இலக்கிய நிழலில் இளைப்பாறலாம்! —(3)ஒட்டக்கூத்தர் பாட்டுக்கு இரட்டை தாழ்பாள் / முத்துநாயகம்
1 min read
"Relax in the literary shade!"(3) BY Muthunayagam
சோழ மன்னனின் அவைக்களப் புலவர், ஒட்டக்கூத்தர்.
நல்ல புலமை மிக்கவர். கடும் கோபக்காரர். தமிழை யாரும் பிழைபட எழுதினாலோ, பாடினாலோ அவர் பொறுக்க மாட்டார்.
அவைக்களப் புலவர் என்பதால் அவரது ஒப்புதல் பெற்ற பிறகே, மற்றப் புலவர்கள் தங்களது பாடல்களை அரங்கேற்ற முடியும்.
அதற்காக அவர்கள் தங்களது படைப்புகளோடு, ஒட்டக்கூத்தரை அணுகுவார்கள்.
அவரிடம் கொடுத்துவிட்டு எதிரே நடுங்கிக் கொண்டு நிற்பார்கள்.
அதை அவர் வாங்கிப் படித்துப் பார்ப்பார். அதில் பிழைகள் இல்லை என்றால், எதிரே நிற்கும் புலவர் பிழைத்தார்.
இல்லை, அதில் ஏதேனும் சொற்பிழையோ, பொருட்பிழையோ இருக்கும் என்றால், அவர் தொலைந்தார். உடனே சிறையில் தள்ளப்படுவார்.
இவ்வாறு சிறைப் படுத்தப்படும் புலவர்களுக்கு, மீள வாய்ப்பும் உண்டு!
ஒட்டக்கூத்தர், இடையில் ஒருநாள் மறுதேர்வு நடத்துவார். அதில் தேர்ச்சி பெற்றால் விடுதலை! இல்லை, மீண்டும் சிறைவாசம்தான்!
போலிப் புலவர்களுக்கு மரண தண்டனைகூட உண்டு!
இவ்வாறு கறாராக இருந்த ஒட்டக்கூத்தர், சோழமன்னவனுக்கு சிறந்த விசுவாசியாகவும் இருந்தார்.
இரண்டாம் குலோத்துங்க சோழனுக்கு திருமண ஏற்பாடு நடந்தது.
பாண்டிய நாட்டை ஆட்சி செய்துவந்த வரகுண பாண்டியனின் மகளை, பெண் கேட்பது என்றும் அதற்காக ஒட்டக்கூத்தரை மதுரைக்கு தூதுவராக அனுப்புவது என்றும் முடிவானது.
கூத்தரும் மதுரை சென்றார். மன்னனை சந்தித்தார். வந்த விவரத்தை விவரித்தார்.
பாண்டியனோ, அவரை ஏளனமாகப் பார்த்தான்.
“எங்கள் குலத்தில் பெண் எடுக்கும் அளவில், சோழன் உயர்ந்தவனா?
எம்மைவிட அவன், மேன்மை மிகுந்தவனா?” என்று கேட்டான்.
ஒட்டக்கூத்தருக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது!
“அரசே! சோழனின் ‘கோரம்’ என்ற குதிரைக்கு உனது ‘கனகவட்டம்’ என்ற குதிரை ஒப்பாகுமா?
காவிரிக்கு, வைகை ஒப்பாகுமா?
சூரியனுக்கு, நிலா ஒப்பாகுமா? புலிக்கொடிக்கு, உன் மீன்கொடி ஒப்பாகுமா?
உறையூருக்கு, கொற்கைதான் ஒப்பாகுமா?”
இவ்வாறு அவர், சோழநாட்டுக்கு பாண்டியநாடு நிகர் ஆகாதுயென பொருள் பொதிந்த பாடலுடன், கேள்விக் கணைகளை வீசினார்.
பாண்டியன் அவையில் அப்பொழுது புலவர் புகழேந்தி இருந்தார். அவர் பொறுமையாக எழுந்தார்.
ஒட்டக்கூத்தரின் கேள்விகள் பாண்டிய நாட்டின் தன்மானத்திற்கு விடப்பட்ட சவால்கள் அல்லவா? பதில் சொல்லியாக வேண்டுமே!
பாண்டியனை ஏறெடுத்துப் பார்த்தார். அவனது கடைக்கண் வழியாக கட்டளை பாய்ந்துவர எதிர் ஆட்டத்தைத் தொடங்கினார்.
“அரசே! சோழநாட்டு புலவர் புலி..! புலி!! என்றாரே திருமால் உருவெடுத்தது, சோழனின் புலி உருவிலா? பாண்டியனின் மீன் வடிவிலா?
சிவன் தலையில் சூடியிருப்பது சூரியனா? நிலவா?
அவன் திருவிளையாடல் நடத்தியது உறையூரா? மதுரையா?
அகத்தியர் தமிழ் உரைத்தது நேரி மலையா? பொதிகை மலையா?
சம்மந்தரின் தமிழ் ஏடு நீந்தியது காவிரியா? வைகையா?
பிணியை ஓட்டுவது ஆத்தியா? வேம்பா?
கடல் பணிந்ததே, அது சோழன் காலடியா? பாண்டியன் காலடியா?”
பதிலடியாய்ப் பதில் கேள்விகளை அடுக்கடுகாய் அடுக்கிப் பாடினார், புகழேந்திப் புலவர்!
அடங்கிப் போனவராய் அமைதியானார், ஒட்டக்கூத்தர்.
“இவன் விடாக்கண்டனுக்கு கொடாக்கண்டனாக இருப்பான் போல் தெரிகிறதே? வரட்டும் பார்க்கலாம், முதலில் வந்த காரியத்தைப் பார்க்கலாம்!” என்று மனதில் நினைத்துகொண்டு, பாண்டியனிடம் நேர்சீராய்ப் பேசி, பெண்ணை, சோழனுக்கு நிச்சயம் செய்துவிட்டார்.
விரைவிலே குலோத்துங்க சோழனுக்கு திருமணமும் நடந்தது.
நகை நட்டு என்று நாம் சீர்வரிசை கொடுப்பது போல் பாண்டிய மன்னன், தன்னுடைய மகளுக்கு சீராக புகழேந்திப் புலவரை சோழநாட்டுக்கு அனுப்பி வைத்தார்.
புகுந்த வீட்டுக்கு (அரண்மனைக்கு) செல்லும் மகளுக்கு அவ்வப்போது அறிவுரைகள் வழங்குவது, கல்வி கற்பிப்பது போன்ற பணிகளை, சோழன் அவையில் இருந்தபடியே அவர் செய்து வந்தார்.
ஒட்டக்கூத்தருக்கு அது பிடிக்கவில்லை. ஏற்கனவே அவர் மீது பொறாமை இருந்தது. இப்போது அவர் அருகில் வந்துவிட்டதால் அது பகையாக வளர்ந்தது. அவரை எப்படியாவது பழிவாங்கிவிட கங்கணம் கட்டிக் கொண்டு இருந்தார்.
ஒருநாள் அதற்கான நேரமும் கனிந்தது. சோழ அரசனுடன் நெருங்கிப் பேசிக்கொண்டு இருந்த அவர், அதற்கு தூபம் போடத்தொடங்கினார்.
“மன்னா! இந்த புகழேந்தியை சாதாரணமாக நினைத்து விடாதீர்கள்!”
“நீர் சொல்வது உண்மைதான் கூத்தரே! அவர் சாதாரணமானவர் அல்ல. நல்ல புலமை மிகுந்தவராய்த்தான் தெரிகிறார்!”
“புலமையும் இல்லை. ஒரு புண்ணாக்கும் இல்லை மன்னா! அவர் நமக்குப் பகைமை!”
“எப்படிச் சொல்கிறீர்?”
“உங்கள் திருமணத்திற்கு, ஆரம்பத்தில் தடையாக இருந்தவரே அவர்தான்!”
“ஏது, என் திருமணத்திற்கு, இவர் தடையாக இருந்தாரா? என்ன சொல்கிறீர்?”
“ஆம் மன்னா! பாண்டியனிடம், நான் தங்களுக்கு பெண் கேட்டபோது, இந்தப் புகழேந்தி தடையாக இருந்தவர். சோழ நாட்டையும், தங்களது குலத்தையும் இழிவுபடுத்தி, பாண்டியன் அவையிலே பாடல் பாடிய பகைவர்!”
“சோழநாட்டை இழிவுபடுத்திய ஒருவரை, என் அவையில் வைத்து அழகு பார்ப்பதா?”
நான் கேட்க நினைத்ததை, நீங்களே கேட்டுவிட்டீர்கள்!”
“ஒட்டக்கூத்தரே…! ஒரு நொடி கூடத் தாமதிக்க வேண்டாம். புகழேந்தியைப் பிடித்து சிறையில் தள்ளுங்கள்!”
“ஆணை மன்னா! அதற்குத்தானே அடியேன் காத்து இருந்தேன்!”
கோபத்துடன் சோழன் அரண்மனைக்குள் நடந்தான். மகிழ்ச்சியோடு ஒட்டக்கூத்தர் வெளியே வந்தார்.
மன்னனின் ஆணைப்படி புலவர் புகழேந்தி சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் கூத்தர் எதிர்பார்த்தபடி அவர் சிறையில் வாடவில்லை! தமிழைப் பாடினார்.
ஆம்! அந்த வழியாகத் தண்ணீர் எடுக்கச் செல்லும் பெண்களிடம் சிறைக்குள் இருந்தபடியே, பாடல்கள் பாடிக் கொடுத்து, சாளரங்கள் வழியாக, அவர்கள் தரும் அரிசி, தானியங்களை வாங்கித் தானும் உண்டதுடன் சிறைக் காவலர்களுக்கும் கொடுத்து வந்தார்.
ஒட்டக்கூத்தரால் சிறைபிடிக்கப்பட்டு அங்கே அடைக்கப்பட்டிருந்த புலவர்களையும் சந்தித்தார். அவர்களுக்கு பாடல்கள், வெண்பாக்கள் இயற்றும் நுணுக்கங்களைக் கற்றுக் கொடுத்தார். ஒட்டக்கூத்தரை எதிர்கொள்ளும் தைரியத்தையும் அவர்களுக்கு ஊட்டினார்.
ஒருநாள் அந்த வழியாகச் சோழ மன்னன் யானையில் உலா வந்தான்.
புகழேந்தி சிறையின் மேற்தளத்தில் நின்றார்.
உடன் வந்த ஒட்டக்கூத்தரை அழைத்த சோழன், புகழேந்தியைச் சுட்டிக்காட்டி, “கூத்தரே! பாண்டிய நாட்டுப் புலவரைப் பார்த்தீரா?” எனக் கேலிததும்பக் கேட்டான்.
“பார்த்தேன், மன்னா! நிற்க வேண்டிய இடத்தில் அவரை நிறுத்தி, செய்வதை செவ்வனே செய்துவிட்டோம்!” என்று பூரிப்போடு சொன்னார்.
“இருந்தாலும், புகழேந்தியின் தமிழ்ப் புலமையைப் புறந்தள்ளிவிட முடியுமா? செய்யுளை அவர் செவ்வனே செய்வதில் வல்லவர்தான் போலும்! நீர் என்ன நினைக்கின்றீர்?”
கூத்தரை சீண்டி விட்டான், சோழன்.
கூத்தர் கொதித்துப் போனார்!
“சோழா! நீ தப்புக்கணக்கு போடுகிறாய்! என் முன் நிற்கப் புகழேந்திக்கு என்ன தகுதி இருக்கிறது?
வேங்கைமுன், மான் நிற்குமா?
எரியும் நெருப்புமுன், காய்ந்த
காடு நிற்குமா?
சுறாமுன், சிறுமீன் நிற்குமா?
கதிரவனின் கதிர்முன்,
பனிதான் நிற்குமா?”
மேற்கொண்ட பொருள்பட, கூத்தர் வீராப்பாய்ப் பாடினார்.
அப்பொழுது புகழேந்தியைப் புன்முறுவலோடு பார்த்த சோழன், “புலவரே கூத்தரின் பாட்டுக்கு, பதில் பாட்டு பாடமுடியுமா?” என்று கேட்டு, எரியும் திரியை முன்னுழுத்து எண்ணெய்யும் ஊற்றினான்.
“பாடுகிறேன் மன்னா! வெட்டிப் பாடவா? ஒட்டிப் பாடவா?” என்று கேட்டார், புகழேந்தி.
(வெட்டிப் பாடுதல் என்பது, ஒருவர் பாடிய பொருளுக்கு எதிராகப் பொருள் அமைத்துப் பாடுவது.
ஒட்டிப் பாடுவது என்பது ஒருவர் பாடிய பொருளையே வைத்து மாற்றிப் பாடுவது.)
“ஒட்டிப் பாடும்!” என்று சோழன் உத்தரவிட, புகழேந்தி கீழ்க்காணும் பொருளில் பாடினார்…
“மான் அவன், நான் வேங்கை!
கான் (காடு) அவன், நான் நெருப்பு!
மீன் அவன், நான் சுறா!
பனி அவன், நான் உதயம்!” என்று கூத்தரின் பாட்டையே குப்புற மாற்றிப் பாடினார்.
புகழேந்தியின் புலமையை உள்ளூர ரசித்த சோழனுக்கு, அவன்பால் அன்பு அதிகமானது.
புகழேந்தி மேலிருந்த புழுக்கமோ, கூத்தருக்கு கூடுதலானது!
சிறைச்சாலைக்குச் சென்றார். அங்கு அடைக்கப்பட்டிருந்த புலமை இல்லாத புலவர்களை அழைத்து மறுதேர்வு நடத்தினார்.
அன்று கூத்தர் என்று சொல்லைக் கேட்டாலே நடுநடுங்கிய அவர்கள், இன்று கூச்சமில்லாமல் அவரை நெருங்கி அவரது கேள்விகளுக்கு பதில் கூறினார்கள்.
இது புகழேந்தியின் பயிற்சிதான் என்பதை அவர் புரிந்து கொண்டார்!
அரசனிடம் ஆணை பெற்று,
சிறையில் அடைக்கப்பட்டு இருந்த அத்தனை புலவர்களையும் விடுதலை செய்தார்.
புகழேந்தி மட்டும் விடுவிக்கப் படவில்லை. இந்த விவரம் சோழமாதேவியின் காதுகளுக்கு எட்டியது!
தனக்கு சீராய் வந்த புலவரை சிறப்பிக்காமல், பொறாமையால் சிறையில் அடைத்து வைத்திருக்கிறார்களே! என்று வேதனை அடைந்தார்.
இதனால் கணவர் (குலோத்துங்கன்) மேல் கோபம் கொண்டார். அவர் படுக்கை அறைக்கு வரும் நேரத்தில் கதவை உட்புறமாக மூடி, தாழ்பாள் போட்டுக் கொண்டார்.
குலோத்துங்கன் வந்தான். கதவைத் தட்டினான். சோழமாதேவி திறக்கவில்லை!
மனைவியின் ஊடலைத் தணிக்க, கொஞ்ச நேரம் கொஞ்சினான்… கெஞ்சினான்… ம்..கூம்! தேவி மசியவில்லை!
உடனே ஒட்டக்கூத்தரை வரவழைத்து, தேவியை சமாதானம் செய்யும்படி பணித்தான்.
அறைக் கதவைத் திறக்குமாறு சோழமா தேவியை அறிவுறுத்தி, கூத்தர் பாட்டிசைத்தார்…
“தாமரையில் வீற்றிருக்கும் இலக்குமி போன்ற அழகுடையவளே!
கதவைத் திறந்துவிடு!
திறக்காவிட்டால்…
சூரியனைக் கண்டவுடன் தாமரை இதழ் திறந்து மலர்வதுபோல்,
சூரிய குலத் தலைவன் சோழப் பேரரசன்
உன் வாயில்முன் வந்தால், தாமரை இதழ்களைப் போன்ற
உன் கைவிரல்கள் மலர்ந்து,
தானே தாள் திறந்துவிடும்!
அதன்பிறகு நான் ஏன்
உன்னைப் பிராத்திக்க வேண்டும்?”
இவ்வாறு பொருள்பட பாடிய கூத்தரின் பாடலைக் கேட்டு, சோழமா தேவிக்கோ கோபம் கூடுதலானது.
“ஒட்டக்கூத்தர் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்!” என்று கூறி, அவர் இன்னொரு தாழ்ப்பாளையும் தாளிட்டுக் கொண்டார்.
குலோத்துங்கனுக்கு இப்போது இருக்கும் ஒரே வழி, புலவர் புகழேந்தியை வரவழைப்பதுதான்.
ஆணை பறந்தது; சிறைக் கதவு திறந்தது! புகழேந்தி அழைத்து வரப்பட்டார்.
சோழமாதேவியை தாழ்திறக்கும்படி பாடுகிறார்…
“ஒரு நூலை ஈரிழையாய் வகிர்ந்தால், அதில் ஓரிழையை ஒத்த, நுண்ணிய சிற்றிடையும்,
பொற்குழையும், இருவிழியும் அளாவுகிற அழகுப்பெண்ணே!
மேகத்தைவிடவும் மிகுதியாக, பொருள் பொழிகிற கைகளையுடைய கணவன்,
உன் வாயில் தேடிவந்தால் கோபம் பாராட்டுவதும் தகுமோ?
தம் கணவரின் ஒன்றுரெண்டு பிழைகளை உயர்குடியில் பிறந்த மகளிர் பொறுக்காமல் இருப்பாரோ?
நீ கொண்ட கோபம் தணிய வேண்டும்!”
இவ்வாறு புகழேந்தி பொருள் பொதிந்துபாட, சோழமாதேவி மனம் நெகிழ்ந்து தாழ்திறந்தார்.
பிறகு என்ன?
குலோத்துங்கனுக்கு கொண்டாட்டம்தான்!
இதோ, தாழ் திறக்கவேண்டி
ஒட்டக்கூத்தர் பாடிய செய்யுள்:-
“நானே யினியுன்னை வேண்டுவ தென்கொல் நளினமலர்த்
தேனே கவாடந் திறந்திடுவாய் திறவாவிடிலோ
வானே றனைய இரவி குலாதிபன்
வாசல் வந்தால்
தானே திறக்கும் நின் கைத்தலமாகிய தாமரையே!”
புகழேந்தி பாடிய செய்யுள்:-
“இழையொன் றிரண்டு வகிர்செய்த நுண்ணிடை யேந்தியபொற்
குழையொன் றிரண்டு விழியணங்கே கொண்ட கோபந்தணி
மழையொன் றிரண்டுகைம் மானாபரணன் நின்வாசல் வந்தால்
பிழையொன் றிரண்டு பொறாரோ குடியிற் பிறந்தவரே!”
-க.முத்துநாயகம்,
லாலாக்குடியிருப்பு.