கள்ளிப்பால் கொடுத்து பெண் சிசு கொலை -தாய், தந்தை, தாத்தா கைது
1 min read
கைதான தாய், தந்தை, தாத்தா
6.3.2020
மதுரை மாவட்டம், செக்கானூரணியை அடுத்துள்ள புல்லநேரி கிராமத்தை சேர்ந்தவர் வைரமுருகன் (28). இவரது மனைவி சவுமியா (24). இவர்களது வீடு, மதுரை – தேனி மெயின் ரோட்டில் செக்கானூரணி ரயில்வே கேட் அருகில் உள்ளது. வீட்டு முன்பு பழக்கடை வைத்துள்ளனர். இவர்களுக்கு ஏற்கனவே இரண்டரை வயதில் ெபண் குழந்தை உள்ளது. இந்நிலையில், சவுமியா மீண்டும் கர்ப்பமானார். அவருக்கு கடந்த ஜனவரி 31ம் தேதி, செல்லம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 2வதாக பெண் குழந்தை பிறந்தது. இதனால் தம்பதி விரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது.
கடந்த 2ம் தேதி இரவு, 2வதாக பிறந்த பெண் குழந்தை இறந்து விட்டதாக கூறி, அவர்களே புதைத்து விட்டனர். குழந்தை இறந்து விட்டது என்ற தகவலை உறவினர்கள் யாருக்கும் அவர்கள் தெரிவிக்கவில்லை. இது, அக்கம்பக்கத்தினரிடையே பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. அவர்கள், மீனாட்சிபட்டி விஏஓ விடம் கூறினர்.
விஏஓ மந்தக்காளை, குழந்தை இறப்பில் சந்தேகம் உள்ளதாக செக்கானூரணி காவல் நிலையத்தில் புகார் செய்தார். கிராம மக்களும், பெண் சிசு புதைக்கப்பட்டு இருப்பதாகவும், சுடுகாட்டுக்கு கொண்டு செல்லாததால், சந்தேகம் உள்ளதாகவும், மதுரை அவசர காவல் உதவி எண் 100க்கு தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து 5ம் தேதி மாலை வைரமுத்துவின் வீட்டிற்கு உசிலம்பட்டி டிஎஸ்பி ராஜா, தாசில்தார் செந்தாமரை மற்றும் செக்கானூரணி போலீசார் சென்றனர். அவரது வீட்டின் அருகே உள்ள வேப்பமரத்திற்கு கீழ் தோண்டினர். அங்கு புதைக்கப்பட்டிருந்த பெண் குழந்தையின் உடலை தோண்டி எடுத்து, அங்கேயே உடற்கூராய்வு செய்தனர். இதில் கள்ளிப்பால் கொடுத்து, குழந்தை கொலை செய்யப்பட்டுள்ளது என்பது தெரிய வந்தது.
இது குறித்து செக்கானூரணி போலீசார் வழக்குப்பதிந்து, குழந்தையின் தந்தை வைரமுருகன், தாய் சவுமியா மற்றும் வைரமுருகனின் தந்தை சிங்கத்தேவர் (65) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
பிறந்த 32வது நாளில் கள்ளிப்பால் கொடுத்து பெண் சிசு கொலை செய்யப்பட்ட சம்பவம், செக்கானூரணி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.