறையாக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய மந்திரி சபையிலும் எல்.முருகனுக்கு இணை மந்திரி பொறுப்பு வழங்கப்பட்டது.

அவர் மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து டெல்லி மேல்சபைக்கு 2 முறை தேர்வு செய்யப்பட்டார். இப்போதைய அவரது எம்.பி. பதவிக்காலம் வருகிற 2030 வரை இருக்கிறது. இந்த நிலையில் எல்.முருகன் திடீரென்று செவ்வாய் அன்று தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். அத்துடன் தனது எம்.பி. பதவியையும் ராஜினாமா செய்து விட்டார்.

பதவியை துறந்து விட்டு தமிழகத்திற்கு கட்சி பணிக்கு திரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலையில் மத்திய மந்திரி சபையில் 12 பதவி இடங்கள் காலியாக உள்ளன. மேலும் பல மந்திரிகள் கூடுதல் பொறுப்புகளையும் கவனித்து வருகிறார்கள்.

எனவே மந்திரிகளின் பணிச்சுமையை குறைக்கவும், நிர்வாகம் சிறப்பாக நடைபெறவும் மந்திரி சபையை விரிவுபடுத்த பிரதமர் மோடி திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

அதுவும் வருகிற தீபாவளி பண்டிகைக்கு முன்னரே கூட இந்த மாற்றம் இருக்கலாம் என்று பேசப்படுகிறது.

மந்திரி சபை மாற்றத்தின் போது வரவிருக்கும் மாநில சட்டமன்ற தேர்தல்கள் மற்றும் கட்சி பலவீனமாக இருக்கும் மாநிலங்களை மனதில் கொண்டு திறமையான புதுமுகங்களுக்கு வாய்ப்பளிக்கவும் பிரதமர் மோடி முடிவு செய்து இருப்பதாக டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன.

தமிழகத்தில் இதுவரை இருந்த ஒரு மந்திரி பிரதிநிதித்துவமும் தற்போது இல்லை என்றாகி விட்டது. எனவே மந்திரி சபை விரிவாக்கத்தின் போது தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கும் வாய்ப்பு கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

இதற்கு முன்பு 1998 முதல் 2004 வரை வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சியில் தமிழகத்தை சேர்ந்த ரங்கராஜன் குமாரமங்கலம், ஜனா கிருஷ்ண மூர்த்தி, பொன் ராதா கிருஷ்ணன், திருநாவுக்கரசர் ஆகியோர் மந்திரிகளாக இருந்தார்கள். அப்போது பா.ஜ.க. சில தொகுதிகளில் வெற்றி பெற்று இருந்தது.

அதன் பிறகு 2014-ல் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி அமைந்த பிறகு தமிழ்நாட்டில் இருந்து எம்.பி.க்கள் வெற்றி பெறாவிட்டாலும் தமிழகத்தை சேர்ந்த நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் ஆகியோருக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் எல்.முருகனை மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து மேல்சபைக்கு தேர்வு செய்து 2 முறை மத்திய மந்திரியாகவும் பிரதமர் மோடி நியமித்தார்.

தற்போதைய நிலையில் தமிழகத்தில் பா.ஜ.க. எம்.பி.க்கள் யாரும் இல்லை. எனவே மந்திரி சபை விரிவாக்கத்தின் போது யாருக்காவது வாய்ப்பு வழங்கப்படுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *