May 17, 2024

Seithi Saral

Tamil News Channel

மருத்துவ படிப்பில் ஓ.பி.சி.க்கு இடஒதுக்கீடு வழக்கில் மத்திய அரசுக்கு ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு

1 min read
High Court orders action to federal government in case of reservation for OBC in medical study

27-7-2020

மருத்துவ படிப்பில் ஓ.பி.சி.க்கு இடஒதுக்கீடு வழக்கில் மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளது.

ஓ.பி.சி.க்கு இட ஒதுக்கீடு

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக்
கல்லூரிகளில் மருத்துவ பட்டப்படிப்புகளில் 15 சதவீத இடங்களும், மருத்துவ மேற்படிப்புகளில் 50 சதவீத இடங்களும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்காக மத்திய தொகுப்புக்கு வழங்கப்படுகிறது.

இவ்வாறு மத்திய தொகுப்புக்கு வழங்கப்படும் இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு (ஓ.பி.சி.) 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு, திமுக, அதிமுக, திராவிடர் கழகம், பாமக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் தமிழக அரசு சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்கில் மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், மருத்துவ படிப்புக்களில் அந்தந்த மாநிலங்களின் பின்பற்றப்படும் இடஒதுக்கீட்டு முறையை பின்பற்ற அனுமதிக்கலாம் எனவும், ஆனால், அந்த இடஒதுக்கீடு மொத்த இடங்களில் 50 சதவீதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டு இருந்தது.

சுப்ரீம் நீதிமன்ற தீர்ப்பு மற்றும் இந்திய மருத்துவ கவுன்சில் விதிப்படி, இட ஒதுக்கீடு தொடர்பாக மாநில அரசு சட்டம் இயற்றாமல் இருந்தால் மட்டுமே மத்திய அரசு முடிவெடுக்க முடியும் என்றும், மத்திய அரசு கவுன்சிலிங் நடத்தும் அமைப்பு மட்டுமே என்றும், இட ஒதுக்கீடு தொடர்பாக முடிவெடுக்க மாநில அரசுகளுக்கே முழு அதிகாரம் உள்ளதாக மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது

தமிழக அரசு தரப்பில் அரசு தலைமை வழக்கறிஞர் விஜய்நாராயண் ஆஜராகி, தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீடு முறை இருக்கும் போது மத்திய அரசு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது தவறானது என்றும், தமிழகத்தில் தான் அதிகளவில் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிறபடுத்தப்பட்ட மக்கள் உள்ளனர் எனவும் சுட்டிக்காட்டினார்.

ஒவ்வொரு மாநிலத்திலும் சாதி வாரியான மக்கள் தொகையின் அடிப்படையில் 50 சதவீதம் என்ற இடஒதுக்கீடை அதிகரிக்கலாம் என சுப்ரீம்கோர்ட்டே தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டிய அவர், பட்டியலின பழங்குடியின பிரிவினருக்கு மட்டும் இட ஒதுக்கீடு வழங்கிவிட்டு, இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இட ஒதுக்கீடு மறுப்பது சட்ட விரோதமானது என்றும் வாதிட்டார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதிகள், மாநில அரசுகளின் ஒதுக்கீட்டு முறையை பின்பற்ற வேண்டும் என்ற முந்தைய உச்சநீதிமன்ற உத்தரவுகளுக்கு ஏன் மத்திய அரசு கட்டுப்படவில்லை? என கேள்வி எழுப்பினர். பின்னர் வழக்கின் மீதான தீர்ப்பை ஒத்திவைத்தனர்.

தீர்ப்பு

அதன்படி இன்று(திங்கட்கிழமை) தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசிக்கு 50 சதவீத இடஒதுக்கீடு தர மத்திய அரசு சட்டம் இயற்றலாம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். 30 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட முடிவு என்பதால் தற்போதைய நிலை கருதி சட்டம் இயற்ற வேண்டும் என்றும் கூறினர்.

ஓபிசிக்கு 50 சதவீத இடஒதுக்கீடு தர சுப்ரீம் கோர்ட்டு தான் முடிவு செய்யும் என்ற மருத்துவ கவுன்சில் விளக்கத்தை ஏற்க முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். மருத்துவ படிப்புகளில் இடஒதுக்கீடு வழங்க எந்த தடையும் இல்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

எடப்பாடி பழனிசாமி வரவேற்பு

சென்னை:மருத்துவ படிப்பில், ஓபிசி இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பினை வரவேற்கிறேன். அதிமுக அரசு எடுத்த நடவடிக்கையால்தான் இந்த சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.என முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.

இதுகுறித்து முதலமைச்சர் பழனிசாமி டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-
சமூகநீதி காத்த புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆசியுடன் சிறப்பாக மக்கள் பணியாற்றும் அம்மாவின் அரசு எடுத்த சட்ட ரீதியான நடவடிக்கையினால், மருத்துவ படிப்பில் ஓபிசி மாணவர்களின் சேர்க்கைக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பினை வரவேற்கிறேன்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
இந்த தீர்ப்புக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு அளித்துள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.