கொளத்தூர் தவெக எம்.எல்.ஏ. வி.எஸ். பாபு காலமானார்
1 min read
TVK MLA for Kolathur, V.S. Babu, has passed away.
19.11.2026
சென்னை கொளத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏ வி.எஸ். பாபு சென்னை தனியார் மருத்துவமனையில் இன்று காலமானார்.
மூச்சுத் திணறல் பிரச்னை காரணமாக, கடந்த செப்டம்பர் மாதம் 9ஆம் தேதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வி.எஸ். பாபு, தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த நிலையில் இன்று பிற்பகல் 2.24 மணிக்கு மாரடைப்பால் காலமானதாக மருத்துவமனை அறிக்கை தெரிவித்துள்ளது.
அவரது உடல்நிலை குறித்து அவ்வப்போது பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரது மறைவு அரசியல் வட்டாரத்திலும் தமிழக வெற்றிக் கழகத்தினரிடையேயும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, வி.எஸ். பாபு அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வந்திருந்தார். வி.எஸ். பாபு கடந்த 70 நாள்களுக்கும் மேலாக அனுமதிக்கப்பட்டிருந்த சென்னை அமைந்தகரையில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் காவல்துறை பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
கொளத்தூர் தொகுதியில் முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலினை தோற்கடித்ததால், தவெக எம்எல்ஏ வி.எஸ். பாபு தனிக்கவனம் பெற்றிருந்தார். 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு, முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலினை 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் வி.எஸ். பாபு தோற்கடித்திருந்தார்.
சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், “தமிழக சட்டப்பேரவை உறுப்பினர் வி.எஸ். பாபு, செப். 9ஆம் தேதி நுரையீரல் பாதிப்பு காரணமாக அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். பல்வேறு கட்ட மருத்துவ சிகிச்சைகள் மற்றும் பல துறை மருத்துவக் குழுவினர் அளித்த சிகிச்சைகளையும் தாண்டி, அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வந்தது. இந்த நிலையில், நவ. 19ஆம் தேதி பிற்பகல் 2.24 மணிக்கு, வி.எஸ். பாபுவுக்கு மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவரது குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளது.
2006ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் புரசைவாக்கத்தில் திமுக சார்பில் போட்டியிட்டு முதல் முறையாக சட்டப்பேரவை உறுப்பினரானார்.
திமுகவுக்கு வந்த சேகர்பாபு, வடசென்னையில் ஆதிக்கம் செலுத்தியதால், அதிருப்தியில், திமுகவிலிருந்து வெளியேறி அதிமுகவில் இணைந்தார். அங்கு அவருக்கு பெரிய வாய்ப்பு கிடைக்காத நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் தவெகவில் இணைந்தார்.
திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்காக உழைத்த வி.எஸ். பாபு, 2026 பேரவைத் தேர்தலில், கொளத்தூர் தொகுதியில், அவரை எதிர்த்தே தவெக சார்பில் களமிறக்கப்பட்டு, வெற்றியும் பெற்றிருந்தார்.