April 29, 2024

Seithi Saral

Tamil News Channel

காய் கனி- காய் கறி.. இதில எது சரி?/ முத்துமணி

1 min read

Kai Kani- Kai Curry..Which one is correct?/ Muthumani

6.3.2023
வியாபாரி ஒருவர் பெரிய தள்ளு வண்டியில் வகைவகையாய் ஏராளமான காய்களை ஏற்றிக்கொண்டு வந்தார்.


“அண்ணே வெங்காயம் இருக்கிறதா? கிலோ என்ன விலை?” என்று கேட்டேன். “வெங்காயம் இருக்கிறது சார். நீங்கள் காசே தர வேண்டாம். தயவு செய்து என்னை அண்ணே என்று மட்டும் சொல்லாதீர்கள் சார். நான் உங்களிடம் தமிழ் படித்த மாணவன்” என்று சொன்னார். தூக்கி வாரிப்போட்டது சமாளித்துக் கொண்டு
“அப்படியா தம்பி. நல்லா இருக்கீங்க…கியா.‌? என்று கொஞ்சம் கஷ்டப்பட்டு ஒருமையில் கேட்டேன்.
“ஆமா ஐயா”இதே வியாபாரம்தான் பண்ணுறேன் ஐயா. மார்க்கெட்டில் காய்கனிக் கடை வைத்திருக்கிறேன். என்று சொன்ன அந்தப் பையன் தன்னுடைய வண்டியிலும், ‘சுப்பிரமணி காய்கனி வியாபாரம்’ என்று தெளிவாக எழுதி வைத்திருந்தான்.
வழக்கம்போல மூளை குறுகுறுத்தது. சிந்தனை பிறந்தது‌.

பொதுவாகச் சமைத்து உண்ணத்தக்க காய்களை விற்பனை செய்யும் கடையை நாம் காய்கறிக் கடை எனபோம். காய்களை விற்பனை செய்பவனைக் காய்கறி வியாபாரி என்று சொல்வோம். இவனைப் போல் சிலர், காய்கனி என்று சொல்வது சரியா?

அந்தக் கடையில் கத்தரிக்காய், முருங்கைக்காய், சுண்டைக்காய், அவரைக்காய் என்று ஏராளமான காய் வகைகள் இருக்கும். அப்படியானால் காய்க் கடை என்பதுதானே சரியாக இருக்கும்?. பழம் என்று சொல்லப் போனால் தக்காளிப் பழம் ஒன்றுதானே அது போன்ற கடைகளில் இருக்கும். தக்காளிப் பழம் ஒன்றைக் குறிப்பதற்காகக் காயோடு கனியும் சேர்ந்துக் காய்கனி வியாபாரம் என்று கூறுகிறார்களா?.

மேலும் தக்காளிப்பழத்தை எந்தப் பழக்கடையிலும் விற்பதில்லையே. சொல்லப்போனால் பழவகைகளில் அதைச் சேர்ப்பதில்லை. தக்காளியின் காய் பயன்படாமல், பழம்தான் சமையலுக்கு உதவுகிறது. எனவே அது காய்ப் பட்டியலில் சேர்ந்து விடுகிறது.
மேலும் உருளைக்கிழங்கு, கருணைக்கிழங்கு, போன்ற கிழங்கு வகைகளும் நாங்களும் காய்கள்தான் என்று ஒத்துக்கொண்டுதான் அங்கு வந்து குவிந்திருக்கின்றன.
அந்தக் கடைகளில் கீரை வகைகளும் இருக்கும். இஞ்சி போன்ற பொருட்களும் இடம்பெறும். வெங்காயம் காயா? பழமா? அல்லது கிழங்கா? ஏனெனில் வெங்காயமும் அதே கடையில்தானே கிடைக்கிறது.
ஆகவே, காய்கள், கிழங்குகள், கீரை வகைகள், தரைக்கீழ்த் தண்டுகள் தக்காளிப்பழம் இன்னும் சொல்லப்போனால் வாழைத்தண்டு, வாழை இலை, காளான் என எல்லாவற்றையும் உள்ளடக்கி விற்பனை செய்யும் கடையை, நாம் காய்கறிக் கடை என்ற பெயரில் அழைக்கிறோம்.

பேரிக்காய் போன்றவை பழமான பின் பயன்படாமல் காயாகவே உண்ணப் பயன்படும். எனவே அது போன்ற காய் வகைகளும் பழக்கடைக்கு மாற்றப்பட்டு விடுகின்றன..
எல்லாக் காய்களும் பழங்கள் ஆவதில்லை. சில வகை காய்கள் நேரடியாக முற்றிப்போய் நெற்று எனப் பெயர் பெறுகின்றன. மாங்காய் மாம்பழம் ஆகும். பிறகு அழுகிபோகும். தேங்காய் தேம்பழம் ஆவதில்லை. முற்றிய தேங்காய் ஆகும். கனி என்ற ஒரு நிலை அதற்கு ஏற்படுவதில்லை. எனவே தெங்கம்பழம் என்று சொன்னாலும் அது தேங்காயைத்தான் குறிக்கும்.
கத்தரிக்காய் போன்றவை பழுத்துவிட்டால் பயன்படுவதில்லை. வெண்டைக்காய் போன்ற காய்கள் பழுப்பதில்லை. காயில் இருந்து நேராக காய்ந்து நெற்றாக மாறிவிடும் இயல்புடையவை. ஒருவேளை முருங்கைக்காய்கள் பழுத்துவிட்டால், மரத்தில் என்ன மாதிரி வண்ணத்தில் அவை தொங்கும் என்று கற்பனை செய்தால் மிக அழகான ஒரு காட்சி கண்ணுக்குள் தெரிகிறது.

இலவு காத்த கிளி போல என்னும் உவமைத் தொடர் இதனை மேலும் விளக்கும். இலவ மரத்தின் காய் அருமையான பச்சை நிறத்தில் இருக்கும். அதைப் பார்த்த கிளி, ஆஹா நல்ல காய் காய்த்திருக்கிறது. இது பழுக்கும் வரை காத்திருக்கலாம். பழுத்த பிறகுதான் இதை உண்ண முடியும். மிகவும் சுவையாக இருக்கும் என்று கருதி காத்திருந்து, பின்னர் அந்தக் காய் பழுக்காமலேயே நெற்றாகி மேலும் கடினப்பட்டுப் போகும் என்பதைக் கண்டபின்’ ஐயோ இத்தனை நாளும் காத்திருந்தது வீணாகிப் போச்சே என்று வருந்தும் ஏமாற்றம் நிகழும்.
சமையலுக்கு உதவும் பழம், காய் விற்கும் கடையிலும், தின்பதற்குப் பயன்படும் காய் பழக்கடையிலும் கிடைக்கின்றன என்பது செய்தி. சமைத்து உண்ணப் பயன்படும் கிழங்கு வகைகள் மட்டும்தான் காய்கள் விற்கின்ற கடையில் கிடைக்கும்.

சரி.கறி என்னும் சொல் என்ன பொருளில் பயன்படுகிறது?. கறிக்கடை என்று சொன்னால் இறைச்சி விற்பனை செய்யும் கடை. ஆட்டு இறைச்சி, கோழி இறைச்சி போன்றவற்றை விற்பனை செய்யும் கடை. அதில் கூட கோழி இறைச்சி விற்பனையாகும் கடையைக் கறிக்கடை என்று சொல்வதைவிட, சிக்கன் ஷாப் என்று ஆங்கிலத்தில் சொல்லி விடுகிறோம். மீன் விற்பனை செய்யும் கடையை மீன் கடை என்று சொல்லி விடுகிறோம். ஆக, கறிக்கடை என்பது ஆட்டு இறைச்சிக் கடையை மட்டுமே குறிப்பதாக இருக்கிறது. இன்று நான் கோவிலுக்குள் வரமாட்டேன் வீட்டில் மதியம் கறிக் குழம்பு என்று சொன்னால் அவன் மாமிசம் சாப்பிட்டிருக்கிறான் என்று பொருள்.
தமிழ் இலக்கியங்களில் மாமிசம், கறி, இறைச்சி எனும் சொற்கள் இல்லை. பொதுவாக ஊன் எனும் சொல்லே பயன்படுகிறது. ஆட்டுக்கறி கோழிக்கறி என்று குறிப்பிடுகிறோம். கறி என்னும் சொல் உடலில் உள்ள ஊன் அதாவது தசை நாம் சொல்வது போல் சதை என்பதைக் குறிக்கிறதா?. ஆட்டின் உடலில் உள்ள ஊன்தான் ஆட்டுக்கறியா? அல்லது ஆட்டின் ஊனை சமைத்தபின் அதை ஆட்டுக்கறி என்று சொல்ல வேண்டுமா?

சங்க இலக்கியங்களில் கறி எனும் சொல் பல்வேறு இடங்களில் காணப்படுகிறது. ஆனால் அச்சொல் விலங்குகளின் அல்லது மனிதர்களின் உடல் தசை அதாவது மாமிசம் என்பதையோ அல்லது விலங்குகளைக் கொன்று சமைத்த உணவு வகைகளையோ குறிப்பிடவில்லை. மாறாக ஊன் என்னும் சொல்லே அப் பொருட்களில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது… பழமொழியில் கறி என்பது சுரைக்காய் கொண்டு சமைக்கப்படும் உணவைக் குறிக்கிறது அல்லவா?
புலால் மறுத்தல் என்னும் அதிகாரத்தில் வள்ளுவரும் கறி மாமிசம் இறைச்சி என்னும் சொற்களைப் பயன்படுத்தவில்லை… புலால் என்னும் சொல் கூட ஒரு குறளிலும் வரவில்லை.
மாறாக ஊன் என்னும் சொல்லை மட்டுமே அப்பொருளில் பயன்படுத்தியுள்ளார்..
ஒரு பிரிவினர் காய்கறி என்று சொல்வதை விட சமையலுக்கு உதவும் காய்களைக் கறிகாய்… என்று சொல்வதுண்டு.. எனவே காய்கறி எனும் சொல் கறிக்கு உதவும் காய்கள்..
காய்கனி என்று சொல்வதும் எழுதுவதும் காய்கறிக் கடைக்குப் பொருந்தாது.
இன்னும் தெளிவாக விளங்கிக் கொள்வதற்காக சங்க இலக்கிய வரிகள் கீழே தரப்பட்டிருக்கின்றன.

‘புகழ்பட பண்ணிய பேர் ஊன்சோறும்’
என்னும் வரி பட்டினப்பாலையில். உள்ளது.
(ஊன்…………இறைச்சி)

‘ஆடு உற்ற ஊன் சோறு’

மதுரைக்காஞ்சியில் உள்ள இவ்வரி ஆட்டிறைச்சியோடு கலந்த சோற்றைக் குறிக்கிறது

அதே நேரத்தில் கறி எனும் சொல்லும் சங்க இலக்கியத்தில் ஏராளமான இடங்களில் காணப்படுகின்றது.
‘பொன்னொடு வந்து கறியொடு பெயரும் ‘..அகநானூறு

‘கறி வளர் அடுக்கத்து மலர்ந்த காந்தள்’ புறநானூறு

‘இஞ்சி மஞ்சள் பைங்கறி பிறவும்’
மதுரைக்காஞ்சி

-தமிழ் முத்துமணி

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.