தமிழ்நாட்டில் 3 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 4,979 பேருக்கு கொரோனா; 78 பேர் சாவு
1 min readIN Tamil Nadu 4.979 person affected for corona including 3 MLAS
தமிழ்நாட்டில் 3 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 4,979 பேருக்கு கொரோனா; 78 பேர் சாவு
19-7-2020
தமிழகத்தில் ஒரே நாளில் 3 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 4,979 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இன்று மட்டும் கொரோனாவுக்கு 78 பேர் இறந்துள்ளனர்.
4,979 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் கொரோனா நாளுக்கு அதிகமாக பரவி வருகிறது. கொரோனா பரவல் பற்றிய விவரங்களை தமிழக சுகாதாரத்துறை தினமும் மாலையில் வெளியிட்டு வருகிறது.
அதன்படி தமிழக சுகாதாரத்துறை இன்று மாலை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) மட்டும் 4,979 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதில், 4,902 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். வெளிமாநிலம், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் 77 பேர். இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,70,693 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் உள்ள 112 ஆய்வகங்களில் இன்று மட்டும் 52,993 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதில் அரசு ஆய்வகங்கள்-57. தனியார் ஆய்வகங்கள்-55.
இந்த ஆய்வகங்கள் மூலமாக, இதுவரை 19 லட்சத்து 32 ஆயிரத்து 492 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.
78 பேர் சாவு
இன்று( ஞாயிற்றுக்கிழமை) கொரோனா உறுதியானவர்களில், 2,937 பேர் ஆண்கள், 2,042 பேர் பெண்கள். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 907 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 66,763 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 23 ஆகவும் உள்ளது. இன்று மட்டும் 4,059 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 915 ஆக உள்ளது.
இன்று மட்டும் கொரோனாவுக்கு 78 பேர் இறந்துள்ளனர். அதில் 55 பேர் அரசு ஆஸ்பத்திரிகளிலும் 23 பேர் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் சிகிச்சை பெற்று வந்தவர்கள். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 2,481 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 50,294 பேர் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
சென்னையில் 27 பேரும், செங்கல்பட்டு, மதுரையில் 8 பேரும், திருவள்ளூரில் 5 பேரும், சேலத்தில் 4 பேரும், திண்டுக்கல், கன்னியாகுமரியில் தலா 3 பேரும், கோவை, கடலூர், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, தேனி, வேலூரில் தலா 2 பேரும், கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம், சிவகங்கை, திருப்பத்தூர், தூத்துக்குடி, திருச்சி, விழுப்புரம், விருதுநகரில் தலா ஒருவரும் என 78 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
மேற்கண்ட தகவலை தமிழக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.
பிற மாவட்டங்களில்…
ஆரம்பத்தில் சென்னையில் மட்டும்தான் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகமாகி வருகிறது. இன்று அதிகபட்சமாக சென்னையில் 1,254 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது.
சென்னையை தவிர்த்து, இன்று, திருவள்ளூரில் 405 பேருக்கும், செங்கல்பட்டில் 306 பேருக்கும், விருதுநகரில் 265 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 220 பேருக்கும், மதுரையில் 206 பேருக்கும், தூத்துக்குடியில் 151 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.
திருநெல்வேலியில் 103 பேருக்கும், தென்காசியில் 77 பேருக்கும், கன்னியாகுமரியில் 134 பேருக்கும், தேனியில் 122 பேருக்கும் திருச்சியில் 139 பேருக்கும் கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது.
3 எம்.எல்.ஏ.வுக்கு
இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரே நாளில் 3 திமுக எம்எல்ஏ.,க்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி தொகுதி, தி.மு.க., எம்.எல்.ஏ. செங்குட்டுவன்(வயது 63), வேலூர் திமுக எம்எல்ஏ கார்த்திகேயன், ராணிப்பேட்டை திமுக எம்.எல்.ஏ., ஆர்.காந்தி ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் கார்த்திகேயன் வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ராணிப்பேட்டை திமுக எம்.எல்.ஏ., ஆர்.காந்தியும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட எம்.எல்.ஏ.,க்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது.