ஊரடங்கை கடைபிடித்த பெட்ரோல் பங்க் ஊழியரை அடித்து உதைத்த ஏட்டு
1 min read2.4.2020
கோவை மாவட்டம், சூலூர் காவல் நிலையத்தில் சர்க்கிள் ரைட்டராக இருப்பவர் மாதப்பன். இவர், நேற்று மாலை சூலூரில் உள்ள பெட்ரோல் பங்க்கில் தனது பைக்கிற்கு பெட்ரோல் நிரப்ப சென்றார். அவரிடம், பெட்ரோல் நிலையத்தில் இருந்த ஊழியர் அசோக்ராஜா (26), ஊரடங்கு உத்தரவால் பெட்ரோல் விற்பனை பிற்பகல் 2 மணியுடன் முடிந்து விட்டது. எனவே பெட்ரோல் அடிக்க முடியாது என தெரிவித்துள்ளார்.
‘‘நான் போலீஸ்; எனக்கே பெட்ரோல் அடிக்க மாட்டாயா?’’ எனக்கேட்ட ஏட்டு, அசோக்ராஜாவை தனது இருசக்கர வாகனத்தில் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று, பிளாஸ்டிக் பைப்பால் சரமாரியாக தாக்கி, படுகாயத்துடன் வெளியேற்றி உள்ளார். இதற்கிடையே பெட்ரோல் பங்க் ஊழியரை போலீஸ் அழைத்துச்சென்ற தகவலறிந்த பங்க் உரிமையாளர் காவல் நிலையம் வந்துள்ளார். அப்போது பங்க் ஊழியர் அசோக்ராஜா, வலி தாங்காமல் கண்ணீர் விட்டு கதறியுள்ளார். உடனடியாக அவரை கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்த பங்க் உரிமையாளர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து ஏட்டு மாதப்பனை இரவோடு இரவாக ஆயுதப்படைக்கு மாற்றி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார். ஊரடங்கை கடைபிடித்த பங்க் ஊழியரை போலீசே தாக்கிய சம்பவம் சூலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.