ஊட்டி அருங்காட்சியகத்தில் முதல்-அமைச்சர் விஜய் மெழுகு சிலை
1 min read
Wax statue of Chief Minister Vijay at the Ooty museum
23/11/2026
ஊட்டி அருங்காட்சியகத்தில் முதல்-அமைச்சர் விஜய்க்கு மெழுகு சிலை அமைக்கப்பட்டுள்ளது. சுற்றுலா வரும் பயணிகள் ஆர்வத்துடன் ரசித்து சிலை முன்பு ‘செல்பி’ எடுத்து செல்கின்றனர்.
நீலகிரி மாவட்டம் ஊட்டி படகு இல்லத்தில் சுற்றுலாத்துறை மற்றும் தனியார் பங்களிப்பில் சர்வதேச மெழுகு சிலை அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு உள்ளது.
பொதுமக்களின் பார்வைக்கு திறந்துவிடப்பட்ட இந்த அருங்காட்சியகத்தில் பிரதமர் மோடி, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், ரஷிய அதிபர் புதின், அன்னை தெரசா, நடிகர்கள் ரஜினிகாந்த், மம்முட்டி, மோகன்லால், கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட தலைவர்கள், பிரபலங்களின் மெழுகு சிலைகள் வைக்கப்பட்டு உள்ளன.
இந்த நிலையில் இந்த அருங்காட்சியகத்தில் முதல்-அமைச்சர் விஜய்யின் சிலையும் தற்போது வைக்கப்பட்டுள்ளது. கோட்-சூட் அணிந்தபடி முதல்-அமைச்சர் விஜய் கம்பீரமாக நிற்பது போன்று சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. ஊட்டிக்கு சுற்றுலா வரும் பயணிகள் முதல்-அமைச்சர் விஜய்யின் மெழுகு சிலையை ஆர்வமுடன் கண்டு ரசித்து அதன் முன்பு ‘செல்பி’ புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.
ஊட்டி சர்வதேச அருங்காட்சியகத்தில் அமைக்கப்பட்டு இருக்கும் இந்த மெழுகு சிலை தற்போது சமூக வலைதளங்களிலும் கவனம் பெற்று வருகின்றன. ஊட்டியில் குளிர்ச்சியான கால நிலை நிலவுவதால் அங்கு வைக்கப்பட்டு உள்ள மெழுகு சிலைகள் உருகாமல் திடமாகவும், தத்ரூபமாகவும் காட்சி தருகின்றன.
இதனால் ஊட்டி படகு இல்லத்துக்கு படகு சவாரி செய்ய வரும் சுற்றுலா பயணிகள் இங்குள்ள மெழுகு சிலைகள் முன்பு ஆர்வத்துடன் நின்று புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.