தந்தை-மகன் சாவில் தடயங்கள் அழிக்கப்படலாம்; ஐகோர்ட்டு கருத்து
1 min read
Traces of father-son death may be destroyed; The concept of High court
30-6-2020
சாத்தான்குளம் தந்தை-மகன் சாவில் சிபிஐ விசாரணையை தொடங்குவதற்குள் தடயங்கள் அழிக்கப்பட வாய்ப்பு உள்ளது என்ற மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கூறினார்கள்.
தந்தை மகன் சாவு
சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் போலீசார் அடித்து சித்ரவதை செய்ததில் இறந்ததாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த மரணம் குறித்த வழக்கை ஐகோர்ட்டு தானாக விசாரணை மேற்கொண்டது. இந்த வழக்க விசாரணை இன்று(செவ்வாய்க்கிழமை) மதுரை ஐகோர்ட்டு கிளையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது, முதல்நிலை பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் நீதித்துறை நடுவர் அளித்த விசாரணை அறிக்கையின் அடிப்படையில் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
அவர்கள் கூறியதாவது:-
தடயங்களை அழிக்க வாய்ப்பு
இந்த வழக்கை பொறுத்தவரை நீதிமன்றம் தாமதத்தை விரும்பவில்லை. பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் நீதியை எதிர்நோக்கி காத்துள்ளனர். ஆகவே, ஒரு நொடி கூட வீணாகக்கூடாது.
சிபிஐ விசாரணையை தொடங்குவதற்குள் தடயங்கள் அழிக்கப்பட வாய்ப்பு உள்ளது. எனவே, சிபிஐ வசம் ஒப்படைக்கபப்டும் வரை, நெல்லை சரக டிஐஜி இந்த வழக்கு விசாரணையை ஏற்க இயலுமா? அல்லது நெல்லை சிபிசிஐடி உடனடியாக வழக்கு விசாரணையை கையில் எடுக்க இயலுமா? என்பது குறித்து தகவல் பெற்று மதியம் தெரிவிக்க வேண்டும்.
முதல்நிலை பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் நீதித்துறை நடுவரின் அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டுவிட்டது. அதனடிப்படையில் அதிக காயங்கள் இருந்தது உறுதி செய்யப்பட்டிருப்பதால் வழக்கு பதிவு செய்ய போதிய முகாந்திரம் உள்ளது.
இவ்வாறு நீதிபதிகள் கூறினார்கள்.
சி.பி.சி.ஐ.டி விசாரணை
பின்னர், மதியம் இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தந்தை மற்றும் மகன் உயிரிழந்த வழக்கை சிபிஐ விசாரிக்கும் வரை சிபிசிஐடி விசாரிக்கலாம் என்றும் நெல்லை சிபிசிஐடி அதிகாரி இன்றே விசாரணை தொடங்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.