April 28, 2024

Seithi Saral

Tamil News Channel

பஸ்சுக்குள்ள ஒரு ராஜியம் (சிறுகதை) – கடையம் பாலன்

1 min read

bussukkul oru Rajiyam-short story By kadayam Balan

அது நகரத்தை அடுத்த முதல் பஸ் நிறுத்தம். பயணிகளுக்காக கட்டப்பட்ட சிறு நிழற்கூடம், சில முதியவர்களுக்கு மட்டும் அடைக்கலம் கொடுத்திருந்தது. அதற்காக அங்கு பயணிகள் கூட்டம் இல்லை என்று நினைக்க வேண்டாம். பஸ்சுக்காக ஒரு பெருங்கூட்டமே அருகே உள்ள மரத்தடியில் காத்திருந்தது.
“தம்பி… சிவப்புக்கலரு பஸ் எப்போ வரும்?”
கையில் பையுடன் காத்திருந்த முனியம்மாள் கேட்டாள். நடுத்தர வயதை எட்டிய அவள் பழைய மாடலில் சேலையை உடுத்தி இருந்தாலும் அதுதான் நாகரீகம் என்ற எண்ணத்தில் மிடுக்காக தன்னைத்தானே காட்டிக் கொண்டாள்.
“அந்த பஸ் அப்பவே வந்திருக்க வேண்டும். இந்த கூட்டமெல்லாம் அதுக்காகத்தான் காத்திருக்கு…” என்றார் ஒரு பயணி.
“எம்மாடி இவ்ளோ சனமும் அந்த பஸ்சுக்காகவா காத்திருக்கு..”
அடுத்த சில நிமிடங்களில் அந்த சிவப்பு பஸ் வந்து கொண்டிருந்தது. அந்த தனியார் பஸ்சுக்கு அந்த பகுதி பாமரர்கள் வைத்த பெயர் சிவப்பு பஸ். காரணம் வேறு ஒன்றும் அல்ல. பஸ்சின் வெளிப்புறத்தை அதிகமாக சிவப்பு நிறம்தான் ஆக்கிரமித்து இருக்கும்.
சாலையின் திருப்பத்தில் வரும்போதே தான் வருவதை தொடர் ஹாரன் மூலம் அறிவித்துக் கொண்டு வந்தது அந்த பஸ். அந்த பஸ்சை கண்ணால் காணும் முன்னே அதில் ஏற பயணிகள் தயாரானார்கள். முனியம்மாவும் சேலையின் முந்தானையை இடுப்பில் செருகிக் கொண்டு ஓட்டப்பந்தய வீராங்கனையை போல தயாராக இருந்தாள்.
பஸ் வந்து நின்றது.
பணிகள் பலர் இறங்கியபின்னர், அதில் ஒன்றிரண்டு இருக்கைகள் மட்டுமே காலியாக இருந்தன.
“முண்டியடிக்காம வரிசையா ஏறுங்க..”
கண்டக்டர் கத்தியதை யாரும் கண்டு கொள்ளவில்லை.
முனியம்மாவுக்கு… பெண் என்ற முறையில் சிலர் சற்று விலகி நின்று அவள் பஸ்சில் ஏற உதவினார்கள்…
ஆனாலும் முனியம்மாள் தன் சாமர்த்தியத்தால் பஸ்சில் ஏறியதாக ஒரு மிடுக்கு..
பஸ்சுக்குள் ஏறியவுடன் அவள் வீராவேசத்தை காட்டத் தொடங்கினாள்.
பஸ் பஞ்சு மூட்டைகளை ஏற்றிய லாரிபோல் நிறைமாத கர்ப்பிணியாக புறப்பட்டது.
முனியம்மாள் நின்று கொண்டிருந்த இடத்திற்கு நாலு சீட்டுக்கு முன்னால் ஒரு இருக்கை காலியாக இருந்தது. அதன் அருகே நின்றவர்கள் அந்த இருக்கைக்கு போட்டிப்போட்டிருக்க…
“தம்பி… ஏய் மஞ்ச சட்டக்கார தம்பி.. உன்பக்கத்தில இருக்கிற சீட்ட எனக்குபோட்டு வயிப்பா…”
காலியாக இருந்த இருக்கைக்கு அருகில் இருக்கும் அடையாளம் தெரியாத பையனைத்தான் இப்படி கூப்பிட்டு உத்தரவு போட்டாள், முனியம்மாள்.
ஆனால் அந்த மஞ்சள் சட்டைக்காரன் அதை சட்டை செய்யவில்லை. காரணம் பின்னால் நிற்கும் அந்த பெண்ணை அவனுக்கு தெரியவும் செய்யாது. அவள் குரலும் அவனுக்கு கேட்கவில்லை.
அந்த இருக்கை அருகே நின்று கொண்டிருந்தவர்களில் ஒருவன் அந்த சீட்டை பிடித்துக் கொண்டான்.
“டேய்… டேய் அது எனக்குள்ள சீட்…” என்று பின்னால் நின்று கொண்டிருந்த முனியம்மா கத்தினாள். அதோடு கூட்டத்தினரை இடித்து தள்ளிவிட்டுஅந்த இருக்கை அருகே சென்றாள்.
“ஏம்பா நாயா கத்திக்கிட்டு இருக்கேனே.. அதுக்குள்ள உட்காருத.. ம்… எந்திரி…” &இது முனியம்மாள்.
“எதுக்கும்மா எந்திரிக்கணும்.. நான்தானே முதல்ல சீட்ட பிடிச்சேன்…” முனியம்மாளுக்கு பதில் கொடுத்தான் பஸ்சில் இருக்கையை பிடித்த இளைஞன்.
“நான்தான் இந்த மஞ்ச சட்டைகாரங்கிட்ட சொல்லிட்டேனே… எப்பா தம்பி உங்கிட்ட சொன்னேனில்ல…”
அந்த மஞ்சள் சட்டைக்காரனுக்கு எதுவும் புரியவில்லை.. திருதிருவென விழித்தான். அதோடு முனியம்மாளின் தோற்றத்தையும், ஆவேசத்தையும் பார்த்து சற்று கலங்கித்தான் போனான்.
“எப்பா எந்திரிக்கியா? இல்லியா?” முனியம்மாள் மீண்டும் கத்தினாள்.
“எந்திரிக்க மாட்டேன்…”
வாக்குவாதம் அதிகமானது.
பக்கத்தில் இருந்த ஒருவர் “ஏம்மா அவருதான் உட்கார்ந்திட்டாருல்ல.. நீ எதுக்காக கத்தற…” என்றார்.
“உனக்கென்னய்யா.. நீ சும்மாகிட… நீ எந்திரிக்கியா இல்லியா..” என்று கேட்டபடி அவன் சட்டைய பிடித்துவிட்டாள் முனியம்மாள்.
“எம்மா சட்டைய பிடிக்கிற…-?”
அதற்குள் கண்டக்டர் அருகே வந்துவிட்டார்.
“எம்மா அவருதான் உட்கார்ந்திட்டாருல்ல.. அடுத்த ஸ்டாப்பில ஆட்கள் இறங்குவாங்க… உனக்கு சீட் கிடைக்கும்..” என்றார் கண்டக்டர்.
“எப்பா கண்டக்டரு உனக்கும் பொம்பளைங்கன்னா இளக்காரமா போச்சா… எனக்கு அவன் சீட்ட தந்தாகணும்…” ஆவேசமானாள் முனியம்மாள்.
முனியம்மாளின் அதிகாரம், ஆணவத்தை பார்த்த மற்ற பெண்கள் ஒன்றும் பேச முடியாமல் உதட்டில் ஆள்காட்டி விரலை வைத்தபடி இருந்தனர்.
“ஏண்டிம்மா ஆம்பளக்கு.. எத்தனைபேர் சப்போட்டுக்கு வர்றாங்க.. எனக்காக ஒருத்தியாவது பேசுறீங்களா…பொம்பளங்களா இவளுங்க… ஏப்பா… கடைசியா சொல்றேன் எந்திரிக்க போறியா இல்லியா…”
என்று சொல்லியபடியே அடிக்க முயலுவது போல் கையை அவன் முன்னால் நீட்டினாள். அதனை தடுக்க அவன் முயலும்போது அவன் கை முனியம்மாள் மீது பட்டுவிட்டது.
அவ்வளவுதான்… “ஏய் என் கைய பிடிச்சி இழுக்கிறியா? இவ்வளவு கூட்டதிலேயே பொம்பள கைய பிடிக்கிறியா? எவ்வளவு திமிரு.. டிரைவரு பஸ்சை போலீஸ் ஸ்டேசனுக்கு ஓட்டுப்பா..”
&என்று கட்டளையிட்டாள் முனியம்மாள்.
கண்டக்டருக்கு அப்போதுதான் இந்த பெண்ணால் ஏதோ விபரீதம் ஏற்பட்டுவிடுமோ என்று பயம் ஏற்பட்டது. “அரசு பஸ்சா இருந்தா போலீஸ் ஸ்டேஷனுக்கே கொண்டுபோய் இந்த பெண்ணை ஒரு கை பார்த்திடலாம்.. நாம தனியார் பஸ்… ஐந்து நிமிடம் தாமதம் ஆனாலும் கம்பெனிக்கு பதில் சொல்லியாகணும். அதுவும் கேஸ் அதுஇதுன்னு போனா.. நம்ம பாடுதான் திட்டாட்டம்தான்.”
&இப்படி கண்டக்டர் மனதுகுள் பலபல கேள்விகள் அந்த நொடிப்பொழுதில் எழுந்தது.
“அண்ணே கொஞ்சம் எந்திரிச்சி இடம் கொடுத்திடுங்க.. இல்லைன்னா இந்த அம்மா…”
கும்பிடாத குறையாக சீட் பிடித்த இளைஞரிடம் கண்டக்டர் கெஞ்சினார்.
அவருக்காக அந்த நபர் எழுந்து அடாவடி பெண்ணுக்கு இடம் கொடுத்தார்.
“யப்பா.. ஒரு சீட்ட பிடிக்கும் முன்னே எவ்வளவு போராட வேண்டியிருக்கு.. ஒரு பொம்ளன்னுகூட நினைக்க மாட்டேங்கிறாங்க… என்ன உலகம்…”
நியாவாதிபோல அங்கலாயத்துக் கொண்டாள் முனியம்மாள்.
ஒரு வழியாக பிரச்சினை முடிவுக்கு வந்த நிம்மதியில் கண்டக்டர் நின்று கொண்டிருந்த பயணிகளை விலக்கிக் கொண்டு வெளியே பார்த்தார். அதுக்குள்ள அடுத்த ஸ்டாப் வந்துவிட்டது.
வாயில் வீசிலை வைத்து பெருமூச்சுடன் நீளமாக ஊதினார். நகரை விட்டு வெளியே வந்த 2&வது ஸ்டாப் அது.
“ஆலமரம் ஸ்டாப் இறங்குங்க…”
“அதுக்குள்ளாற ஆலமரம் ஸ்டாப் வந்துட்டுதா… கொஞ்சம் விலகுப்பா..” என்றபடி முனியம்மாள் எழுந்தாள். அந்த இருக்கை மட்டுல்ல.. எல்லோரும் அவளுக்காக விலகி வழிவிட்டனர். அது ராஜமரியாதை அல்ல… துஷ்டனை கண்டால் து£ர விலகு…
ஒரு ஸ்டாப் தொலைவுக்காக சண்டைபோட்டு இடத்தை பிடிச்ச முனியம்மாவின் ரவுடித்தனத்தை… அவள் இறங்கிய பிறகு அனைவரும் திட்டினாங்க… அவர்கள் திட்டினது மட்டும் அவளுக்கு கேட்டா மீண்டும் பஸ்சில் ஏறி ஒருபிடி பிடிச்சுடுவா என்ற பயமும் சிலருக்கு இருந்தது.
அய்யய்யோ அந்த பொம்பள டிக்கெட் கூட எடுக்கலியே… டிக்கெட்டை கொடுக்க எங்கே விட்டா? என்று நினைத்தபடி கண்டக்டர் ஜன்னல் வழியாக எட்டிபார்த்து “எம்மா டிக்கெட் எடுக்கல்ல…” கத்தினார்.
அது அவள் காதில் விழுவா போகிறது.

பிரச்சினை விலகினா போதும் என்ற நிலையில் டிரைவர் பஸ்சை விரைவு படுத்தினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.