சாத்தான்குளம் வியாபாரிகள் கொலையில் மேலும் 4 பேரிடம் சிபிஐ விசாரணை
1 min read
27.8.2020
CBI probes 4 more Sathankulam tradersசாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் ஊரடங்கை மீறி கடை நடத்தியதாக போலீசார் அழைத்துச்சென்று தாக்கி சிறையில் அடைத்தனர். அங்கு இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதுதொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரித்து தந்தை, மகன் உயிரிழந்ததை கொலை வழக்காக மாற்றி சாத்தான்குளம் முன்னாள் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐக்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 10 பேரை கைது செய்தனர்.
இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டதையடுத்து டெல்லி சிபிஐ அதிகாரிகள் விசாரணையை தொடங்கினர். அவர்கள் விசாரித்து வந்த நிலையில் கொரோனா தொற்றால் விசாரணையில் தொய்வு ஏற்பட்டது. இவ்வழக்கில் கைதான எஸ்.எஸ்.ஐ. பால்துரை கொரோனாவால் உயிரிழந்தார்.
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற கிளை விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய சிபிஐக்கு உத்தரவிட்டது. இதையடுத்து ஆக.1ம்தேதி சிபிஐ அதிகாரிகள் பென்னிக்ஸ் நண்பர்களிடம் விசாரித்தனர்.
தொடர்ந்து சிபிஐ, மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த அறிக்கையில் ஜெயராஜ் உடலில் 17 இடங்களில் காயங்களும், பென்னிக்ஸ் உடலில் 13 இடங்களில் காயங்களும் இருந்ததாக தெரிவித்திருந்தது.
இந்நிலையில் நேற்று சிபிஐ அதிகாரிகள் 4பேர் மதியம் 2.30 மணிக்கு சாத்தான்குளம் வந்தனர். அவர்கள் ஜெயராஜ், பென்னிக்ஸ் கடை அருகிலுள்ள எலக்ட்ரானிக்ஸ் கடையில் வேலை பார்த்த அபிஸ்ரகுமான், ஆட்டோ டிரைவர் பேச்சிப்பாண்டி ஆகியோரிடம் விசாரித்தனர்.
தொடர்ந்து போலீஸ் நண்பர்கள் குழுவைச் சேர்ந்த அமுதுண்ணாக்குடி சுந்தரேசன், செட்டிக்குளம் சிவா ஆகியோரைஅழைத்து, குற்றம் சாட்டப்பட்ட போலீசார் நடவடிக்கை குறித்தும், செயல்பாடுகள் குறித்தும் விசாரித்தனர். சுமார் ஒன்றரை மணி நேர விசாரணைக்கு பின்னர் அவர்கள் புறப்பட்டு சென்றனர்.