நெல்லையை கலக்கிய வழிப்பறி கொள்ளையர்கள் கைது
1 min read
6.3.2020
நெல்லை அருகேயுள்ள ரெட்டியார்பட்டியைச் சேர்ந்த பரமசிவம் மகன் சுடலை(36). தொழிலாளியான இவர் கடந்த 1ம் தேதி அதிகாலை 4 மணியளவில் தாழையூத்துக்கு நான்கு வழிச்சாலை வழியாக சென்று கொண்டிருந்தார். ராஜகோபாலபுரம் பகுதியில் சென்ற போது பைக்குடன் நின்ற 2 வாலிபர்கள், சுடலையை வழிமறித்து பைக்கில் பெட்ரோல் தீர்ந்து விட்டதால், சிறிதளவு பெட்ரோல் பிடித்து தருமாறு கேட்டுள்ளனர்.
இதனை நம்பிய சுடலை, பைக்கிலிருந்து பெட்ரோலை எடுக்க முயன்ற போது திடீரென அந்த 2 வாலிபர்களும், பதுங்கியிருந்த 3 பேரும் சேர்ந்து ஹெல்மெட்டால் சுடலையை சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயமடைந்து மயங்கியவரிடம் இருந்து ரூ.15 ஆயிரம், செல்போன், பைக் ஆகியவற்றை பறித்துக் கொண்டு அவரை சாலையோரத்தில் போட்டுச் சென்றனர். அப்போது காரில் வந்த சிலர் படுகாயத்துடன் கிடந்த சுடலையை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதே கும்பல் அதிகாலை 5 மணிக்கு தாழையூத்து நான்கு வழிச்சாலையில் விபத்து போல் ஒரு பைக்கை சாலையில் போட்டு, ஒருவர் விழுந்து கிடப்பது போன்று நாடகமாடியுள்ளது. அப்போது தாழையூத்து மின்வாரிய அலுவலகம் அருகே முத்துநகரைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் பாலமுருகன்(49), பாளையங்கோட்டைக்கு பைக்கில் வந்தார்.
விபத்துக்குள்ளாகி ஒருவர் ரோட்டில் கிடப்பதாக கருதிய பாலமுருகன் பைக்கை நிறுத்தினார். அப்போது மின்னல் வேகத்தில் சாலையில் கிடந்த வாலிபர் மற்றும் புதரில் மறைந்திருந்த 4 பேரும் சேர்ந்து பாலமுருகனை ஹெல்மெட்டால் சரமாரியாக தாக்கினர். படுகாயமடைந்து மயங்கியவரிடம் இருந்து ரூ.9 ஆயிரம், ஸ்மார்ட் செல்போன், பைக், வாட்ச் ஆகியவற்றை பறித்துக் கொண்டு மர்ம கும்பல் தப்பிச் சென்றது. மயக்கம் தெளிந்த பாலமுருகன் ஒரு ஆட்டோவில் தாழையூத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்ந்தார்.
இதுகுறித்து சுடலை பாளை குற்றப்பிரிவு போலீசிலும், பாலமுருகன் தாழையூத்து போலீசிலும் புகார் செய்தனர். இது போன்று கடந்த இரு நாட்களாக நெல்லை மாநகரத்தில் நான்கு வழிச்சாலைகளில் இரவு நேரங்களில் தொடர்ந்து வழிப்பறி சம்பவங்கள் நடந்து வந்தது.
நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் தீபக் எம் தாமோர் உத்தரவின் பேரிலும், குற்றப்பிரிவு போலீஸ் துணை கமிஷனர் மகேஷ்குமார், உதவி கமிஷனர் அசோகன் ஆகியோர் ஆலோசனை பேரிலும் பாளை குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி, எஸ்ஐக்கள் பிரான்சிஸ் சேவியர், முருகையா ஆகியோர் கொண்ட தனிப்படையினர் ரெட்டியார்பட்டி மற்றும் தாழையூத்து நான்கு வழிச்சாலையோரங்களில் உள்ள கடைகள், ஓட்டல்களிலுள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர்.
இதையடுத்து வழிப்பறி கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய நெல்லை கொக்கிரகுளம் சிவன்கோயில் வடக்கு தெருவைச் சேர்ந்த முத்துக்குமார் மகன் முத்துவேல் முருகன்(18), பாலசுப்பிரமணியன் மகன் சங்கரநாராயணன்(18), சிவன்கோயில் மேலத்தெரு அப்பாவு பாண்டி மகன் மாரிஇசக்கி(20), நெல்லைடவுன் வாசீக மீண்ட விநாயகர் கோயில் தெரு சங்கரலிங்கம் மகன் ஹரிகரன்(21), தூத்துக்குடி மாவட்டம் வைகுண்டம் கங்கைமுருகன் மகன் மணிகண்டன்(20) ஆகிய ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 4 பைக்குகள், 5 செல்போன்கள், ரூ.15 ஆயிரம், 5 வாட்சுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இவர்களுக்கு வேறு ஏதேனும் திருட்டு வழக்குகளில் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நெல்லையை கலக்கிய வழிப்பறி கொள்ளையர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.