கருப்பு, கறுப்பு… எது சரி?/ முத்துமணி
1 min readKUruppu- which one is right?/ Muthumani
7.3.2023
இரண்டு சொற்களும் வேறு வேறு பொருளைக் குறிக்கின்றன.. இரு சொற்களில் Black.. என்னும் வண்ணத்தைக் குறிப்பது எச்சொல் என்பதில்தான் நமக்குக் குழப்பம்.
‘கருப்பசாமியா?கறுப்பசாமியா?’
‘கரிய செம்மல்’ என்பது கம்பன் இராமனுக்கு வைத்த பெயர்.
இராமன், இராகவன் எல்லாமே நிறத்தின் அடிப்படையிலான பெயர்கள் .
இராகுகாலம் என்பதுகூட ஒளி நிறைந்த என்பதற்கு எதிர்ச்சொல்தான். ஒருவகை இருட்டை அதாவது இருண்ட என்பதைக் குறிக்கிறது. இருளப்பன், இருளாண்டி என்பவையெல்லாம் வண்ணத்தின் அடிப்படையிலான பெயர்களே.
கார், கார்மேகம் கார்வண்ணன் என்பதெல்லாம் கருப்பாக இருக்கும் அல்லது கருப்பு எனும் பொருளில் சூட்டப்பட்ட பெயர்கள்.
கருமை என்பது பண்புப்பெயர். கருமை நிறத்தைப் பெற்றது கருப்பு நாய்….
கருஞ்சாந்து.
‘வானவில்லில் கருப்பு வெள்ளை..’.
வானவில்லில் இல்லாத இரு வண்ணங்கள் கருப்பும் வெள்ளையும்.. சொல்லப்போனால் இவ்விரண்டும் வண்ணங்கள் அல்ல… ஆகையால்தான் கருப்பு நிறம் என்று சொல்வதற்கு ஒரு தயக்கம் இருந்து கொண்டே இருக்கிறது. எல்லா வண்ணங்களையும் சேர்த்துக் கலந்தால் ஒரு வேளை கருப்பாகலாம். வண்ணமே இல்லாத நிலை வெள்ளையாக இருக்கலாம்…
‘கருப்பு வெள்ளைப் படம் என்ன நிறம்?’
திரைப்படத்தில் கூட,சிவப்பு, பச்சை என பல்வேறு வண்ணங்கள் நிறைந்த படத்தை வண்ணப்படம் என்று கூறுவோம்… ஆனால் இவ்வகை வண்ணங்கள் எவையும் இல்லாத படத்தைக் கருப்பு வெள்ளைப் படம் என்றே குறிப்போம்.
colour movie… Black and white movie. வண்ணங்கள் அற்ற நிலையைக் கருப்பு வெள்ளைக்குள் அடக்கிவிடுகிறோம்.
black இன்னும் வண்ணத்தைக் குறிக்கும் தமிழ்ச் சொல் கருப்பு. நிறத்தை மனதில் கொண்டுதான் கருப்புக் கட்டி கருப்பட்டி.
‘அவன் முகம் கறுத்து’
விட்டதுஅவமானத்தால் அவன் முகம் கறுத்துவிட்டது… முகம் கருப்பாகவில்லை. முகத்தில் உணர்ச்சி வெளிப்பாட்டால் முகத்தில் தசைகளில் பலவகை மாற்றங்கள் ஏற்படுகின்றன.அதனைக் கறுத்துவிட்டது என்று கூறவேண்டும்.
‘கருநாக்கு..கருவுது…’
அவன் சொல்வது அப்படியே பலித்து விடும். அவன் நாக்கு கருநாக்கு..
நாக்கில் இருக்கும் கருப்பு மச்சத்திற்கும் அவன் வாக்கு பலிப்பதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
அவன் நாக்கு எதை வேண்டுமானாலும் கூசாமல் பேசும். குறிப்பாக வசை பாடும். சபிக்கும்.. கேட்கிற நம் மனம் மிகுந்த வருத்தத்திற்கும் பயத்திற்கும் உள்ளாகும்.
அதனால் அவன் நாக்கு இயல்பான நாக்கன்று.அது கறுநாக்கு..
அவன் என்னைப் பார்த்துக் கருவி விட்டான். ஒரு நாள் செத்துப் போவடா. பணத் திமிரில் பேசுகிறாயா? நடுத்தெருவில் நிற்பாய். இப்படிப் பேசுதல் பொறாமையின் இயலாமையின் காரணமாக வாயில் வரும் ஆகாத சொற்கள்… இதை கறுவிவிட்டான் என்று சொல்ல வேண்டும்
கறுவுதல்..கறுப்பு. என்னும் இந்தச் சொல்தான் பின்னால் கடுப்பு… என் கடுப்பைக் கிளப்பாதே. என்னை பார்த்தால் உனக்குக் கடுப்பு??… கடுகடு என்று பேசாதே…. முகத்தைக் கடுகடுவென்று வைத்துக்கொண்டு சொல்வதைவிட கொஞ்சம் சிரித்துக்கொண்டே சொல்லலாமே…இதுவே பிற்காலத்தில்… காண்டு என்று மாறிவிட்டதோ?..
“என் மேல் உனக்கு என்ன காண்டு?”
‘கறுப்பு….சினம்’
கறுப்பு என்னும் சொல் கோபத்தையும் குறிக்கிறது. கோபத்தினால் முகத்தில் ஏற்படும் மாற்றங்களையும் குறிக்கிறது.
கறுப்பசாமி என்பதற்கு கோபத்தில் இருக்கும் தெய்வம்… துடியான ஆக்ரோஷமான தெய்வம் என்றும் பொருள் கொள்ளலாம்.
கருப்பன் கரிய நிறம் கொண்டவன். கறுப்பன் கோபக்காரன்.
நிறத்தின் அடிப்படையில் பெயர் வைத்தால் கருநாகம்
சினமே குணம் என்று பெயர் வைத்தால் கறுநாகம்.
-தமிழ் முத்துமணி.