கூலிப்படைக்கு ரூ.15 லட்சம் பேரம் பேசி கணவரை கொன்ற மனைவி
1 min read30.6.2020
Wife who killed her husband after bargaining Rs 15 lakh for mercenary
தஞ்சையில் பைனான்ஸ் அதிபர் கொலை வழக்கில் 2வது மனைவி, ரூ.15லட்சம் பேரம் பேசி கூலிப்படை மூலம் கணவரை கொன்றது அம்பலமானது. இதையடுத்து திருச்சி கூலிப்படையைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
தஞ்சை விளார் ரோடு காயிதேமில்லத் நகரைச் சேர்ந்தவர் யூசுப். பைனான்ஸ் அதிபர். இவர் கடந்த 25ம் தேதி வல்லம் அருகே வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து வல்லம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வந்தனர்.
இந்நிலையில் யூசுப்பின் 2வது மனைவி அசிலா, கூலிப்படையை சேர்ந்த திருச்சி மேக்குடி நடுபட்டி தங்கராஜ் மகன் சகாதேவன்(24), காந்திமார்க்கெட் சுண்ணாம்புகார தெரு ராஜேந்திரன் மகன் பிரகாஷ்(25) ஆகியோரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
இதுபற்றி போலீசார் கூறியதாவது:
தஞ்சையை சேர்ந்த ஜோசப்(45) குவைத்தில் பணியாற்றினார். அப்போது அங்கு பணியாற்றிய இலங்கையை சேர்ந்த அசிலா(40) என்ற ரசியாவுடன் காதல் ஏற்பட்டது. அவரை மணமுடிக்க முடிவு செய்த ஜோசப் இஸ்லாமிய மதத்திற்கு மாறியதுடன், பெயரையும் யூசுப் என மாற்றிக் கொண்டார். பின்னர் இருவரும் தஞ்சாவூர் வந்து திருமணம் செய்து கொண்டு விளார் சாலையில் வசித்து வந்தனர். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
யூசுப், காயிதே மில்லத் நகரில் அப்பார்ட்மெண்ட் வீடுகள் மற்றும் சொத்துக்கள், விவசாய பண்ணை என பல சொத்துகளை தனது பெயரில் வாங்கி குவித்தார். பின்னர் மீண்டும் வெளிநாடு சென்றார்.
இந்நிலையில் மனவைியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பின்னர் குவைத்திலிருந்து வந்த யூசுப் தனது சொத்து பத்திரம், பணம், நகையை விளார் சாலையில் உள்ள தனியார் வங்கி லாக்கரில் வைத்து விட்டு மீண்டும் குவைத் சென்றுவிட்டார்.
அதன் பின்னர் அசிலா அந்த தனியார் வங்கியின் மேனேஜரை கையில் வைத்து கொண்டு யூசுப்பின் லாக்கரை திறந்து பணம், நகை உள்ளிட்டவற்றை எடுத்து செலவு செய்துள்ளார்.
குவைத்திலிருந்து வந்த யூசுப் வங்கிக்கு சென்று பார்த்தபோது லாக்கரில் எதுவும் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுதொடர்பாக மனைவி, அவருக்கு உடந்தையாக இருந்த வங்கி மேலாளர் மீது போலீசில் புகார் அளித்தார். இதில் அசிலா சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் வெளியே வந்தார்.
பிறகு வீட்டிற்கு சென்ற அசிலாவை குழந்தைகளுடன் யூசுப் வீட்டைவிட்டு துரத்தி விட்டார். அதன் பின்னர் அசிலா, திருச்சியை சேர்ந்த சகாயம் என்பவர் உதவியுடன் திருச்சியில் குடியேறினார். நீதிமன்றத்தில் விவகாரத்து வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் யூசுப் சொத்தை விற்று பல பெண்களுடன் ஜாலியாக இருந்து வந்துள்ளார். இது அசிலாவுக்கு தெரியவந்ததால் ஆத்திரமடைந்தார். தன்னையும், குழந்தைகளையும் தெருவில் விட்டுவிட்டு பெண்களுடன் கும்மாளம் அடித்து வந்ததால் யூசுப்பை தீர்த்து கட்ட கூலிப்படையினர் மூலமாக திட்டம் தீட்டினார்.சகாயம் மூலம் திருச்சி கூலிப்படையினரிடம் யூசுப்பை கொலை செய்ய ரூ.15 லட்சம் பேரம் பேசி ரூ 2 லட்சம் அட்வான்ஸ் கொடுத்துள்ளார். யூசுப் கதையை முடித்த பிறகு மீதி பணத்தை தருவதாக கூறினார்களாம்.
இந்நிலையில் திருச்சி கூலிப்படையினர் கடந்த 25ம் தேதி 2 பைக்குகளில் 6 பேர் சென்று யூசுப்பை வெட்டி கொன்றுவிட்டு கல்லணை வழியாக திருச்சிக்கு தப்பி சென்றது தெரியவந்தது.
இதையடுத்து சகாதேவன், பிரகாஷ் மற்றும் அசிலா ஆகியோரை கைது செய்தனர். மேலும் கூலிப்படையை சேர்ந்த சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.