பேத்தியின் வற்புறுத்தலின் பேரில்தான் வைதீக முறைப்படி திருமணம் – துரைமுருகன் விளக்கம்
1 min read
Marriage conducted according to traditional Vedic rites only due to granddaughter’s insistence – Duraimurugan
6.11.2026
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனின் பேத்தியும், வேலூர் தொகுதி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்தின் மகளுமான செந்தாமரை திருமணம் கடந்த 1-ந்தேதி நடைபெற்றது. இந்த திருமணம் வைதீக முறைப்படி நடைபெற்றதால் பெரும் விமர்சனங்கள் எழுந்தது.
மேலும் இதற்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் பேத்தியின் வற்புறுத்தலின் பேரில்தான் வைதீக முறைப்படி திருமணம் நடைபெற்றதாக துரைமுருகன் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
எனது பேத்தி திருமணம் குறித்து சில விளக்கங்களை கழகத் தோழர்களுக்கும், மற்றவர்களுக்கும் தெரிவித்துக் கொள்ள விரும்புவது யாதெனில்; கலைஞரின் அடியொற்றி, நீண்ட அரசியல் பயணம் மேற்கொண்டு வரும் எனது திருமணம், கலைஞர் தலைமையில் நடைபெற்றது. அதைப்போலவே, நான் முன்னின்று நடத்திய என் மகன் திருமணம் கலைஞர் தலைமையில் திருமணம் நடைபெற்றது என்பதை நாடே அறியும்.
அயல்நாட்டில் கல்வி பயின்ற எனது பேத்தி, தான் வேற்று சாதியைச் சேர்ந்த ஒருவரை காதலித்து வருவதாவும் – அவரையே திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் – வைதீக முறைப்படியே திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் என்னிடம் தெரிவித்தார். அவரது விருப்பத்தின்படியே வைதீக முறையில் எனது பேத்தியின் திருமணம் நடைபெற்றது.
எனது பேத்தியின் வற்புறுத்தலின் பேரில்தான், இவ்வைதீக முறை திருமணத்தை ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டுவிட்டது. நடைபெற்ற இந்நிகழ்வுக்கு நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். இதனை அரசியலாக்கவோ அல்லது விவாதப் பொருளாக்கவோ யாரும் முன்வர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.