July 1, 2025

Seithi Saral

Tamil News Channel

Yes Bank விவகாரத்தால் PhonePe சேவையும் பாதிப்பு

1 min read
Seithi Saral featured Image
PhonePe service is also affected by the Yes Bank affair

6.3.2020

நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் தனியார் வங்கியான YES BANK நிர்வாகத்தை, ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளது. இதனால், யெஸ் வங்கியுடன் கூட்டு வைத்திருந்த PhonePe போன்ற செயலிகளும் பாதிப்படைந்துள்ளன.

பஞ்சாப் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி நிர்வாகத்தில் நிதி மோசடி நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, கடந்த ஆண்டு செப்டம்பரில் அந்த வங்கியை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து அதிரடி காட்டியது ரிசர்வ் வங்கி.

இந்நிலையில், வாராக்கடன், மோசமான நிர்வாகம் உள்ளிட்ட காரணங்களால் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் யெஸ் வங்கி, கடந்த ஆண்டு ஆயிரத்து 500 கோடி ரூபாய் இழப்பை சந்தித்தது. இதனால், அந்த வங்கியை, ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டில் கொண்டுவருவதாக அறிவித்துள்ளது.

இது தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில், வங்கியின் மூலதனத்தை பெருக்கவும், பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை மீட்டெடுப்பதற்காகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரத ஸ்டேட் வங்கியின் முன்னாள் துணை நிர்வாக இயக்குனர் பிரசாந்த் குமார் தலைமையின் கீழ் அடுத்த 30 நாட்களுக்கு யெஸ் வங்கி நிர்வாகம் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் 3-ஆம் தேதி வரை யெஸ் வங்கிக்கு எதிராக எந்தவிதமான சட்டப்பூர்வ நடவடிக்கையும் எடுக்க முடியாது என தெரிவித்துள்ள ரிசர்வ் வங்கி, இந்த ஒரு மாத காலகட்டத்தில் வாடிக்கையாளர் ஒருவர் தங்கள் கணக்கில் இருந்து 50ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே பணம் எடுக்க முடியும் என கூறியுள்ளது.

இதனால், வாடிக்கையாளர்கள் அச்சமடைய வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ள ரிசர்வ் வங்கி, வாடிக்கையாளர்களின் பணத்திற்கும், அதற்கான வட்டிக்கும் எந்தவிதமான பாதிப்பும் இருக்காது என தெரிவித்துள்ளது. மருத்துவம், கல்வி, திருமணம், தவிர்க்க முடியாத அவசர தேவைகளுக்கு வங்கி மேலாளரின் அனுமதியுடன் 5 லட்சம் ரூபாய் வரை பணம் எடுத்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 5 மாலை 6 மணி முதல் அமலுக்கு வந்த இந்த நடவடிக்கையால், ஆன்லைனில் பணப்பரிமாற்றம் செய்ய வாடிக்கையாளர்கள் அவசரம் காட்டியதால், சர்வர் முடங்கியது.

யெஸ் வங்கி ஏடிஎம் மையங்களை நோக்கி வாடிக்கையாளர்கள் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் EMI கட்டுபவர்கள் பணம் செலுத்தும் நிறுவனத்திடம் ஒரு மாத காலத்திற்கு அவகாசம் கோரும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், யெஸ் வங்கியுடன் கூட்டு வைத்துள்ள போன்பே, பாரத்பே ஆகிய செயலிகளின் சேவைகளும் பாதிப்படைந்துள்ளன.

“தற்காலிகமாக சேவை இல்லை. மன்னிக்கவும், விரைவில் சேவையை வழங்குவோம்” என்று போன்பே சார்பில் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது. சில மணி நேரங்களில் சேவை சீரடையும் என்று போன்பே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரபல ஆன்லைன் வணிக தளமான ஃபிளிப் கார்ட், போன்பே, பாரத்பே ஆகியவற்றை நிர்வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.