ஜி.எஸ்.டி. வரி செலுத்துவோருக்கான புதிய மதிப்பீட்டு முறை
1 min read
New assessment system for GST taxpayers
19.11.2026
ஜி.எஸ்.டி. வரி செலுத்துவோருக்கான புதிய மதிப்பீட்டு வரைவு கட்டமைப்பை மத்திய அரசு வெளியிட உள்ளது. ஏப்ரல் 1-ந்தேதி முதல் இது அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய ஜி.எஸ்.டி. சட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள சுமார் 70 லட்சம் வரி செலுத்துவோருக்கான முகமற்ற மற்றும் மையப்படுத்தப்பட்ட வரி மதிப்பீட்டு முறை குறித்த வரைவு கட்டமைப்பை மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் (சி.பி.ஐ.சி.) விரைவில் வெளியிட உள்ளது.
டெல்லியில் நடைபெற்ற பி.எச்.டி. வர்த்தக சபை நிகழ்ச்சியில் பேசிய சி.பி.ஐ.சி. தலைவர் விவேக் சதுர்வேதி, “பொதுமக்கள் மற்றும் தொழில் துறையினரின் கருத்துகளுக்காக இந்த வரைவு அறிக்கை விரைவில் வெளியிடப்படும். இந்தப் புதிய வரி நிர்வாக முறை வருகிற 2027-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது” என்று தெரிவித்தார்.
இந்தப் புதிய கட்டமைப்பின் கீழ், வரி தொடர்பான நோட்டீஸ்கள், விசாரணைகள் மற்றும் உத்தரவுகள் அனைத்தும் தேசிய அளவிலான ஒருங்கிணைந்த தளத்தின் மூலம் கையாளப்படும். இதன் மூலம் அதிகாரிகளுக்கும் வரி செலுத்துவோருக்கும் இடையிலான நேரடித் தொடர்பு தவிர்க்கப்பட்டு வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படும்.
குறிப்பாக, மொத்தமுள்ள 70 லட்சம் வரி செலுத்துவோரில் சுமார் 2 லட்சம் பேர் ஒன்றுக்கும் மேற்பட்ட மாநிலங்களில் பதிவு செய்துள்ள பெரிய நிறுவனங்கள் ஆவர். இத்தகைய பெரிய வரி செலுத்துவோர் தங்களது பதிவு, தணிக்கை மற்றும் மேல்முறையீடு போன்ற அனைத்துப் பணிகளையும் ஒரே இடத்தில் முடித்துக்கொள்ளும் வகையில் மையப்படுத்தப்பட்ட நிர்வாகம் அமையும். அதேபோல், இதர வரி செலுத்துவோருக்கு ‘முகமற்ற உதவி முறை’ அறிமுகப்படுத்தப்படும்.
மேலும், சமீபத்திய 57-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட சீர்திருத்த முடிவுகள் குறித்தும் அவர் விளக்கமளித்தார். இதுகுறித்து அவர், “சரக்கு வாகனங்களை வழிமறித்து ஆய்வு செய்யும் அதிகாரம். பொருட்கள் புறப்படும் மற்றும் சென்றடையும் மாநிலங்களின் அதிகாரிகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதனால் இடைப்பட்ட மாநிலங்களில் சரக்கு வாகனங்கள் தேவையின்றி நிறுத்தப்படுவது தவிர்க்கப்பட்டு சரக்குப் போக்குவரத்து எளிதாகும்.
அதேபோல், வரி அதிகாரிகளின் கைது செய்யும் அதிகாரத்தை ரத்து செய்ததும், குற்றவியல் வழக்கு தொடங்குவதற்கான வரி ஏய்ப்பு வரம்பை ரூ.1 கோடியில் இருந்து ரூ.5 கோடியாக உயர்த்தியதும் வர்த்தகர்களுக்கு நம்பிக்கையளிக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கைகள் ஆகும். இந்தப் புதிய வரைவு கட்டமைப்பு அறிக்கை பொதுமக்களின் பார்வைக்காக விரைவில் வெளியிடப்படும். தொழில் துறையினர் மற்றும் வரி செலுத்துவோர் தங்களது ஆலோசனைகளையும் கருத்துகளையும் தெரிவிக்கலாம்” என்றும் விவேக் சதுர்வேதி கேட்டுக்கொண்டார்.