May 12, 2024

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் 144 தடை- மாவட்ட எல்லைகள் அனைத்தும் மூடப்படும்

1 min read
144 ban act in Tamil Nadu - District boundaries will be closed

23/3/2020

கொரோனா பரவலைத் தடுக்கும் நோக்கில் தமிழகம் முழுவதும் செவ்வாய்க்கிழமை – மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு நடைமுறைக்கு வருகிறது. மேலும் மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்ட எல்லைகளும் மூடப்படும் என்றும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

144 தடை

தமிழகத்தில் 24-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணி முதல் மார்ச் 31-ந் தேதி வரை அனைத்து மாவட்ட எல்லைகளை மூடவும், 144 தடை உத்தரவையும் பிறப்பித்து தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதுபற்றிய அறிவிப்பை சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி வெளியிட்டார்.

அப்போது தனிமைப்படுத்துதல் அவசியம் என்பதால், நோய் பாதித்த நபர்கள் உள்ள மாவட்டங்களில் சில கடுமையான நடவடிக்கைகளை தற்போது மேற்கொள்வது அவசியமாகிறது என்று குறிப்பிட்ட அவர், தடை உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டார்.

மத்திய அரசால் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட நபர்கள் உள்ள மாவட்டங்களான சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு உள்பட தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும், போக்குவரத்து மற்றும் பொது மக்களின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த மாவட்ட எல்லைகள் மூடப்படுகின்றன.

இந்த உத்தரவு 24-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணி முதல் தொடங்கி மார்ச் 31-ந் தேதி வரை நடைமுறையில் இருக்கும்.

144 தடை உத்தரவால் நடைமுறைப்படுத்தப்படும் கட்டுப்பாடுகள் வருமாறு:-.

  • அத்தியாவசிய மற்றும் அவசரப் பணிகள் தவிர மற்ற பொது போக்குவரத்து, தனியார் போக்குவரத்து, கார்கள், ஆட்டோ, டாக்சி போன்றவை இயங்காது. மாநிலங்களுக்கு இடையேயும், மாவட்டங்களுக்கு இடையேயும் ஆன போக்குவரத்து அத்தியாவசிய இயக்கத்திற்கு தவிர மற்ற இயக்கம் முற்றிலும் தடை செய்யப்படும்.
  • அத்தியாவசியப் பொருட்களுக்கான, பால், காய்கறி, மளிகை, இறைச்சி, மீன் கடைகள் போன்றவை தவிர அனைத்துக் கடைகளும், வணிக வளாகங்களும், பணிமனைகளும் இயங்காது.
  • அத்தியாவசியத் துறைகள் மற்றும் அலுவலகப் பணிகள் தவிர மற்ற அரசு அலுவலகங்கள் செயல்படாது. அத்தியாவசியப் பணிகளை மேற்கொள்ளும் அரசுத் துறைகளான மாவட்ட நிர்வாகம், காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, சிறைத்துறை, பொது சுகாதாரம் மற்றும் மருத்துவத் துறை, நீதிமன்றங்கள், உள்ளாட்சி அமைப்புகள் போன்றவை தொடர்ந்து இயங்கும். எனினும், தனிநபர் சுகாதார நடவடிக்கை உட்பட அனைத்து நோய்த் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் அலுவலகங்களில் பின்பற்றப்பட
    வேண்டும்.
  • தனியார் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப மற்றும் உயிர் தொழில்நுட்ப தொழில் அலுவலகப் பணியாளர்கள் வீட்டில் இருந்தே வேலை செய்ய வேண்டும். எனினும், அத்தியாவசிய பணிகளையும் மருத்துவம் உள்ளிட்ட பணிகளையும் மேற்கொள்ளும் தனியார் நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகள் தொடர்ந்து இயங்கும்.
  • அத்தியாவசியமான பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலைகள் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள் குறைந்த பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது.

சம்பளம்

  • அத்தியாவசிய கட்டிடப் பணிகள் தவிர பிற கட்டடப் பணிகளுக்கு தடை விதிக்கப்படுகிறது. எனினும், இந்த நாட்களில் வேலைக்கு வராத தொழிலாளர்களுக்கு சம்பள நிறுத்தம் செய்யக் கூடாது.
  • வீடுகளில் இல்லாமல், விடுதிகள் மற்றும் பிற இடங்களில் தங்கியிருக்கும் பல்லாயிரக்கணக்கான பணியாளர்களின் நலன் கருதி, பார்சல் மூலம் மட்டும் உணவு வழங்கும் வகையில் உணவகங்கள் திறந்திருக்க அனுமதிக்கப்படும். அம்மா உணவகங்கள் வழக்கம் போல செயல்படும்.
    மேற்கண்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.

மேலும் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளிநாடுகளில் இருந்து வந்துள்ள நபர்கள் சுயமாகவே தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு, நோய் அறிகுறி வருகிறதா என கண்காணித்து அரசு மருத்துவமனைகள் மூலமோ, அனுமதிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகள் மூலமோ மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொண்டு, நோய் பாதிப்பு உறுதியானால் உரிய மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும், அதற்கு குடும்ப உறுப்பினர்கள் நோய் தொற்று ஏற்படாத வண்ணம் செயல்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். இதுபோன்ற நடவடிக்கை இந்த கடுமையான தொற்று நோய் மற்ற குடும்ப உறுப்பினர்களுக்கும், மற்றவர்களுக்கும் பரவாமல் தடுக்க பேருதவியாக இருக்கும் என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தடை உத்தரவால், கர்ப்பிணிப் பெண்கள், முதியோர் ஆகியோருக்கு ஏற்படும் இடையூறுகளை அறிந்து, அவற்றை தணிக்க உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள் என்றும் கூறினார்.

உணவு பொருட்கள்

இத்தடை காலத்தில் அத்தியாவசியப் பொருட்களான உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்கள் போன்றவற்றின் போக்குவரத்துக்கும், விற்பனைக்கும் யாதொரும் தடையும் இல்லை.

நோய்த் தடுப்பு நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவது பற்றி அரசு பரிசீலித்து வருகிறது என்றும் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.