May 20, 2024

Seithi Saral

Tamil News Channel

நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் அதிகரித்து வரும் கொரோனா

1 min read


Corona growing in Nellai, Tenkasi and Thoothukudi

12-7-2020

நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 6 பேர் பலியானார்கள். தென்காசி மாவட்டத்தையும் சேர்த்து புதிதாக 320 பேருக்கு தொற்று ஏற்பட்டு உள்ளது.

சென்னையில் தாண்டவம் ஆடிய கொரோனா தற்போது பிற மாவட்டங்களுக்கும் வேகமாக பரவி வருகிறது.

நெல்லை மாவட்டத்திலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அதேநேரம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் பலர் சிகிச்சை மூலம் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பி வருகின்றனர்.

அதேநேரம் கொரோனாவால் இறப்பவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. நெல்லை மாவட்டத்தில் ஏற்கனவே 10 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ள நிலையில், நேற்று(சனிக்கிழமை) ஒரே நாளில் மட்டும் போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 4 பேர் இறந்துள்ளனர்.

ஆயுதப்படை இன்ஸ்பெக்டர்

நெல்லை மாநகர போலீஸ் ஆயுதப்படை பிரிவில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர் சாது சிதம்பரம் (வயது 55). இவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு நெல்லை சந்திப்பில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று அதிகாலை அவர் பரிதாபமாக இறந்தார். இன்ஸ்பெக்டர் மறைவுக்கு மாநகர போலீஸ் துணை கமிஷனர் (சட்டம்-ஒழுங்கு) சரவணன் இரங்கல் தெரிவித்து உள்ளார்.

இதேபோல் நெல்லை சந்திப்பு தனியார் ஆஸ்பத்திரியில் சங்கர்நகர் நாராயண நகர் பகுதியை சேர்ந்த 87 வயது முதியவர் கொரோனா பாதிப்பால் நேற்று காலை இறந்தார். அம்பை அருகே உள்ள பள்ளகால் பொதுக்குடியை சேர்ந்த 64 வயது பெண் கொரோனா தொற்றால் நெல்லை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இதுதவிர மேலப்பாளையத்தை சேர்ந்த 51 வயது முதியவரும் ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவருக்கு மூச்சு திணறல், காய்ச்சல், இருமல் இருந்தது. இந்த நிலையில் நேற்று அவரும் பரிதாபமாக இறந்தார். அவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

80 பேர் பாதிப்பு

நெல்லை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 80 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,629-ஆக உயர்ந்தது. இவர்கள் நெல்லை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

நேற்று சிகிச்சை முடிந்து அரசு ஆஸ்பத்திரியில் இருந்து 39 பேரும், சித்தா கல்லூரியில் இருந்து 6 பேரும், சந்திப்பில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் இருந்து 2 பேரும் வீடு திரும்பி உள்ளனர். இத்துடன் சேர்த்து மொத்தம் 804 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர்.

தென்காசி மாவட்டம்

தென்காசி மாவட்டத்திலும் நேற்று கொரோனா தொற்று உயர்ந்துள்ளது. ஒரே நாளில் மட்டும் அதிகபட்சமாக 65 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதில் உள்ளூர் பரவலாக 61 பேருக்கும், வெளியூரில் இருந்து வந்தவர்களில் 4 பேருக்கும் கொரோனா கண்டறியப்பட்டது.

இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 665-ஆக அதிகரித்து உள்ளது. இதில் 299 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தூத்துக்குடியில் 2 பேர் சாவு

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு வருகின்றனர். தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட 12 பேர் ஏற்கனவே பரிதாபமாக இறந்து உள்ளனர்.

இந்த நிலையில் காயல்பட்டினத்தை சேர்ந்த 58 வயது நிரம்பிய ஆண் ஒருவர் கொரோனா தொற்று காரணமாக சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு இருந்தார். அவர் நேற்று காலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார்.

இதே போன்று தூத்துக்குடியை சேர்ந்த 50 வயது பெண் கடந்த 9-ந் தேதி கொரோனா தொற்று காரணமாக சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு இருந்தார். அவர் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தார். இதனால் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் இறந்தவர்களின் எண்ணிக்கை 14-ஆக அதிகரித்து உள்ளது.

2 ஆயிரத்தை தாண்டியது

தூத்துக்குடி மாவட்டத்தில். நேற்று மட்டும் 175 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். பிரையண்ட்நகர், அமுதாநகர், டூவிபுரம், கிருஷ்ணராஜபுரம் உள்பட மாநகராட்சி பகுதியில் மட்டும் 62 பேரும், கோவில்பட்டி பங்களாதெரு, மந்திதோப்பு, ஆறுமுகநேரி, ஆத்தூர், ஏரல் உள்ளிட்ட பகுதிகளில் என மொத்தம் 175 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 124-ஆக அதிகரித்து உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.