April 27, 2024

Seithi Saral

Tamil News Channel

தூத்துக்குடி எஸ்பியாக ஜெயக்குமார் பொறுப்பேற்பு : சட்டம், ஒழுங்கை பாதுகாக்க உறுதி

1 min read

தூத்துக்குடி எஸ்பியாக ஜெயக்குமார் பொறுப்பேற்பு : சட்டம், ஒழுங்கை பாதுகாக்க உறுதி!!

Jayakumar as Tuticorin SP: Responsibility to protect law and order

தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என புதிய எஸ்பியாக பொறுப்பேற்றுள்ள ஜெயக்குமார் தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஊரடங்கின்போது கடை திறக்கப்பட்ட விவகாரத்தில் தந்தை, மகனான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோரை சாத்தான்குளம் போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்று தாக்கியதால் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அனைத்து அரசியல் கட்சிகளும் கண்டித்துள்ளன.

இதையடுத்து சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும் அந்த காவல் நிலையத்தில் பணிபுரிந்த அனைவரும் கூண்டோடு மாற்றப்பட்டு, காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டனர். இதையடுத்து சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளராக வடசேரி காவல் நிலைய ஆய்வாளர் பெர்னாட் சேவியர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும், தூத்துக்குடி மாவட்ட எஸ்பி அருண் பாலகோபாலன் மாற்றப்பட்டு, விழுப்புரம் எஸ்பியாக இருந்த ஜெயக்குமார் தூத்துக்குடி மாவட்ட எஸ்பியாக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில்,தூத்துக்குடி மாவட்டத்தின் புதிய எஸ்பி ஜெயக்குமார் இன்று காலை பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “தூத்துக்குடி மாவட்டத்தில், சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து பிரச்சனைனைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். பொதுமக்களுடன் காவல்துறை நல்லுறவுடன் செயல்படும்” என்று தெரிவித்தார்.

தூத்துக்குடி புதிய எஸ்பி ஜெயகுமார், விழுப்புரம் மாவட்ட மக்களிடம் நல்ல மதிப்பைப் பெற்றவர். ரவுடிகள் ஒழிப்பு நடவடிக்கையில் திறம்பட செயல்பட்டவர் என்று கூறப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறையின் மீது அடுத்தடுத்து கிளம்பும் புகார்களுக்கு இடையே எஸ்பியாக ஜெயக்குமார் நியமிக்கப்பட்டுள்ளதால் மக்களிடம் காவல்துறைக்கு நன்மதிப்பைப் பெற்றுத் தரும் வகையிலும், பொதுமக்களுக்கு காவல்துறை நண்பன் என்ற அளவிலும் செயல்படுவதற்கான நடவடிக்கைகளை ஜெயக்குமார் எடுப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.