S.I. was electrocuted. loss of life
31.10.2024
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 117ஆவது ஜெயந்தி விழாவும் 62வது குருபூஜை விழாவும் அவரது நினைவிடம் அமைந்துள்ள ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன் கிராமத்தில் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. தேவர் ஜெயந்தி விழாவையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
இந்த நிலையில், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவு தினத்தையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பங்களை அகற்றும்போது, மின்சாரம் தாக்கி பரமக்குடி காவல் உதவி ஆய்வாளர் சரவணன் (வயது 36) மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். கொடிகம்பம் மின்கம்பியில் பட்டதில் உதவி ஆய்வாளர் சரவணன் பரிதாபமாக உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த எஸ்.ஐ. குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியினை தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி நகர காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக (எஸ்.ஐ.) பணிபுரிந்துவந்த சரவணன் (வயது 36) த/பெ.வேலு என்பவர் இன்று 31.10.2024 அதிகாலை சுமார் 1.00 மணியளவில் பரமக்குடி நகரில் இரவு நேர ரோந்துப் பணியின்போது கீழே விழுந்த இருப்புக் கம்பத்தை அகற்றும்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.
உதவி ஆய்வாளர் சரவணன் மறைவு தமிழ்நாடு காவல்துறைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
உதவி ஆய்வாளர் சரவணன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் அவருடன் பணியாற்றும் காவல் துறையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு இருபத்தைந்து லட்சம் ரூபாய் நிவாரண நிதியாக வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.