குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல்
1 min read
Tourists enjoy a delightful bath in the Courtallam waterfalls
22.11.2026
ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் காலை முதலே ஐந்தருவியில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்தது.
தென்காசி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத்தலமாக குற்றாலம் விளங்கி வருகிறது. இங்கு உள்ள பிரதான அருவிகள் மற்றும் சிற்றருவிகளில் குளித்து மகிழ்வதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில், தென்காசி மாவட்டத்தில் மழையின்றி லேசான மேகமூட்டத்துடனும் காற்றுடனும் கூடிய இதமான வானிலை நிலவுகிறது. இருப்பினும், குற்றாலம் பகுதியில் நிலவும் இதமான காலநிலையும், சில அருவிகளில் குளிப்பதற்கு ஏற்ற வகையில் தண்ணீர் விழுவதும் சுற்றுலா பயணிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விடுமுறை தினமான இன்று குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது.
குறிப்பாக புலி அருவி, சிற்றருவி மற்றும் ஐந்தருவி ஆகியவற்றில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழும் வகையில் மிதமான அளவில் தண்ணீர் விழுந்து வருகிறது. இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் காலை முதலே ஐந்தருவியில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்தது. குடும்பத்துடன் வந்தவர்கள் மற்றும் நண்பர்களுடன் வந்தவர்கள் அருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். சபரிமலை சீசன் என்பதால், ஐயப்ப பக்தர்களும் அதிக அளவில் வந்திருந்து, அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர்.