தஞ்சை: பைக்கில் சென்ற கல்லூரி மாணவர்கள் இருவர் விபத்தில் பலி
1 min read
Thanjavur: Two college students killed in collision between a lorry and a bike
17/10/2026
தஞ்சை அருகே சாலையில் நின்றிருந்த லாரியில் மீது பைக் மோதிய விபத்தில் 2 கல்லூரி மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.தஞ்சை அருகே உள்ள மஞ்சப்பேட்டை நடுத்தெருவை சேர்ந்தவர் சுந்தரம். இவரது மகன் விஜய் (வயது20). அதே பகுதியை சேர்ந்த சாமிநாதன் என்பவரின் மகன் சுதர்சன் (19). இதில் விஜய் தஞ்சையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியிலும் ,சுதர்சன் திருப்பூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியிலும் இளநிலை இரண்டாமாண்டு படித்து வந்த மாணவர்கள். மேலும் இருவரும் கபாடி வீரர்கள்.
இந்நிலையில் செங்கிப்பட்டியில் நடந்து வரும் கபடி போட்டியில் பங்கேற்பதற்காக இன்று அதிகாலை 3 மணியளவில் ஒரே மோட்டார் சைக்கிளில் இருவரும் புறப்பட்டனர். டீ குடித்து விட்டு செங்கிப்பட்டி செல்லலாம் என்று நினைத்த இருவரும் தஞ்சாவூர்-புதுக்கோட்டை சாலையில் அற்புதாபுரம் பகுதியில் பைக்கில் சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த லாரி மீது வேகமாக பைக் வேகமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட விஜய் மற்றும் சுதர்சன் இருவரும் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
விபத்து நடந்ததை அறிந்த அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து வல்லம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரது உடலையும் மீட்டு தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசரித்து வருகின்றனர். கல்லூரி மாணவர்கள் இருவர் விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது