தமிழகம் முழுவதும் கிலோ ரூ.30-க்கு சன்னரக அரிசி விற்பனை தொடக்கம்
1 min read
Sale of fine-variety rice at Rs. 30 per kg begins across Tamil Nadu
17.10.2026
தமிழகம் முழுவதும் கிலோ ரூ.30-க்கு சன்னரக அரிசி விற்பனையை அமைச்சர்கள் வெங்கடரமணன் மற்றும் காந்திராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தார்.
இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழ்நாடு அரசு, பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடின்றி நியாயமான விலையில் கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தனியார் அரிசி ஆலைகள் மற்றும் பிற ஆதாரங்களின் வாயிலாக அரிசியை தமிழ்நாடு அரசு கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறது.
அந்த வகையில், தமிழ்நாடு முழுவதும் அமுதம் மற்றும் கூட்டுறவு அங்காடிகள் மூலம் கிலோ ரூ.30-க்கு சன்னரக அரிசி விற்பனை இன்று (17.10.2026) சென்னை, இராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள காமதேனு அங்காடியில் (TUCS) உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் வெங்கடரமணன் மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் காந்திராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இத்திட்டத்தின்கீழ், சென்னையில் உள்ள 11 அமுதம் அங்காடிகள் மற்றும் 19 கூட்டுறவு அங்காடிகள் என மொத்தம் 30 அங்காடிகளில் இன்று முதல் வழங்கப்படுகிறது. மேலும், இத்திட்டமானது தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் நாளை முதல் படிப்படியாக தொடங்கப்பட உள்ளது.
இத்திட்டத்தின் மூலமாக சன்னரக அரிசியின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் நோக்கில், முதற்கட்டமாக தமிழ்நாடு முழுவதும் 25,000 மெட்ரிக் டன் சன்னரக அரிசியை, கூட்டுறவுத் துறையின் 201 அங்காடிகள் மற்றும் 49 அமுதம் அங்காடிகள் மூலம் கிலோ ஒன்றுக்கு ரூ.30 என்ற விலையில் விற்பனை செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. பொதுமக்களின் தேவைக்கேற்ப ஒரு குடும்பத்திற்கு அதிகபட்சமாக 5 கிலோ வரை அரிசி வழங்கப்படும். இதன்மூலம் பொதுமக்களுக்கு சன்னரக அரிசி குறைந்த விலையில் கிடைப்பதை உறுதிசெய்வதுடன், அரிசி விலை உயர்வின் தாக்கத்தைக் குறைக்கவும் தமிழ்நாடு முதல்-அமைச்சர் தலைமையிலான அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.