July 1, 2025

Seithi Saral

Tamil News Channel

கொரொனா வைரஸ் தானாக அழிந்துவிடும் ; உலக சுகாதார அமைப்பு விஞ்ஞானி தகவல்

1 min read
Coronavirus is automatically extinct; World Health Organization scientist information

19-5-2020

கொரோனா வைரஸ் தானாக அழிந்துவிடும் என்று உலக சுகாதார அமைப்பு விஞ்ஞானி கூறியுள்ளார்.

கொரோனாவின் கொடூரம்

சீனாவில் உருவாகி பல்வேறு நாடுகளுக்கும் பரவி லட்சக்கணக்கானோரை கொன்று குவித்துவருகிறது கொரோனா என்று கொடிய வைரஸ். உலகம் முழுவதும் இதற்கு சுமார் 3 லட்சத்து 18 ஆயிரம் பேர் பலியாகி இருக்கிறார்கள். சுமார் 48 லட்சம் பேர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த கொரோனாவுக்கு இதுவரை மருத்து கண்டு பிடிக்கப்படவில்லை. வராமல் தடுப்பதற்கும் தடுப்பூசியும் இதுவரை அதிகார பூர்வமாக கண்டறிந்து வெளியிடப்படவில்லை.

ஆனால் அதற்கான முயற்சி உலகம் முழுவதும் வேகமாக நடந்து வருகிறது.

கடந்த 2002-ம் ஆண்டு உருவான ‘சார்ஸ்’ என்னும் நோய்க்கும்கூட இதுவரை மருந்துகண்டுபிடிக்கப்படவில்லை. இதேபோல் 2012-ம் ஆண்டில் மத்திய கிழக்கு நாடுகளில் உருவாகி பல்வேறு இடங்களுக்கு பரவி பலரை கொன்று குவித்த ‘மெர்ஸ்’ என்ற நோய்க்கும் இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.
அதற்கான ஆராய்ச்சிகளும், பரிசோதனைகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

அந்த வரிசயைில் இப்போது கொரோனாவும் சேர்ந்துவிட்டது.
அதேநேரம் கொரோனா என்பது சார்ஸ், மெர்ஸ் நோய்க்கிருமிகளை விட கொடூரமானது. மிகவும் ஆபத்தானது. எனவே அதற்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் விஞ்ஞானிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

மருந்து பரிசோதனை

இதற்கிடையே இங்கிலாந்து, சீனாவில் அதற்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு அதை மனித உடலில் செலுத்தி பரிசோதனை செய்யும் முயற்சிகள் நடந்து வருகின்றன.

இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மருந்து கண்டுபிடித்து அதை குரங்கின் உடலில் செலுத்தி பரிசோதனையை செய்ததில், அந்த மருந்து குரங்கின் நுரையீரலுக்குள் கொரோனா வைரசை நுழையவிடாமல் தடுத்து நிறுத்தியது தெரியவந்தது.

மருத்துவ ரீதியாக 8 பேரின் உடல்களில் கொரோனா தடுப்பு மருந்தை செலுத்தி சோதனை நடைபெற்று வருவதாகவும், மேலும் 100 பேர் மருத்துவ பரிசோதனைக்கு முந்தைய நிலைக்கு உட்படுத்தப்பட்டு இருப்பதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது.

இந்த ஆண்டு இறுதிக்குள் மருந்தை கண்டுபிடித்து, அதை பயன்படுத்துவதற்கான ஒப்புதலை பெறுவதில் அமெரிக்காவும் தீவிரமாக இருக்கிறது.

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டாலும், பல்வேறு கட்ட பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு அது பயன்பாட்டுக்கு வருவதில் தாமதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. காரணம் கொரோனாவுக்கு கண்டுபிடிக்கப்படும் மருந்தால் பக்க விளைவுகள் ஏற்பட்டு விடக்கூடாது.

இதுபற்றி அமெரிக்காவின் தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய் நிறுவனத்தின் தலைவர் அந்தோணி பாஸி கூறுகையில், “கொரோனாவுக்கான தடுப்பு மருந்து எப்போது பயன்பாட்டுக்கு வரும் என்பது பற்றி எந்த உத்தரவாதமும் அளிக்க முடியாது” என்றார்.

தானாக அழிந்துவிடும்

இதற்கிடையே கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முன்பே அந்த நோய்க்கிருமி தானாக இயற்கையாகவே அழிந்துவிடும் என்று உலக சுகாதார அமைப்பின் புற்றுநோயியல் துறை முன்னாள் விஞ்ஞானியும், கல்வியாளருமான கரோல் சிகோரா தனது ‘டுவிட்டர்’ பதிவில் தெரிவித்து இருக்கிறார்.
பொதுவாக நாம் கணிப்பதை விட நமக்கு அதிகமாகவே நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதாக தாம் கருதுவதாகவும், எனவே கொரோனா தொற்று பரவும் வேகத்தை கட்டுப்படுத்தினாலே நோய்க்கிருமி படிப்படியாக தானாகவே அழிந்துவிடும் என்றும் அதில் அவர் குறிப்பிட்டு உள்ளார்.கரோல் சிகோராவின் இந்த டுவிட்டர் பதிவு வெளியானதும், உடனடியாக அதுபற்றிய விமர்சனங்களும் எழுந்தன.

உடனே தனது கருத்து குறித்து அவர் விளக்கமும் அளித்தார். எதுவுமே கணிக்க முடியாத தற்போதைய சூழ்நிலையில், இப்படி ஒரு சாத்தியம் உள்ளது என்ற வகையில் தனது சொந்த கருத்தை வெளிப்படுத்தியதாகவும் கரோல் சிகோரா தெரிவித்து உள்ளார்.

எதிர்காலத்தில் நிச்சயமாக என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது என்றும், எனவே நோய்த்தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடிப்பது அவசியம் என்றும் அவர் கூறி இருக்கிறார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.