சீனா விவகாரத்தில் இந்தியா பெரிய விலை கொடுக்க வேண்டியது வரும்; ராகுல்காந்தி குற்றச்சாட்டு
1 min read
India will have to pay a heavy price in the China affair; Rahul Gandhi charge
19-7-2020
சீனாவுடனான எல்லை விவகாரத்தில் மத்திய அரசின் கோழைத்தனமான செயல்பாடுகளுக்கு இந்தியா பெரிய விலை கொடுக்க வேண்டிய நிலை உருவாகும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
இந்தியா-சீனா எல்லையில் மோதல்
இந்தியா – சீனா எல்லையான கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த மாதம் இரு நாட்டு வீரர்களுக்கும் இடையே நடைபெற்ற மோதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் நிலவியது.
மேலும் பாங்காங் ஏரி கால்வான் பள்ளத்தாக்கு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள இந்திய எல்லையில் ஊடுருவியிருந்த சீனப்படையினர் அந்த பகுதிகளை உரிமை கொண்டாடி வந்தனர்.
இதனை அடுத்து இரு நாட்டு ராணுவத்தளபதிகள் மட்டத்தில் நடைபெற்ற பல கட்ட பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு இந்தியப் பகுதிகளில் இருந்து சீனப்படைகள் பின்வாங்கி வருகின்றன.
ராகுல் விமர்சனம்
இந்த எல்லை விவகாரம் தொடர்பாக தொடர்ந்து தனது கருத்துக்களை பதிவிட்டு வரும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, சீனாவுடனான எல்லைப் பிரச்சினையில் மத்திய அரசின் நடவடிக்கைகளையும் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.
இந்தியப் பகுதிகளை சீனா கைப்பற்றவில்லை என பிரதமர் மோடி தெரிவித்திருந்த கருத்துக்கு தொடர்ந்து மற்றுப்பு தெரிவித்து வந்த ராகுல்காந்தி, பிரதமர் சீனாவிடம் சரணடைந்து விட்டதாக விமர்சித்தார்.
மேலும் இந்திய பகுதிகளை சீனாவுக்கு மத்திய அரசு தாரைவார்த்துள்ளதாகவும் குற்றம்சாட்டி வந்தார்.
இந்தநிலையில் சீனாவுடனான எல்லை விவகாரத்தில் மத்திய அரசின் கோலைத்தனமான செயல்பாடுகளுக்கு இந்தியா பெரிய விலை கொடுக்கவேண்டிய நிலை உருவாகும் என பிரிட்டன் முன்னாள் பிரதமர் நெவில் சேம்பர்லெய்ன் வழிமுறையை மேற்கோள் காட்டி ராகுல்காந்தி டுவிட் செய்துள்ளார்.
அதில் சீனா எங்கள் நிலத்தை கையகப்படுத்தியுள்ளது, ஆனால் மத்திய அரசு சேம்பர்லேய்ன் வழியை பின்பற்றி நடக்கிறது. இது சீனாவை மேலும் தைரியப்படுத்தும்.
மத்திய அரசின் இந்த கோழைத்தனமான செயல்களால் இந்தியா பெரும் விலை கொடுக்கப் போகிறது. என அவர் பதிவிட்டுள்ளர்.
யார் நெவில் சேம்பர் லேன்?
யார் அந்த சேம்பர்லேன்? அது என்ன சேம்பர்லேய்ன் வழிமுறை?
இரண்டாவது உலகப்போர் தொடங்குவதற்கு முன்பாக 1930 ஆம் ஆண்டு பிரிட்டனின் பிரதமராக இருந்தவர் நெவில் சேம்பர்லெய்ன்.
இவர் நிலப்பரப்பை கைப்பற்றத் துடித்த ஹிட்லரின் தலைமையிலான நாஜி ஜெர்மனியை எதிர்க்காமல் மாறாக சமாதானப்படுத்தும் கொள்கையை பின்பற்றினார்.
அதாவது 1930 ஆம் ஆண்டின் போது செக்கோஸ்லோவாக்கியா நாட்டில் உள்ள ஜெர்மன் மொழி பேசும் மக்கள் வசிக்கும் பகுதியான சுடெட்டன்லாந்தை, நாசி ஜெர்மனி உரிமை கொண்டாடியது.
இதனை எதிர்க்காமல் ஒப்பந்தத்தின் மூலம் ஜெர்மனிக்கு சுடெட்டன்லாந்தை வழங்க பிரிட்டன் ஒப்புக்கொண்டது.
இந்த ஒப்பந்தம் பின்னானில் செக்கோஸ்லோவாக்கியாவை முழுவதையும் ஜெர்மனி கைப்பற்ற பாதை அமைத்து கொடுத்தது.
இரண்டாம் உலகப்போர் தொடங்கும் முன்னர் பிரிட்டனுடனான ஒப்பந்தத்தை மீறிய ஹிட்லர், செக்கோஸ்லோவாக்கியாவை தொடர்ந்து வெறும் 6 மாதத்தில் போலாந்தை கைப்பற்றி இரண்டாம் உலகப்போரை தொடங்கினார்.
பிரிட்டன் பிரதமர் சேம்பர்லெயினின் இந்த ஒப்பந்தம் உலகப்போர் வரலாற்றில் செய்யப்பட்ட பெரிய பிழைகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
இந்த வரலாற்று பிழையையே தற்போது சீனாவுடனான எல்லை பிரச்சனையில் மத்திய அரசு செய்து வருவதாக ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.