May 13, 2024

Seithi Saral

Tamil News Channel

மாஸ்க் அவசியம்- எந்த மாஸ்க் சரி -சந்தேகங்களுக்கு மருத்துவ விளக்கம்..

1 min read

மாஸ்க் அவசியம்… எந்த மாஸ்க் சரி…

சந்தேகங்களுக்கு மருத்துவ விளக்கம்..

Mask Required – Medical Explanation

கொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கிப் பழக வேண்டிய நிலையில் இருப்பவர்களைத் தவிர்த்து மற்றவர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய மாஸ்க் மற்றும் கிளவுஸ் பயன்பாடு பற்றிச் சொல்கிறார் தொற்றுநோய் மருத்துவர் சித்ரா.

மாஸ்க்கின் வேலைகள் இரண்டு…

மாஸ்க் இரண்டு வகைகளில் நம்மைப் பாதுகாக்கிறது. ஒன்று மூக்கையும் வாயையும் முழுமையாக மறைத்து மாஸ்க் போடும்போது, நம்மிடம் இருக்கிற வைரஸ் கிருமிகள் அடுத்தவர்களுக்குப் பரவாது. இரண்டாவது, அடுத்தவர்கள் தும்மும்போதும் இருமும்போதும் வெளிப்படுகிற கிருமிகள், நாம் அணிந்திருக்கிற மாஸ்க்கைத் தாண்டி உள்ளே நுழையாது.

எல்லோரும் என் 95 மாஸ்க் அல்லது சர்ஜிக்கல் மாஸ்க் அணிய வேண்டுமா?

அவசியமில்லை. கொரோனாதொற்றாளர்களுடன் நெருங்கிப் பழக வேண்டிய வேலைகளில் இருக்கிற மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் மட்டும் மேலே சொன்ன வகை மாஸ்க்குகளை அணிய வேண்டும். ஏனென்றால், நோயாளிகளிடமிருந்து இவர்களுக்குத் தொற்று ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பிருப்பதால், அதைத் தடுப்பதற்கு என் 95 மற்றும் சர்ஜிக்கல் மாஸ்க் அணிவதுதான் அவர்களைப் பாதுகாக்கும். மற்றவர்கள் டபுள் லேயர் காட்டன் மாஸ்க் அணிந்தாலே போதுமானது.

டபுள் லேயர் மாஸ்க் ஏன் அணிய வேண்டும்?

சிங்கிள் லேயர் காட்டன் மாஸ்க் அணிந்தால் சம்பந்தப்பட்டவர்கள் தும்மும்போதும் இருமும்போதும் வெளிப்படுகிற வைரஸ் காற்றில் பரவிவிடும். இதுவே டபுள் லேயர் காட்டன் மாஸ்க் என்றால், அணிந்தவர்களிடமிருந்து வைரஸ் பரவுவதையே குறைத்துவிடும். இன்றைய வேகமான தொற்றுப்பரவலுக்கு இந்த மாஸ்க்தான் பாதுகாப்பு. இன்னொரு முக்கியமான விஷயம். கொரோனா அறிகுறிகள் வெளிப்படையாகத் தெரிவதற்கு இரண்டு அல்லது மூன்று நாள்களுக்கு முன்னாலிருந்தே பாதிக்கப்பட்டவர்கள் வைரஸை பரப்ப ஆரம்பித்திருப்பார்கள். அவர்கள் இந்த டபுள் லேயர் மாஸ்க் அணிந்திருந்தால் தொற்று பரவாமல் தடுக்க முடியும்.

மற்ற மெட்டீரியல்களில் மாஸ்க் அணியலாமா..?

கூடாது. டபுள் காட்டன் மாஸ்க்தான் நாம் இயல்பாக மூச்சு விடுவதற்கும் வைரஸ் தொற்று பரவாமல் இருப்பதற்கும் சரியான மாஸ்க்.

மாஸ்க் அணிந்துகொண்டால் சமூக இடைவெளி தேவையில்லையா?

மாஸ்க் அணிந்துகொண்டாலும் ஒரு மீட்டர் சமூக இடைவெளி அவசியம் தேவை. அப்போதுதான் வைரஸ் பரவாது.

என் 95 மாஸ்க், சர்ஜிக்கல் மாஸ்க் இரண்டையும் பொது மக்கள் தவிர்ப்பது நல்லது… ஏன்?

முதல் காரணம், இந்த இரண்டு மாஸ்க்குகளை டபுள் லேயர் காட்டன் மாஸ்க்கைப் போல வெகு நேரம் போட்டுக்கொண்டிருக்க முடியாது. இரண்டாவது இவற்றைச் சரியாக அப்புறப்படுத்தவில்லையென்றால், தொற்று இன்னும் வேகமாகப் பரவுவதற்கு வாய்ப்பிருக்கிறது. மூன்றாவது, கொரோனா பிரச்னை முழுமையாகத் தீரும் வரை நீங்கள் மாஸ்க் வாங்கிக்கொண்டே இருக்க வேண்டும். இதுவே டபுள் லேயர் காட்டன் மாஸ்க்குகள் என்றால், துவைத்துத் துவைத்துப் பயன்படுத்தலாம்.

வேலைக்குச் செல்பவர்கள் எட்டு மணி நேரத்துக்கு ஒரே மாஸ்க்கை அணியலாமா?

அதிகம் பேச வேண்டிய வேலையில் இருப்பவர்களுக்கு மாஸ்க் சீக்கிரம் எச்சிலால் நனைந்துவிடும். அப்படிப்பட்டவர்கள் லேசாக அசெளகர்யமாக உணர்ந்தாலும் மாஸ்க்கை மாற்றிவிடுவது அவசியம். மற்றவர்கள் 4 மணி நேரத்துக்கு ஒருமுறை மாஸ்க்கை மாற்றிக் கொள்ளலாம்.

பேசும்போது மாஸ்க்கை இறக்கி விடுவதுபற்றி…

பேசும்போது மட்டுமல்ல, சிலர் இருமும்போதும் தும்மும்போது மாஸ்க்கை கீழே இறக்கிக்கொள்கிறார்கள். அவர்களுக்கு ஒரு வார்த்தை… நீங்கள், உங்களுக்கும் பாதுகாப்பின்மையை ஏற்படுத்திக்கொள்கிறீர்கள். மற்றவர்களுக்கும் பாதுகாப்பின்மை சூழலைக் கொடுக்கிறீர்கள். தயவுசெய்து இப்படிச் செய்யாதீர்கள்.

மாஸ்க்கின் முன் பகுதியைத் தொடக்கூடாது… ஏன்?

யாரோ ஒருவர் தும்மியதால் வெளிப்பட்ட வைரஸ் உங்கள் மாஸ்க்கின் மீது ஒட்டியிருக்கலாம். அந்தப் பகுதியை நீங்கள் தொடும்போது, நீங்களும் தொற்றுக்கு ஆளாகலாம்.

சாயம் போகும் காட்டன் மாஸ்க்குகள் பற்றி…

டார்க் கலர் காட்டன் மாஸ்க்குகள்தான் சாயம் போகும். அதனால், இந்த வகை மாஸ்க்குகளைத் தவிர்த்துவிட்டு, வெளிர் நிற காட்டன் மாஸ்க்கைப் பயன்படுத்துங்கள்.

சாயம் போகும் மாஸ்க் சரும அலர்ஜியை ஏற்படுத்துமா?

வாய்ப்பிருக்கிறது. சென்சிட்டிவ் சருமம் கொண்டவர்களுக்கு அந்தச் சாயம் அரிப்பை ஏற்படுத்தலாம். தொடர்ந்து அதைச் சுவாசிக்கும்போது சுவாசக்குழாயிலும் அசெளகர்யமாக உணர்வீர்கள். வெளிர்நிற காட்டன் மாஸ்க்குகளே பாதுகாப்பு.

தொடர்ந்து மாஸ்க் போட்டிருந்தால் உடலில் ஆக்ஸிஜன் லெவல் குறையுமா?

வாக்கிங், ஜாகிங் செய்பவர்கள் மற்றும் அதிக உடலுழைப்பு உள்ளவர்களுக்கு ஆக்ஸிஜன் தேவை மற்றவர்களைவிட அதிகம் இருக்கும். தொடர்ந்து மாஸ்க் போட்டுக்கொண்டு மேலே சொன்னவற்றைச் செய்துகொண்டிருந்தால் அவர்களுக்கு வேண்டுமானால் ஆக்ஸிஜன் பற்றாக்குறை வரலாம். மற்றவர்களுக்கு வாய்ப்பில்லை.

கொரோனா vs சாதாரண சளி, காய்ச்சல் என்ன செய்ய வேண்டும் நாம்?

ஹீமோகுளோபின் குறைவாக இருப்பவர்களுக்கு ஆக்ஸிஜன் இன்டேக் குறைவாக இருக்கும். மாஸ்க் பயன்பாடு அந்தப் பிரச்னையை இன்னும் அதிகரிக்குமா?

அனீமிக்காக இருப்பவர்கள் இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிடுங்கள். கூடவே தினமும் மூச்சுப்பயிற்சி செய்யுங்கள். உடலுக்குத் தேவையாக ஆக்ஸிஜன் கிடைத்துவிடும்.

வெளிர் நிற டபுள் லேயர் காட்டன் மாஸ்க்கை பயன்படுத்துங்கள்.

கிளவுஸ்… எது சரி, எது தவறு?

மருத்துவத்துறையில் இருப்பவர்களைத் தவிர மற்றவர்கள் கிளவுஸ் அணிய வேண்டிய அவசியமில்லை என்றுதான் சொல்வேன். கைகளைச் சுத்தமாக வைத்திருங்கள். சானிட்டைசர் பயன்படுத்துங்கள். கைகளால் முகத்தைத் தொடாதீர்கள். மற்றபடி சர்ஜிக்கல் கிளவுஸ், கம்பளி கிளவுஸ் எல்லாம் பொதுமக்களுக்கு தேவையே இல்லை…

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.