பெண்களை வீட்டில் அடைத்து வைத்து பாலியல் தொல்லை; 2 பேர் கைது
1 min readHarassing women at home; 2 arrested
30-6-2020
பெண்களை வீட்டில் அடைத்து வைத்து பாலியல் தொல்லை கொடுத்தாக மக்கள் தேசம் கட்சி பிரமுகர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
பெண்களுடன் 2 வாலிபர்கள்
சேலம் மாவட்டம் ஆத்தூரில் நடந்துள்ளது.
ஆத்தூர் மந்தைவெளி பகுதியை சேர்ந்தவர் சந்து மணி ராஜா. இவரது மகன் சின்னதுரை (வயது 30). இவர் மக்கள் தேசம் கட்சியின் நகர செயலாளராக உள்ளார். ஆத்தூர் ஜோதி நகரை சேர்ந்தவர் மோகன்பாபு (28).
நண்பர்களாக இவர்கள் இரண்டு பேரும் ஆத்தூர் விநாயகபுரத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கு தங்கி இருந்தனர்.
இவர்களது வீட்டில் 4 பெண்கள் அடைக்கப்பட்டு உள்ளதாக ஆத்தூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் உமாசங்கர், சப்-இன்ஸ்பெக்டர் அமிர்தலிங்கம் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று அந்த வீட்டுக்குள் புகுந்தனர். அப்போது அந்த வீட்டில் சின்னதுரை, மோகன்பாபு ஆகியோர் 4 பெண்களுடன் இருந்தனர்.
பாலியல் தொல்லை
போலீசாரை பார்த்ததும் அந்த 4பெண்களும் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.
போலீசாரின் விசாரணையில் மோகன்பாபு, சின்னதுரை ஆகியோர் அந்த 4 பெண்களை வீட்டில் அடைத்து வைத்து பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. மேலும் இதே போன்று பல பெண்களை அடைத்து வைத்து சித்ரவதை செய்ததும் தெரியவந்தது.
சின்னதுரையும் மோகன்பாவுவும் செல்போன் மூலமும், முகநூல், வாட்ஸ்-அப் உள்ளிட்ட வலைத்தளங்களில் பல பெண்களை பெண்களை தொடர்பு கொள்வார்கள். பின்னர் அந்த பெண்களில் யாருக்காவது ஆண்களுடன் தொடர்பு உள்ளதா? என்பதை அறிவார்கள். கணவர் தவிர வேறு ஆண்களுடன் தொடர்பு உள்ள பெண்களை கண்டுபிடிப்பார்கள்.
உடனே அந்த பெண்களை தொடர்பு கொண்டு, ஆண்களுடன் உள்ள தொடர்பை உங்களது குடும்பத்தில் தெரிவிக்காமல் இருக்க வேண்டும் என்றால், எங்களது வீட்டுக்கு வந்து, நாங்கள் சொல்லும் நபர்களுடன் உல்லாசமாக இருக்க வேண்டும் என்று கூறி மிரட்டுவார்கள். இப்படி 10-க்கும் மேற்பட்ட பெண்களை தாங்கள் வாடகைக்கு எடுத்த வீட்டுக்கு அழைத்து வந்து உல்லாசமாக இருப்பார்கள். அதோடு வேறு சிலருடனும், அந்த பெண்களை உல்லாசமாக இருக்க வைத்து பணம் சம்பாதித்துள்ளனர்.
தொழில் அதிபர்கள்
ஆத்தூர், நரசிங்கபுரம் பகுதியை சேர்ந்த வாலிபர்கள், தொழில் அதிபர்கள் ஆகியோர் இவர்களிடம் சிக்கும் பெண்களை கட்டாயப்படுத்தி உல்லாசமாக இருந்துள்ளனர். மேலும் பூங்கா, சினிமா தியேட்டர் என பொது இடங்களில் ஆண்களுடன் வரும் பெண்களை நோட்டமிட்டு அவர்களையும் மடக்குவார்கள். குறிப்பாக கணவரை தவிர்த்து வேறு நபருடன் வரும் பெண்களை கண்டுபிடித்து, அவர்களை மிரட்டி தங்களது வலையில் விழ வைத்து விடுவார்கள்.
இவர்களிடம் தொழில் அதிபர்கள் சிலரின் மனைவிகளும், கணவரை பிரிந்து வாழும் பெண்களும் சிக்கி உள்ளனர்.
இதைத்தொடர்ந்து போலீசார் மோகன்பாபு, சின்னதுரை ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
அவர்களிடம் சிக்கி இருந்த 4 பெண்களையும் போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். கைதான 2 பேரும் எத்தனை பெண்களை சிக்க வைத்து கொடுமைப்படுத்தி உள்ளனர்? அவர்களுக்கு வேறு யாருடன் தொடர்பு உள்ளது? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இதில் தொடர்புடைய சில வாலிபர்களை போலீசார்
தேடி வருகிறார்கள்.
பொள்ளாச்சி சம்பவம்
இதற்கு முன்பு கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் மாணவிகள், இளம் பெண்களை காதல் வலையில் வீழ்த்தி அவர்களை ஆசைவார்த்தை கூறி, பாலியல் பலாத்காரம் செய்ததுடன், வீட்டில் அடைத்து வைத்து ஒரு கும்பல் கொடுமைப்படுத்தியது. மேலும் வீடியோ எடுத்தும் அந்த கும்பல் பெண்களை மிரட்டியது. அந்த கும்பலை கடந்த சில மாதங்களுக்கு முன்பு போலீசார் கைது செய்தனர்.
இதே போல குமரி மாவட்டம் நாகர்கோவிலில் காசி என்ற வாலிபர் சமூகவலைத்தளங்கள் மூலம் பல பெண்களுடன் பழகி, அவர்களை ஆபாச படம் எடுத்து மிரட்டினார். அந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
இப்போது சேலம் ஆத்தூரிலும் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது அந்த பகுதி மக்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.