May 12, 2024

Seithi Saral

Tamil News Channel

சேலத்தில் 5 பேருக்கு கொரோனா உறுதி -சுகாதார பணிகள் தீவிரம்

1 min read

மத பாட வகுப்பு நடத்திய மசூதியில் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டது.

Corona affirms 5 people in Salem

25.3.2020 சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட இந்தோனேசியாவை சேர்ந்த உலாமாக்கள் உட்பட 5 பேருக்கு கொரோனா பாதிப்பு 25ம் தேதி உறுதி செய்யப்பட்டிருப்பது பரபரப்பை அதிகரித்துள்ளது.

இந்தோனேசியா நாட்டை சேர்ந்த 11 உலமாக்களை கொண்ட இஸ்லாமிய ஆன்மீக குழுவினர் கடந்த 11ம் தேதி சென்னை விமான நிலையத்திற்கு வந்தனர். அங்கிருந்து கார்களில் 12ம் தேதி சேலம் வந்தனர். இந்த குழுவினர் கடந்த 12ம் தேதி சூரமங்கலம் ரஹமத்நகர் மசூதியிலும், 13ம்தேதி முதல் 15ம் தேதி வரை செவ்வாய்ப்பேட்டை பாரா மார்க்கெட் மசூதியிலும் தங்கியிருந்து தொழுகை தொடர்பான பாடவகுப்புகள் நடத்தியுள்ளனர். தொடர்ந்து 16ம் தேதி முதல் 18ம் தேதி வரை பொன்னம்மாப்பேட்டை ஷேக்உமர் மசூதியிலும், 19ம்தேதி முதல் 21ம்தேதி வரை சன்னியாசிகுண்டு புகாரியா மசூதியிலும் தங்கியுள்ளனர். 22ம்தேதி களரம்பட்டி ஜனாத்தூல் பிர்தோஷ் மசூதியில் தங்கி மதபோதனைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையே மத்திய அரசு, மக்கள் ஊடரங்கு அறிவித்த 22ம்தேதி இரவு, களரம்பட்டி பகுதியில் இந்தோனோசியாவை சேர்ந்த மதபோதகர்கள், அனுமதியின்றி தங்கியிருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து வருவாய்த்துறையினர்,சுகாதாரத் துறையினர், போலீசாருடன் சென்று 11 பேரிடமும் விசாரணை நடத்தினர்.

அயல்நாட்டிலிருந்து வந்தவர்கள் என்பதால் கொரோனா தொற்று உள்ளதா? என்பதை கண்டறிய சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவர்களை அனுமதித்தனர். இவர்களோடு உடனிருந்த சென்னையை சேர்ந்த சுற்றுலா வழிகாட்டி உட்பட 5 பேரையும் சிகிச்சைக்கு அனுமதித்தனர். இப்படி 16பேர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில், கடந்த 23ம் தேதி இவர்களுடைய சளி மற்றும் ரத்தம் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.

இதில் உலமாக்கள் 4 பேர் மற்றும் சுற்றுலா வழிகாட்டி ஒருவர் என்று 5 பேரை கொரோனா வைரஸ் தாக்கியிருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. 5 பேருக்கும் கொரோனா பாதிப்பு உள்ளதை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் 25ம் தேதி டிவிட்டரில் அறிவித்தார்.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட 5 பேரையும் கொரோனா தனிமைப்படுத்தும் (கோரன்டைன்) வார்டுக்கு மருத்துவர்கள் மாற்றினர். இவர்களுக்கு தனிமை வார்டில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை சேலத்தில் ஒரே நேரத்தில் 5 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘‘இந்தோனேசியாவில் இருந்து சேலம் வந்த இவர்கள், அந்தந்த மசூதிகளில் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைகளில் தங்கியிருந்துள்ளனர். இவர்கள் தங்கியிருந்த பகுதிகள், இவர்களுக்கு உதவியாக இருந்தவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படலாம் என்ற கோணத்தில் சுகாதார பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட மசூதிகள் அமைந்துள்ள பகுதிகள், அதனை சுற்றியுள்ள குடியிருப்புகள் அனைத்தும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு நோய் தடுப்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து அரசு மற்றும் உயரதிகாரிகளின் ஆலோசனையின் பேரில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது,’’ என்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.