November 23, 2026

Seithi Saral

Tamil News Channel

கடந்த 8 மாதத்தில் ‘டிஜிட்டல் கைது’ மோசடியால் ரூ.647 கோடி இழப்பு

1 min read

Rs 647 crore lost to ‘digital arrest’ scams in the last 8 months

23.11.2026
இந்தியாவில் கடந்த 8 மாதங்களில் மட்டும் ‘டிஜிட்டல் கைது’ என்ற பெயரில் நடந்த சைபர் மோசடிகளால் பொதுமக்கள் ரூ.647 கோடிக்கும் அதிகமான பணத்தை இழந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

டிஜிட்டல் கைது மோசடிகளைத் தடுப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரித்து வரும் வழக்கில், மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையம் சார்பில் நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், கடந்த ஜனவரி 1, 2026 முதல் ஆகஸ்ட் 31, 2026 வரையிலான எட்டு மாதங்களில் நாடு முழுவதும் குறைந்தது 21,900 டிஜிட்டல் கைது புகார்கள் பதிவாகியுள்ளதாகவும், இதன் மூலம் ரூ.647 கோடிக்கும் மேல் மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

காவல்துறை, சிபிஐ , அமலாக்கத்துறை மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் போல ஆள்மாறாட்டம் செய்யும் மோசடிக் கும்பல்கள், பொதுமக்களுக்கு வீடியோ கால் செய்கின்றன. போதைப்பொருள் கடத்தல் அல்லது சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் அவர்கள் சிக்கியுள்ளதாக மிரட்டி, வீடியோ காலில் இருந்து வெளியேற விடாமல் மனரீதியாக அழுத்தம் கொடுத்து, அவர்களின் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை தங்கள் கணக்குகளுக்கு மாற்றச் செய்து மோசடியில் ஈடுபடுகின்றன.

ஹரியானாவைச் சேர்ந்த முதிய தம்பதியினர் போலி நீதிமன்ற விசாரணை மூலம் ரூ.1 கோடிக்கு மேல் இழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, கடந்த அக்டோபர் 2025-ல் உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை விசாரிக்கத் தொடங்கியது. இதற்கிடையே, சைபர் மோசடியில் இழந்த பணத்தை விரைந்து மீட்க மத்திய அரசு அறிமுகப்படுத்திய ‘பண மீட்பு இணையதளம்’ மூலம் இந்த ஆண்டில் இதுவரை ரூ.332.7 கோடி மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியச் சட்டப்படி ‘டிஜிட்டல் கைது’ என்ற நடைமுறையே கிடையாது என்றும், எந்தவொரு விசாரணை அமைப்பும் வீடியோ கால் மூலம் விசாரணை நடத்திப் பணம் கேட்காது என்றும் மத்திய அரசு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இதுபோன்ற அழைப்புகள் வந்தால் உடனடியாக 1930 என்ற சைபர் கிரைம் உதவி எண்ணிலோ அல்லது cybercrime.gov.in இணையதளத்திலோ புகார் அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *