May 15, 2024

Seithi Saral

Tamil News Channel

கொரோனாவை குணப்படுத்த ‘மூலிகை மைசூர்பா’ விற்ற கடைக்கு சீல்

1 min read

கொரோனா குணமடைய மைசூர்பா விற்ற கடைக்கு சீல் வைக்கப்படுகிறது.

9.7.2020

Shop to sell herbal Mysorephala cure for corona

‘மூலிகை மைசூர்பா’ தின்றால் ஒரேநாளில் கொரோனா குணமாகும் என விளம்பரப்படுத்திய கோவையில் உள்ள மைசூர்பா கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

கோவை சின்னியம்பாளையம் அடுத்த தொட்டிபாளையம் பகுதியில் ஸ்வீட்ஸ் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையின் உரிமையாளர் மூலிகை மைசூர்பா மூலமாக ஒரே நாளில் கொரோனா பாதித்தவர்கள் குணமாகும் அதிசயம் என நோட்டீஸ் விநியோகித்து வந்தார். இது சமூக வலைதளங்களில் வைராகியது.

இதையடுத்து, ேகாவை மாவட்ட கலெக்டரின் உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்புத்துறை, சுகாதாரத்துறை மற்றும் சித்த மருத்துவர்கள் குழுவினர் நேற்று அந்த கடையில் அதிரடி ஆய்வு நடத்தினர். ஆய்வில், ஸ்வீட் கடை தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனத்தில் மூலிகை மைசூர்பா, கொரோனா கொல்லி மைசூர்பா பச்சை நிறத்தில் 50 கிராம் பாக்கெட்டுகளாக (2 துண்டுகள்) ரூ.50க்கு விற்பனை செய்து வந்ததும், கிலோ ரூ.800க்கு விற்பனையானதும் தெரியவந்தது.

இதையடுத்து, எவ்வித அனுமதியுமில்லாமல் கொரோனா கொல்லி மைசூர்பா என தயாரித்தது, ஒரே நாளில் கொரோனா நோய் குணமடையும் என தவறான விளம்பரம் செய்தது ஆகியவற்றுக்காக கடையின் உரிமையாளர் மீது உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயம் சட்ட பிரிவுகள் 53 மற்றும் 61-ன் கீழ் உணவுத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர். ேமலும் கடையின் உரிமம் ரத்து செய்யப்பட்டு அங்கிருந்த சுமார் 120 கிலோ மைசூர்பா பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த ஆய்வில், மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி தமிழ்செல்வன், மாவட்ட இணை இயக்குனர் கிருஷ்ணா, மாவட்ட சித்த மருத்துவர் தனம் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் ஈடுபட்டனர். இது குறித்து கோவை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் தமிழ்செல்வன் கூறியதாவது: மைசூர்பா விற்பனை குறித்து விசாரணை நடத்தப்பட்டது. சுக்கு, மிளகு, திப்பிலி, சித்தகத்தை, திரிபலா, மஞ்சள்தூள், முருங்கையிலை, அகத்தி இலை, கற்பூரவல்லி இலை என 19 மூலிகைகளை கொண்டு மைசூர்பா செய்யப்பட்டதாகவும், ஒரே நாளில் கொரோனாவை குணப்படுத்தும் என விளம்பரப்படுத்தி விற்பனை செய்வதும் தெரியவந்தது.

இதையடுத்து, அங்கிருந்த கொரோனா கொல்லி மைசூர்பா சுமார் 120 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ. ஒரு லட்சம். மேலும், எந்த துறையிலும் அனுமதி பெறாமல் விற்பனை செய்ததால் சம்மந்தப்பட்ட கடையின் மீது உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கடைக்கு சீல் வைக்கப்பட்டு, கடையின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், கடையில் எவ்வித தயாரிப்பு மற்றும் விற்பனை செய்யக்கூடாது என எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.

கொரோனா காலத்தை பயன்படுத்தி இதுபோன்ற தவறான விளம்பரங்கள் செய்து உணவு சார்ந்த பொருட்களை விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.